பட மூலாதாரம், Screen Grab/Facebook
-
- மற்றும்
- எழுதியவர், பிபிசி சிங்கள சேவை
- பதவி,
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இந்தியா மற்றும் இலங்கையில், காட்டுப் பகுதிகளை ஊடுருவிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, சில நேரங்களில் மக்கள் காட்டு யானைகளை எதிர்கொள்வதுண்டு. அத்தகைய சாலைகளினூடாக அதிகமாகப் பயணிக்கும் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு இத்தகைய அனுபவங்கள் புதிதல்ல.
ஆனால், இலங்கையில் வாகனங்களில் செல்பவர்கள் யானைகளைத் தவிர்ப்பதற்காக அவற்றுக்கு உணவு வழங்குவது மற்றும் இரு நாடுகளிலுமே யானைகளுக்கு மிக அருகிலேயே வாகனத்தை ஓட்டிச் செல்வது, அருகே நிறுத்தி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுப்பது போன்ற நடவடிக்கைகளை சமூக ஊடகங்களில் பரவி வரும் சில காணொளிகளில் காண முடிகிறது.
மேலும் சில காட்சிகளில் உணவு தேடி காட்டு யானைகள் வாகனங்களை அணுகி, தும்பிக்கையை வாகனங்களின் உள்ளே நீட்டித் துழாவுவது, சில நேரங்களில் வாகனங்களைத் தள்ளவோ, கவிழ்க்கவோ முயலும் காணொளிகளையும் பார்க்க முடிகிறது.
இதுபோன்ற சம்பவங்கள், குறிப்பாக இலங்கையின் கட்டராகமம்-புத்தளை சாலை, மின்னெரியா தேசிய பூங்கா அருகிலுள்ள சாலை, ஹபரணை-திருகோணமலை சாலை ஆகிய பகுதிகளில் அடிக்கடி பதிவாவதாக அந்நாட்டின் காட்டுயிர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் முதுமலை, பந்திப்பூர், தருமபுரி ஆகிய பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி பதிவாவதாக காட்டுயிர் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், காட்டு சாலையில் பாதைகளை மறித்திருக்கும் யானைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஓட்டுநர்களும் பயணிகளும் ‘என்ன செய்ய வேண்டும்? தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஏதுவாக எவ்வாறு நடந்துகொள்வது?’ என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
இலங்கை காட்டுயிர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதில் எப்படிச் செயல்படுவது என்பது தொடர்பாகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளனர்.
கூடுதலாக, இதுபோன்ற யானை – மனித சந்திப்புகள் நிகழும்போது, “அந்தப் பேருயிர்களின் உணர்ச்சித் தூண்டுதலுக்கு வித்திட்டு மோதலாக மாறாமல் தவிர்ப்பதே மிகவும் முக்கியமானது” என்று கூறுகிறார் கே.வி.ஆர்.கே. திருநாரணன்.
யானைகள் கணக்கெடுப்பு, யானை வழித்தடங்கள் கண்காணிப்பு ஆகிய களப் பணிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட தி நேச்சர் அறக்கட்டளையின் தோற்றுநரும் காட்டுயிர் நிபுணருமான இவர், இந்தத் தருணங்களை மனிதர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் சில பரிந்துரைகளை பிபிசி தமிழிடம் பேசியபோது வழங்கினார்.
பட மூலாதாரம், Getty Images
1. வாகனம், யானை இடையே பாதுகாப்பான தொலைவு அவசியம்
காடுகளினூடாக சாலைகளில் இருசக்கரம், நான்கு சக்கரம் என எதுவாக இருப்பினும், வாகனங்களை ஓட்டிச் செல்கையில் திடீரென சாலை நடுவே அல்லது தாங்கள் செல்ல வேண்டிய பாதையை ஒட்டி காட்டு யானையை இருப்பதைப் பார்த்தால், முதன்மையாக அவற்றுக்கு மிக அருகில் செல்லாமல், சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட வேண்டும்.
வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, காட்டு யானைகள் அந்தச் சாலையைக் கடப்பதற்காகவோ அல்லது சாலையோரங்களில் மேய்வதற்காகவோ அந்தச் சாலைக்கு வந்திருக்கலாம்.
எனவே, ஓட்டுநர்கள் அதன் இயல்பான நடத்தைகள் மற்றும் நகர்வுகளில் இடையூறு ஏற்படுத்தாமல் நிதானமாக, பாதுகாப்பான தொலைவில் காத்திருக்க வேண்டும். அவ்வாறு பொறுமையாகக் காத்திருந்து, அவை சாலையில் இருந்து விலகிச் சென்ற பிறகே தங்கள் பயணத்தை அவர்கள் தொடர வேண்டும்.
காட்டுயிர்கள் அடிக்கடி சாலையைக் கடக்கும் பகுதிகளில் வனத்துறையால் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆகையால், அப்படியான பகுதிகளுக்குள் நுழையும்போது ஓட்டுநர்கள் முன்கூட்டிய பாதுகாப்பு உணர்வுடன், யானைகளை எதிர்கொள்ளக் கூடிய சூழல் வந்தால் பதற்றமடையாமல் நிதானித்து, துரிதமாகச் செயல்பட ஏதுவான விழிப்புணர்வுடன், நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகளைப் பின்பற்றி, சுற்றுப்புறங்களை முன்னெச்சரிகையுடன் அவதானித்தவாறு செல்ல வேண்டும்,” என வலியுறுத்துகிறார் திருநாரணன்.
யானைகள் கணக்கெடுப்பு, யானை வழித்தடக் கண்காணிப்பு போன்ற தனது களப் பணி அனுபவங்கள் மூலம் “அவை தத்தமது போக்கில் இயல்பாக நகர்வதற்குத் தேவையான இடைவெளியை வழங்குவது அவசியம்” என்று வலியுறுத்திய அவர், சாலைகளில் அவற்றை எதிர்கொள்ளும்போது செய்ய வேண்டிய முதல்கட்டப் பணி என்றார்.
பட மூலாதாரம், Getty Images
2. யானையை முந்திச் செல்ல முயல வேண்டாம்
நிபுணர்களின் எச்சரிக்கைப்படி, காட்டுப் பாதையின் நடுவே ஒரு காட்டு யானையோ, ஒன்றுக்கும் மேற்பட்டவை அடங்கிய மந்தையோ நின்றிருந்தால், பக்கவாட்டில் வளைந்து வேகமாக அவற்றை முந்திச் செல்ல முயலக்க்கூடாது.
சில நேரங்களில் அவை பாதையை ஆக்கிரமித்து நிற்கக்கூடும் என்பதால் முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்படலாம். அத்தகைய சூழலை தானும் எதிர்கொண்டுள்ளதாகக் கூறிய திருநாரணன், “அப்படியான சந்தர்ப்பங்களில், காட்டுயிர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் பொறுமையாகவும், அமைதியாகவும் காத்திருந்து, அவை அங்கிருந்து அகலும் வரை நிதானித்து, பிறகு பயணத்தைத் தொடர வேண்டும்,” என்றும் விளக்கினார்.
குறிப்பாக, “யானைகளை நெருங்கும்போது ஏற்படக் கூடிய அபாயத்தை உணராமல் அவற்றுக்கு நெருக்கமாக வாகனத்தை ஓட்டிக் கடந்து செல்ல முயல்வதும், அவற்றை விரட்ட முயலாமல் இருக்க வேண்டியதும் அவசியம்” என அறிவுறுத்தினார் திருநாரணன்.
3. யானைகளைத் தொந்தரவு செய்யும் செயல்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
நிபுணர்கள் கூற்றுப்படி, எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சாலையில் காட்டு யானைகளை எதிர்கொண்டால், அவற்றுக்கு அருகில் சென்று வாகனத்தை நிறுத்தவே கூடாது, பாதுகாப்பான தொலைவைத் தக்கவைத்தே அவற்றை அவதானிக்க வேண்டும். அதேபோல, எந்தச் சூழலிலும் வாகனத்தில் இருந்து வெளியே இறங்கக் கூடாது. இயன்றவரை, வாகனத்தைப் பின்னோக்கி இயக்கி, உங்களுக்கும் யானைக்கும் இடையிலான தொலைவை பெரிதாக்குவது நல்லது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், புகைப்படங்கள் அல்லது காணொளிகள் எடுப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்குவதைவிட, மக்கள் தங்களது பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மக்கள் பெரும்பாலான தருணங்களில், காட்டு விலங்குகளின் கணிக்க முடியாத நடத்தையியல் மாற்றங்களைப் பற்றிய எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவதில்லை என்று தனது கவலையை வெளிப்படுத்தினார் திருநாரணன்.
பட மூலாதாரம், Getty Images
அதுமட்டுமின்றி, “புகைப்படங்கள், காணொளிகள் எடுப்பதற்காக வாகனத்தை விட்டு வெளியேறுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்” என்றதோடு, “காட்டு யானை பார்ப்பதற்கு சாந்தமாகத் தோன்றினாலும், அவற்றின் நடத்தை எப்போது, எப்படி மாறும் என்பதை முன்கணிக்கவே முடியாது. மேலும் அந்த நடத்தையியல் மாற்றம் ஒரு சில விநாடிகளிலேயேகூட நிகழலாம்,” என்று எச்சரித்தார்.
அதேநேரம், ஹாரனை ஒலிக்கவிடுவது, வாகனத்தின் ஹெட்லைட்களை மீண்டும் மீண்டும் மின்ன விடுவது போன்ற செயல்கள் இயல்பு நிலையில் இருக்கும் யானைகளைப் பாதிக்கக்கூடும். இதுபோன்ற செயல்கள் யானைக்கு அச்சமூட்டி, பதற்றமடையச் செய்து விடுவதால், அவ்வாறெல்லாம் செய்பவர்கள் இருக்கும் வாகனத்தை நோக்கிக் கோபமாக எதிர்வினையாற்றும் ஆபத்து உள்ளது.
எனவே, தேவையற்ற சத்தம், விளக்குகள் அல்லது யானையைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து நகரச் செய்யும் எந்த முயற்சியையும் ஓட்டுநர்கள் தவிர்க்க வேண்டும். காடு அல்லது யானைகள் வாழும் பகுதிகளில் பயணிக்கையில், மனிதர்கள்தான் விலங்குகளின் வாழ்விடத்திற்குள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் திருநாரணன்.
“அது அவற்றின் இடம். நாம்தான் அங்கே செல்கிறோம்,” என்று சுட்டிக்காட்டிய அவர், மோதலுக்கோ அல்லது பதற்றமான சூழ்நிலைக்கோ வழிவகுக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு மனிதர்களிடமே இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
தனது களப் பணிகளில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள், எந்தத் தொந்தரவுமின்றி அவற்றின் போக்கில் விடப்பட்டால், யானைகள் கிட்டத்தட்ட பெரும்பாலும் மனிதர்கள் மற்றும் வாகனங்களை எவ்வித பிரச்னையுமின்றிக் கடந்து சென்றுவிடுகின்றன.
மக்கள் வேண்டுமென்றே யானைகளுக்கு அருகில் செல்வது, அவற்றின் நடத்தைகளைப் பாதிக்கும், எதிர்வினையாற்றத் தூண்டும் செயல்களில் ஈடுபடும்போதுதான் ஆபத்து அதிகரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அதாவது, யானைகள் விஷயத்தில், ஆரம்பத்தில் உற்சாகமூட்டுவதாகத் தோன்றும் ஒரு நிகழ்வு, அடுத்த சில விநாடிகளிலேயே ஆபத்தான சூழலாக மாறிவிடும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
பட மூலாதாரம், Getty Images
4. உங்கள் வாகனத்தை நோக்கி யானை ஆவேசமாக வந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஒரு காட்டு யானை உங்கள் வாகனத்தை நோக்கியவாறு ஆவேசமாக நகரத் தொடங்கினால், அதன் திசையில் முன்னோக்கி ஓட்டுவதற்குப் பதிலாக வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்த வேண்டும் என்று இலங்கையைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் பிபிசி சிங்கள சேவையிடம் அறிவுறுத்தினர்.
அவர்களின் அறிவுறுத்தல்படி, இப்படியான சூழ்நிலைகளில் வண்டியை விட்டுக் கீழே இறங்குவது மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். “இந்த மாதிரியான சூழலில் யானைக்கும் தமக்கும் இடையே போதிய தொலைவைப் பேணுவது மிகவும் அவசியம். அப்போதுதான், விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தவல்ல மோதல் ஏதும் நிகழாமல், சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படத் தேவையான இடவசதி கிடைக்கும்.”
தி நேச்சர் அறக்கட்டளையின் தோற்றுநரான திருநாரணன், தனது கள அனுபவத்தின் அடிப்படையில், “ஒரு நபர் யானையிடம் இருந்து எவ்வளவு நெருக்கமான தூரம் வரை பாதுகாப்பாகச் செல்ல முடியும் என்ற அபாயகரமான பரிசோதனைகளைச் செய்வதைவிட பின்வாங்குவதே சிறந்தது” என்று வலியுறுத்தினார்.
மேலும், ஒரு முறை காட்டினூடாகச் செல்லும் சாலையில் பயணித்தபோது, ஒரு யானை மந்தை பல மணிநேரம் பாதையை ஆக்கிரமித்து இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார். அப்போது முன்கணிப்புகள் அடிப்படையில் செயல்படுவதைவிடத் தாங்கள் அந்தப் பகுதியைவிட்டுப் பின்வாங்கி, தங்களது திட்டங்களை மாற்றிக் கொள்வதே பாதுகாப்பானது என்பதைக் கருத்தில் கொண்டு முடிவெடுத்ததாகக் கூறினார்.
“இத்தகைய முடிவுகள் சிரமத்தையோ தாமதத்தையோ ஏற்படுத்தக் கூடும். ஆனால் மாற்று வழியைத் தேர்வு செய்யாமல் ஆபத்தான சூழலில் மேலும் முன்னேற முயல்வது, மனிதர்களையும் யானைகளையும் தேவையற்ற ஆபத்துக்கு உள்ளாக்கக்கூடும்” என்று அவர் எச்சரித்தார்.
பட மூலாதாரம், Getty Images
5. யானைகளுக்கு உணவு வழங்கக்கூடாது
காட்டு யானைகளுக்கு உணவு வழங்குவதன் மூலம், வாகனங்களில் பயணிப்போர் தங்களைத் தாங்களே ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கவைத்துக் கொள்வதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
“சிலர், யானை தனக்குக் கொடுக்கப்படும் உணவை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து சென்றுவிடுமென்ற நம்பிக்கையில் உணவு வழங்கலாம். ஆனால், உணவு வழங்குவது யானையுடனான சந்திப்பில் இருந்து பாதுகாப்பாகத் தப்ப உதவும் வழிமுறையல்ல.”
ஒரு யானை தனக்குக் கொடுக்கப்படும் உணவைப் பெற்றதும், மேலதிக உணவு எதிர்பார்த்து வாகனத்தை அணுகக்கூடும். அப்போது, “ஓட்டுநர்களும் பயணிகளும் பதற்றமடையலாம். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரிப்பதோடு, யானை எதிர்பாராத நடத்தைகளை வெளிப்படுத்துவதற்கான தூண்டுதலாக அது அமையவும் வாய்ப்புள்ளது.”
ஆகையால்தான், “எந்தச் சூழலிலும் காட்டு யானைகளுக்கோ அல்லது பிற காட்டுயிர்களுக்கோ உணவு வழங்கக்கூடாது” என்பதை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
அதோடு, அடிக்கடி உணவு வழங்குவது, யானைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உதாரணமாக, காட்டினூடாகச் செல்லும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது பல்வேறு நபர்கள் காட்டு யானைகள் மற்றும் பிற காட்டுயிர்களுக்கு உணவு வழங்கி வந்ததால், சில யானைகள் உணவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வாகனங்களை நிறுத்துவதற்குப் பழகிவிட்டதாக காட்டுயிர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மனிதர்களின் நடத்தை, யானைகள் மக்களிடம் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதிக் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவோர் உதாரணம் என்கிறார் திருநாரணன்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா, இலங்கையில் இது தொடர்பாக இருக்கும் சட்டங்கள் என்ன?
காட்டு யானைகளுக்கு உணவு வழங்குவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று இலங்கையின் காட்டுயிர் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
அங்கு சாலையோரங்களில் அடிக்கடி உணவு வழங்கப்பட்டதால் சில யானைகள் உணவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வாகங்களை நிறுத்தப் பழகிவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆகையால், அந்நாட்டிலுள்ள காட்டுயிர் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு அல்லது பிற பொருட்களைப் பயன்படுத்தி காட்டுயிர்களை ஈர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இது போலவே, இந்தியாவிலும் 1972ஆம் ஆண்டின் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காட்டு யானைகளுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய யானைகள் அந்தச் சட்டத்தில் அட்டவணை ஒன்றில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும், காட்டுயிர்களுக்கு இரை வைத்துக் கவர்வது, அவற்றைத் தூண்டிவிடுவது, தொந்தரவு செய்வது போன்ற செயல்கள், குறிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் உள்ளே மேற்கொள்ளப்பட்டால், அது சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வித்திடக்கூடும்.
தமிழ்நாட்டிலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் விதிமுறைகள், காட்டுயிர்களுக்கு உணவு வழங்குவது, அவற்றைத் தூண்டி விடக்கூடிய செயல்களில் ஈடுபடுவது, துரத்துவது ஆகியவற்றைத் தெளிவாகத் தடை செய்கின்றன. மேலும், யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வாகனங்களில் இருந்து வெளியே இறங்க வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, இரு நாடுகளிலும் யானைகளுக்கு உணவு வழங்குவதோ அல்லது வேண்டுமென்றே அவற்றை அணுகுவதோ ஆபத்தானது மட்டுமல்லாமல், அத்தகைய செயல்கள் காட்டுயிர் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான விதிமுறைகளின் கீழ் சட்ட நடவடிக்கைக்கும் ஆளாகக்கூடும்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு