படக்குறிப்பு, கர்நாடகாவில் மலைக் குகையில் இருந்து மீட்கப்பட்ட நீனா குடினா
மலைக் குகையில் வசித்தபோது இயற்கையோடு ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாக, தனது மகள்களைக் கொல்வதற்காக அங்கு இருக்கவில்லை என்றும் கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு மலைக் குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் மீட்கப்பட்ட ரஷ்ய பெண் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி முகமைக்கு நீனா குடினா என்ற அந்தப் பெண் அளித்த பேட்டியில் தங்களைப் பற்றிப் பல தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறியிருக்கிறார்.
“நான் எனது மகள்களைக் காட்டில் சாவதற்காக அழைத்து வரவில்லை. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் நீர்வீழ்ச்சியில் நீந்தி மகிழ்ந்தனர். அங்கு தூங்குவதற்கு மிக வசதியான இடம் இருந்தது. களி மண்ணில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, ஓவியங்கள் வரைவது எனப் பல நல்ல பாடங்களைச் சொல்லிக் கொடுத்தேன்.
நாங்கள் நல்ல உணவைச் சாப்பிட்டோம். நான் சமையல் எரிவாயுவில் சமைத்தேன். அது நல்ல, சுவையான, ஆரோக்கியமான உணவு. எனக்குப் பித்துப் பிடித்து, என் குழந்தைகளுக்கு எதுவும் தரவில்லை என்பது உண்மையில்லை. எனது மகள்களுக்குச் சிறந்தவையே கிடைத்தன. அவர்கள் நன்கு உறங்கினர், அவர்கள் ஓவிய பாடங்களையும் எழுதப் படிக்கவும் கற்றுக் கொண்டனர். அவர்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கவில்லை. அது உண்மையில்லை,” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, தனது இரண்டு மகள்களுடன் மீட்கப்பட்ட நீனா குடினா மலைக்குகையில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததாக கூறுகிறார்
இயற்கையோடு ஒன்றி வாழ்வது ஆரோக்கியத்தை உறுதி செய்வதாகக் கூறிய நீனா குடினா 20 வெவ்வேறு நாடுகளில் காடுகளில் வசித்த காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இயற்கையோடு வசித்து இயற்கை தரும் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தாங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும் அவர் தமது பேட்டியில் கூறினார். “நாங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தோம். இன்று எங்களை மருத்துவர்களிடம் பரிசோதனைக்காக அவர்கள் அழைத்து வந்தனர். எனது மகள்கள் மருத்துவமனைக்கு வருவது இதுதான் முதல் முறை. அவர்கள் மிகவும் நலமாக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டதே இல்லை. சளி போன்ற சிறு தொந்தரவுகள் மட்டும்தான் ஏற்பட்டிருக்கும்,” எனக் குறிப்பிட்டார்.
“நாங்கள் இயற்கையிலேயே வசிக்க விரும்புகிறோம் என்பதுதான் இதற்குக் காரணம். அதுவொரு குகை, இது ஏதோ ஒரு பெரிய காடு போலவோ, எல்லோரிடம் இருந்தும் தொலைதூரத்தில் இருக்கிறோம் என்பது போலவோ, உணவு கிடைக்காது என்பது போன்றோ இல்லை. அது கிராமத்திற்கு வெகு அருகில் இருந்தது, அத்துடன் அது மிகவும் பெரிய, அழகான ஒரு குகை. கடல் தெரியும் வகையில் ஜன்னல் போன்ற ஓர் அமைப்புடன் இருந்தது,” என்றார் நீனா.
தாங்கள் அபாயகரமான இடத்தில் இருந்ததாகக் கூறப்படுவதையும் நீனா மறுத்தார்.
“அது அபயாகரமான இடமல்ல. சுற்றுலாப் பயணிகள் உள்பட யார் வேண்டுமானாலும் போகக்கூடிய இடம்தான். பாம்புகளைப் பொறுத்தவரை நாங்கள் ஒரு சில பாம்புகளைப் பார்த்தது உண்மைதான். ஆனால் கோகர்னாவில் வீட்டுக்குள், சமையலறை, கழிவறை உள்பட எல்லா இடங்களிலும் பாம்புகள் வந்த புகைப்படங்களைப் பார்க்கிறோம். இதுவும் அதைப் போன்றதுதான். நாங்கள் அவற்றைப் பார்த்தோம். அவை அதன் வழியில் செல்கின்றன. நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். யாருக்கும் ஆபத்தில்லை,” என்று விளக்கம் அளித்துள்ளார்.
படக்குறிப்பு, கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்ய பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தன்னுடைய விசா 2017ஆம் ஆண்டிலேயே காலாவதியாகிவிட்டதாகக் கூறப்படுவது குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
“எங்களிடம் நடப்பு விசா இல்லை. அது காலாவதியாகிவிட்டது. ஆனால் அது அண்மையில் காலவதியானது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு நாங்கள் நான்கு நாடுகளில் வசித்துவிட்டு இந்தியாவுக்கு வந்தோம். எனது பெரிய மகன் உயிரிழந்துவிட்டான், அது நடந்ததால் விசாவை புதுப்பிக்காமல் நான் கொஞ்சம் கூடுதலாக நாட்டில் இருந்துவிட்டேன். ஆனால் அவர்கள் கூறுவது போல் அத்தனை நாட்கள் அல்ல.”
ரஷ்யாவில் பிறந்திருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து வருவதாகக் கூறுகிறார் நீனா.
“ரஷ்யாவை விட்டு 15 ஆண்டுகளுக்கு முன்னர் பயணம் மேற்கொண்டேன். அதற்குப் பிறகு நான் கோஸ்டா ரிக்கா, மலேசியா, பாலி, தாய்லாந்து, நேபாளம், யுக்ரேன் எனப் பல நாடுகளுக்குப் பயணம் செய்தேன்.”
இயற்கையின் மீதுள்ள காதல்தான் காட்டில் வசிக்க வைப்பதாகவும் கூறுகிறார் அவர்.
“இது ஆன்மீகம் தொடர்பானது அல்ல. எங்களுக்கு இயற்கை பிடிக்கும், அது ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது, தரையில் வசிக்க முடிகிறது, உடலைத் தூய்மைப்படுத்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. இயற்கையோடு இருப்பது என்பது வீட்டில் வசிப்பதைப் போல் அல்ல.”
தொடர்ந்து இந்தியாவில் வசிக்க விருப்பிகிறாரா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
“எனக்கு உண்மையில் எந்த வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் எங்கள் விசா காலாவதியாகிவிட்டது. ஆனால் அது அண்மையில்தான் காலாவதியானது. எனது மகன் இறந்துவிட்டான். அவன் இறந்த பின்னர் நான் அதிகம் அழுதேன். அந்த நேரத்தில் நான் செய்யக்கூடியது ஏதும் இருக்கவில்லை,” என்றார் நீனா.
“எனது மகள்கள் மிகவும் வசதியாக இருந்தனர். நாங்கள் குகையில் இருந்த நாட்கள் முழுவதும் வீடியோக்கள் மற்றும் போட்டோ பதிவுகளாக இருக்கின்றன. நாங்கள் எப்படி சுவையான உணவைச் சமைத்தோம், என்ன சாப்பிட்டோம், அவர்களுக்கு நான் எடுத்த வகுப்பு, ஓவியம் மற்றும் களிமண் பொருட்கள் செய்தது என அனைத்துமே வீடியோவாக உள்ளது.”
நீனா, 2016 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 17 வரை வணிக விசாவில் இந்தியாவில் இருந்தார்.
விசா காலாவதியான பிறகு, கோவாவில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) அவருக்கு ஏப்ரல் 19, 2018 அன்று வெளியேறும் அனுமதியை வழங்கியது.
அதன் பிறகு, நீனா நேபாளத்திற்குச் சென்று, 2018 செப்டம்பர் 8 அன்று மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.
காவல்துறையினர் அவரை ஒரு பெண் நடத்தும் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரது இரு குழந்தைகளும் குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்.
பின்னர், நீனாவும் அவரது குழந்தைகளும் பெங்களூருவில் உள்ள வெளிநாட்டினருக்கான காவல் மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டனர்.