4
கனடாவில் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீது தனக்கு பூரண நம்பிக்கை உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
யாழ். வம்சாவளியைச் சேர்ந்த (முன்னாள் எம்.பி வி.ஆனந்தசங்கரியின் மகன்) ஹரி ஆனந்தசங்கரி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு கனடாவில் குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
முன்னாள் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமாருக்கு கனடா குடியுரிமை வழங்குவதை ஆதரித்து, 2016ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு இரு கடிதங்களை ஹரி ஆனந்தசங்கரி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அப்போது அவர் கனடா பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், செந்தூரன் செல்வகுமாருக்கு விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பல சந்தர்ப்பங்களில் அவரது குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், ஹரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர் மீது தற்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி, பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், அவர் தனது அமைச்சர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக கனடா பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, ஹரி ஆனந்தசங்கரி மீது தனக்கு பூரண நம்பிக்கை உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி : கனடா அமைச்சரவையில் மாற்றம்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி
இதேவேளை, குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கயின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், குறிப்பிட்ட விவரங்களை வழங்குவது பொருத்தமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியை ஹரி ஆனந்தசங்கரி ஏற்றுக்கொண்டதிலிருந்து இதுபோன்ற கோரிக்கைக் கடிதங்களை ஒருபோதும் சமர்ப்பிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குழந்தை கனடாவில் இருக்கும் நிலையில், நபரொருவரின் குடும்பம் பிரிவதைத் தடுக்கும் நோக்கில் வௌியிடப்பட்ட தனது கோரிக்கையாது அசாதாரணமானது அல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.