• Thu. Oct 22nd, 2026

24×7 Live News

Apdin News

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி கிரீஸில் ஆசிரியர்களும் மாணவர்களும் போராட்டம்

Byadmin

Oct 22, 2026


கல்வித்துறைக்கான அரச நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வகுப்பறை நெரிசலைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிரீஸில் சுமார் 10,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் ஏதென்ஸ் உள்ளிட்ட பல பிரதான நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, இலவசப் பொதுக் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது. அத்துடன், நாட்டில் தீவிரமடைந்து வரும் வாழ்க்கைச் செலவு உயர்வு, அதிகரித்துள்ள வீட்டு வாடகை மற்றும் எரிசக்திக் கட்டணங்கள் காரணமாகப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளும் இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.

இதேவேளை, ஊதிய உயர்வு மற்றும் ஊழியர் பற்றாக்குறைக்குத் தீர்வு கோரி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் சிலர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக, அரச பாடசாலைகள் மற்றும் அரச வைத்தியசாலைகளின் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

எனினும், மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அந்நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர் விடுதிகளை அமைப்பதற்கும், கல்விசார் வசதிகளைத் தரமுயர்த்துவதற்கும் 733 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான நிதியில் விஷேட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தி, அண்மைய நாட்களில் பிரான்ஸ் மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகளிலும் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin