• Thu. Jul 10th, 2025

24×7 Live News

Apdin News

கன்னக்குழி | சிறுகதை | ஜெயநதி

Byadmin

Jul 10, 2025


மூன்று தினங்களுக்குப் பிறகு இன்றுதான் இந்த தொழில்முறை அலைபேசி எண்ணை ஆன் செய்தாள் ரதி. பர்சனலாக ஒரு எண் வைத்திருக்கிறாள். அது அவளுக்கும் அவளுடைய அம்மா விசாலிக்கும் மட்டுமானது. கொஞ்ச நாட்களாகத்தான் அம்மாவுடன் பேசுகிறாள்.

அதுவும் அவளிடம் வளருகிற தன் குழந்தையின் பொருட்டு… தானிழைத்த பெரிய தவறுக்காக ஒரு மன்னிப்பைக் கோரி நின்றவளை தாய் மன்னித்து வீட்டில் சேர்த்திருக்கலாம்.

ரதியும் படிப்பை தொடர்ந்திருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. தொலைபேசி எண்ணை ஆன் செய்ததும் தொடர்ச்சியாய் தவறின அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்து விழுந்தவண்ணமிருக்கிறது. வந்தவைகளில் மஞ்சுவின் குறுஞ்செய்திதான் அதிகம். மஞ்சுநாதனை அழைத்தாள். ‘”என்ன?” என்றாள்.

“எனக்குத் தெரியும் ரதி. மூனு   நாளைக்கு தொந்திரவு பண்ணக் கூடாதுன்னு.. ராஜ்மதன்னு புதுசு. நீதான் வேணும்னு காத்திட்டிருக்கான். இன்னைக்கு முடியுமா?” “ம்ஹூம், முடியாதுப்பா…!” என்றாள் “அப்ப நாளைக்கு.?…. “ம்..” அந்தப் பக்கம் அவன் இளிப்பது தெரிந்தது.

காரைக் கிளப்பினாள். கண்ணாடியில்       முகம் பார்த்தாள். சாயமில்லாத உதடு வெளிறி இருந்தது. ரெடிமேட் மூக்குத்தி முகத்தின் வாட்டத்தை மறைத்து மின்னியது. குதிரைவால் பின்னலை வளைத்து கொண்டையாக மாற்றியிருந்தாள்.

இளமையின் மீது விழுந்த நகக்கீறல்களாய் நரை அங்கொன்றும் இங்கொன்றுமாய். இன்னும் மெலிதான இரத்தப் புள்ளிகள் நாப்கினை நனைத்துக் கொண்டிருந்தது. நாளைக்கு சரியாகிவிடும். அப்புறம் கனஜோராய் தொழில் ஆரம்பித்து விடும். விடுபட்ட நாட்களுக்கும் சேர்த்து நுகர்வதும், கசங்குவதும், கசப்பதுமான இடிபாடுகளிடையே நொறுங்கிவிடாது நகர்ந்து வருவது பெரும்பாடு.

ஏதாவது ஒரு முகம் ஏதாவது ஒரு தருணம் அழுவாச்சிக் காட்டி ஆட்டத்தைக் கலைக்கப் பார்க்கும். ஆனால், சென்டிமெண்ட்டெல்லாம் தொழில் தர்மமில்லையே! காரிலிருந்து இறங்கி தள்ளாடி நடந்தாள். உலகத்தை எத்தி எத்தி பின்தள்ளி முன் நகர்கிற இந்த தள்ளாட்டம் அவளுக்கு சுகமோ சுகம்.. வீட்டினுள் நுழைந்து கதவடைத்தாள்.

செருப்பைக் கழற்றியதும் அவளுக்காக காத்திருந்த பூனைக்குட்டி மெத்தென்று உரசி கால்களை நக்கியது. எங்கிருந்தாலும் எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கு வந்து விடுவது அவனுக்காகத்தான்..

“ச்சிலியோப்பா”… சீட்டா, லியோ, பேன்தர் மூன்றையும் கலந்து வைத்த பெயர்…அவள்பாட்டிலைத் திறக்கிற கண்ணாடி கோப்பைகள் உரசுகிற சத்தம் கேட்டாலே போதும் எங்கிருந்தாலும் ஆஜராகி விடும்.. அதற்கு மதுவை நக்குகிற பழக்கம்… அவளுடன் கட்டிலில் மல்லாந்து விடும்.

அவளுக்கு மனசு சுணங்கியிருக்கும்போது அதற்கு எப்படியோ தெரிந்து விடும். அவளை விட்டு விலகாது உரசிக்கொண்டு கூடவேஇருக்கும்… “குட்நைட்…ச்சிலியோப்பா”…..என்றாள். வாயிலிருந்து குழறலாய் பனிப்புகை கிளம்பியது.

ஜெர்மனியின் பனிச் சூழ்ந்த மரப்பலகை வீட்டின் படுக்கையறை ஹீட்டரில் கதகதப்பாயிருந்தது. இந்த கசிகிற மெல்லிய வெளிச்சத்தில் மேற்கூரையை வெறித்தபடி படுத்திருப்பது நன்றாய்த்தானிருக்கிறது. சில மெழுகுவர்த்திகள் நின்று எரிகிறது.

சீக்கிரத்தில் அணைவதில்லை. அதன் தடிப்பு குறைவதுமில்லை…. அரக்கு ஒழுக்கி ஒட்டிய கடிதத்தை முனை கிழியாமல் பிரிப்பதும், அதில் ஏதும் சுவாரஸ்யம் இருக்குமாவென படித்துப் பார்க்கையில் ஒரு மண்ணுமில்லை என கசக்கிப் போடுவதுமாய் வாழ்க்கை….!

“போங்கடா”…. நொறுங்கிவிடாது இவ்வளவு தூரம் வந்திருப்பதே விஷயம்தான்… கொஞ்சம் வீறல்… கொஞ்சம் விரிசல்… ஆனாலும் எதை ஊற்றினாலும் கசிய விடாத கண்ணாடிக் குவளை. இன்னும் மவுசு இருக்கிறது. போகிறவரை போகட்டுமே…. மறுநாள் விடுதியை அடைந்தபோது வாசலிலேயே மஞ்சு நின்றிருந்தான்.

வாயெல்லாம் பற்கள்.. சட்டைப்பை நல்ல கனத்திலிருந்தது. பெரியவருமானமாய் இருந்தால் மஞ்சு நேரிலேயே வந்துவிடுவான். இல்லையெனில் அலைபேசியிலேயே வியாபாரத்தை முடித்துவிடுவான். இன்று நல்ல வேட்டைதான்போல.. அறைக்கதவை தட்டிக்கொண்டு போனபோது, உள்ளே இருந்தவர் கதவோரம் இருந்த இருக்கையிலேயே அமரும்படி சைகை செய்துவிட்டு வீடியோ காலில் அசையாமல் “ம்” கொட்டிக் கொண்டிருந்தார்.

அப்படியென்றால் எதிரில் பேசிக்கொண்டிருப்பது அனேகமாய் மனைவியாய் இருக்கக்கூடும். இந்த ஆண்களுக்கு மனைவியிடம் நடிப்பதென்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி.. பேசி முடித்ததும் அருகில் வந்து அமரும்படி சைகைசெய்தார். “நேர்ல இன்னும் அழகாஇருக்கே…!” சிரித்தாள்.. “ஒகே…கே…நான் நிஜத்தை சொன்னேன்…!” அவரும் சிரித்தார்.

“ஏதோ இருக்கு உன்கிட்டே… புகைப்படத்தைப் பாத்தப்பவே கணிச்சேன்..

இன்னைக்கு ஊர்ஜிதமாயிடுச்சு.. உன்கிட்ட ஏதோ வசியம் இருக்கு…ஹா…ஹா…” “பெரிய மனுஷ தோரணையெல்லாம் படுக்கையில உதவாது.வா..வந்து இங்க உட்கார்” என்றபடி தொடர்ந்து, “ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா?” எனக் கேட்டார். “ம்.”.. “என்ன சொல்லட்டும்?” “ஷாம்ப்பெய்ன்.. சப்பாத்தி.. மட்டன் கசண்டி”…- என்றாள். “ஆஹா ஜோர்…எனக்கும் இது ரசிக்கும். முதல்ல சாப்பிட்டு சவகாசமா பேசிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்…” என்றார். ரசனைக்காரன் தான்.

இன்று எல்லாப் பசிக்கும் தீனி கிட்டலாம்.. “ரதி…ஏதாவது பேசேன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லேன்?” என்ன கன்றாவிடா இது… ஏதாவது கவிஞன் எழுத்தாளனிடம் வந்து சிக்கிக்கொண்டுவிட்டேனா என்ன?… வேலை முடிந்ததா அனுப்பி வைப்போமா என்றில்லாது, பைத்தியக்காரன் “அதுவந்து”.. அவரே பேசினார்..

“எனக்கும் அலுப்பாயிருக்கு… நிறைய பாத்தாச்சு.. இன்னைக்கு அமைதியா பிடிச்சத சாப்பிட்டுக்கிட்டு, பேசிகிட்டு, ரூமுக்குள்ளேயே கதகதப்பா இருக்கத் தோணுச்சு.

பாத்த போட்டோக்கள்ல நீதான் இதுக்கு சரியா வருவேன்னுபட்டுச்சு. அதுவும் இந்த சிரிச்சும் சிரிக்காம ஆரம்பிக்கிற போதே இடது கன்னத்தில் மட்டும் ஆழ விழுகிற கன்னக்குழி….” ஆழமாய் பார்த்தார்.

வெகுநேரம் ஓடிக்கொண்டிருக்கிறபோது மிகப் பிடித்த இடத்தைக் கடக்கையில் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவதைப்போல திரில்லாக இருந்தது ரதிக்கு.. வித்தியாசமானவனாய் இருக்கிறான். “ம்… என்ன கேட்டீர்கள்? சரியாக கவனிக்கவில்லை” என்றாள்.

“காதலைப் பற்றி உன் அபிப்ராயம் என்ன? நீ லவ் பண்ணியிருக்கையான்னு கேட்டேன்?” காதலன் இருந்தான். அவன்தான் காதலைச் சொல்லி படிப்பதிலிருந்து காதலுக்கு நகர்த்தி.. காதலிலிருந்து கர்ப்பத்திற்க்கு நகர்த்தி.. பின் கருக்கலைப்புக்கு நகர்த்தி.. ஆயிரம் சத்தியம் செய்து மறுபடியும் இன்னுமொரு கர்பத்திற்கு நகர்த்திவிட்டு ஒருநாள் அவனுக்கே அத்தனை சத்தியங்கள் சலித்திருக்கும் போல… ஓடிவிட்டான்.. திருட்டு ராஸ்கல்….இதுவரை எந்தத் தகவலுமில்லை.இவளும் தேடவில்லை..விட்டது சனியன் என்று.. இவனிடத்தில் எதற்கு இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்…

“அது வந்து… காவியக் காதல் பண்ற அளவுக்கு யோக்கியமானவனை இதுவரைக்கும் நான் பாக்கவுமில்ல. காவியக் காதலியா இருக்கிற யோக்கியதை எனக்குமில்ல… பத்தொன்பது வயசுலயே இந்த லைனுக்கு வந்துட்டேன்.

சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்ல.. அப்புறம் ஒரு கால்கேர்ள் கிட்ட காதலைப் பத்தி விசாரிக்கிறிங்கன்னா நீங்க சுவரஸ்யமான ஆள்தான்.. காதலைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?….” கூர்மையானாள். “எனக்கு இப்ப வயசு அறுபத்தி ரெண்டு.

இருபத்தி மூனு வயசுல ஒருத்திய பாத்தேன். ப்ரபை அவளுடைய பெயர். அவளாக வைத்துக் கொண்ட பெயர். தமிழ்நாட்ல ஒரு நூலக வாசல்ல… யாருக்கோ காத்திட்டிருந்தா..அப்பப்ப என்னைப் பாத்துசிரிச்சா.. கன்னக்குழிவிழ… எனக்கு முதல் பார்வையிலயே ரொம்ப பிடிச்சிருச்சு..போய்ப் பேச பயம்.. ஒரு கார் வரவும் கிளம்பிப்போயிட்டா.

மறுநாள் அதே நேரத்துக்கு அந்த நூலகத்துக்கு போய் ரொம்ப நேரம் காத்திருந்திட்டு ஏமாந்து திரும்பி வந்தேன். அவ கன்னக்குழி சிரிப்ப மறக்க முடியல.

சிரிச்சும் சிரிக்காம ஆரம்பிக்கிற போதே இடது கன்னத்தில் மட்டும் ஆழ குழி விழுகிற சிரிப்பு… மனசு எதுலயும் ஒட்டல. அதன்பிறகு எதேச்சையா ஒருநாள் ஒரு உணவகத்துல பார்த்தேன். முன்பைவிட இன்னும் அழகாயிருந்தாள். நான் அவளையே பார்த்துக்கிட்டிருக்கிறதை கவனிச்சு அவளே என்கிட்ட வந்து லேண்ட்லைன் எண்ணைத் தந்துவிட்டு மறைஞ்சுட்டா.

அந்த எண்ணுக்கு கூப்பிட்டபோது.. ரேட் இவ்வளவு என்று பேசினாள். எனக்கு முதலில் அதிர்ச்சியாய் இருந்தாலும் அவளை மறக்கமுடியாமல் திரிஞ்சேன். சில தினங்களுக்குப் பிறகு என் காதலைத் தாங்க முடியாமல் சொன்னபோது திக்குமுக்காடினாள்… குதூகலித்தாள். நிறைய பேசினோம். அவள் அதிபுத்திசாலி. கவிதையைப் பற்றி பேச ஆரம்பித்தால் ஜான்மில்டன் பற்றி பேசுவாள். ஷெல்லி பற்றி பேசுவாள்.

பாரதியைப் பற்றியும் பேசுவாள். வரலாறு, புரட்சி எதைப்பற்றியும் பரவலான அறிவிருந்தது அவளிடம். முக்கியமாய் பரதம்…. சுழன்றாடினாள்… என்னை ஸ்திரமாய் நம்பினாள். நம்பவைத்தேன்.

சில நாட்களில் என் அண்ணனுக்கும் பின் அம்மாவுக்கும் எல்லாமும் தெரிஞ்சு போனது.. அம்மா அடித்துக் கொண்டு அழுதாள். அரிவாள் மனையை கழுத்தில் அழுத்திக் கொண்டு அறுத்துக் கொள்ளப் போவதாய் மிரட்டினாள். வேற வழியில்லாம அவளை தவிர்த்தேன். பாவம் ப்ரபை.. ஆனால், அதிபுத்திசாலியல்லவா.. நான் கைவிட்டதை புரிந்து கொண்டாள். பின்னாளில் எனக்கு கல்யாணமும் முடிந்தது. சில மாதங்களுக்குப் பிறகு அவளை ஒரு ரெஸ்ட்ராண்ட்டில் பாத்தேன்.

ஒரு ஆணுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே என்னைப் பார்த்ததும் சிரித்தாள். என்னை மன்னித்துவிட்டதாய் காட்டிக் கொண்டாள்… குற்ற உணர்வுடன் நான் திரும்பி விடக் கூடாதென்கிற அக்கறையோடு கன்னக்குழி விழ சிரித்துக்கொண்டே கடந்து போனாள்.

மனதாலும் அவ்வளவு அழகானவளை அப்புறம் பார்க்க நேராததுதான் அவளோடு இணைந்திருந்து குறுகிய நாட்களை அற்புதமான கவிதை வரியாக மாற்றியிருந்தது வாழ்வு.. ஜிகினா காகிதத்தில் அச்சிடப்பட்ட அற்புதமான பழுப்புக் கவிதை .

ப்ரபை என்னை மன்னித்துவிட்டதை நான் உணர்ந்தேன். உணவகத்திலிருந்து வெளியே வந்த போது மிக மெல்லிய காற்றுக்கே அங்கிருந்த போகன்வில்லா மரம் காகிதப்பூக்களை என் மீது ரோஸ் நிற வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றி மொய்க்கச் செய்தது.

அவள் மன்னித்துவிட்டாள். தெருவோரப் பைத்தியக்காரி ஒருத்தி என் முகத்தில் ஆசையாய் தடவிய விரல்களை அழுக்கு உதட்டில் வைத்து முத்தினாள். சத்தியமாய் ப்ரபை என்னை மன்னித்துவிட்டதை உணர்ந்தேன்.

ஆனால், என்னிடமிருந்து இன்றுவரை எனக்கு மன்னிப்பே கிடைகக்கவில்லை… பிறகு மனம் நோகிற போதெல்லாம் அங்கிருந்து கிளம்பி இங்கே வந்துவிடுவேன்… இரண்டு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.

இன்று அவளை லைப்ரரியில் முதன்முதலில் பார்த்த தினம்.. அதைக்கொண்டாட அவளைப் போலவே ஒரு விலைமாதைத் தேடினேன்.

எனக்கு வந்த புகைப்படங்களிலேயே நீதான் பழைய இடதுக் கன்னக் குழியோடு புது சிரிப்பை சிரித்துக் கொண்டிருந்தாய்!”

– ஜெயநதி

நன்றி : வாசகசாலை.காம்

By admin