படக்குறிப்பு, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, இத்தகைய சூழல்கள் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடும் எனக் கண்டறிந்துள்ளது.கட்டுரை தகவல்
கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக, மனித இனம் ஒரு குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அந்த வளர்ச்சி முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதற்கு ஒரு சாத்தியமான காரணமாக காலநிலை மாற்றம் குறிப்பிடப்படுகிறது.
வெப்ப அலைகள் மற்றும் ஈரப்பதம் அதிகரிப்பது உள்ளிட்ட தீவிர வானிலை மாற்றங்களுக்கு புவி வெப்பமயமாதல் வழிவகுக்கிறது என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, இத்தகைய சூழல்கள் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடும் எனக் கண்டறிந்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதியான தெற்காசியாவில், ஐந்து வயதிற்கு உட்பட்ட 2,00,000 குழந்தைகளிடம் இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டது. கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு மூன்று மாதங்களிலும், 35 டிகிரி செல்சியஸுக்கு மேலான வெப்பநிலை உயர்வு மற்றும் அதிக ஈரப்பதத்தை கருவில் இருக்கும்போதே எதிர்கொண்ட குழந்தைகள், அவர்களின் வயதுக்கு எதிர்பார்க்கப்படும் உயரத்தைவிட 13% குறைவாக இருப்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
பிறப்பு முதல் ஐந்து வயது வரையிலான காலகட்டத்தில் உயரத்தில் ஏற்படும் வளர்ச்சி, ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.
மரபியல் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் போன்ற பிற காரணிகளால் நமது உயரம் பெருமளவில் தீர்மானிக்கப்பட்டாலும், “காலநிலை மாற்றத்தின் கீழ் அதிகரித்து வரும் வெப்பமும் ஈரப்பதமும் தெற்காசியாவில் ஐந்து வயது வரையிலான குழந்தைகளின் சராசரி உயரத்தைக் குறைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது” என முதன்மை ஆய்வாளர் கேட்டி மக்மஹோன் விளக்குகிறார்.
இதுகுறித்துப் பேசிய அவர், “உலகளாவிய சூழல் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது, ஆனால் வரவிருக்கும் காலங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் தழுவல் நடவடிக்கைகளைப் பொறுத்தே அது அமையும்” என்று கூறும் அவர், “ஏற்கெனவே அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கொண்ட பிற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் இதே போன்ற முடிவுகளை நாம் எதிர்பார்க்கலாம்” என்றார்.
உலக வங்கியின் வகைப்பாட்டின்படி, சுமார் 120 நாடுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பிரிவின் கீழ் வருகின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடந்த 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தின் பெனால்டி ஷூட்அவுட் தருணத்தில், 203 செ.மீ உயரமுள்ள டச்சு கால்பந்து வீரர் ஆண்ட்ரிஸ் நோப்பர்ட், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு முன்னால் நின்ற காட்சி இது.
மனித உயரத்தில் ஏற்படும் விளைவு
காலம் காலமாக மனிதர்கள் தங்கள் உயரத்தில் பெரும் மாறுபாடுகளைக் கண்டுள்ளனர் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடிச் சேகரிக்கும் நிலையில் இருந்து விவசாயத்திற்கு மாறியது போன்ற பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த காலங்களில், சராசரி உயரத்தில் ஆரம்பத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மிகச் சமீபத்தில், 2004ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஓஹையோ மாகாண பல்கலைக்கழகத்தின் பொருளாதார விரிவுரையாளர் பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்டெக்கல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வை வெளியிட்டார்.
அவர் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான வடக்கு ஐரோப்பாவின் புதைகுழிகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகளின் உயரம் குறித்த தரவுகளைக் கவனமாக ஆய்வு செய்தார். அந்தக் காலகட்டத்தில் சராசரி உயரம் ஏறியும் இறங்கியும் இருந்ததைக் கண்டறிந்த அவர், 17ஆம் நூற்றாண்டில் அது மிகக் குறைந்த அளவை எட்டியதையும் கண்டறிந்தார்.
அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பா பல மாற்றங்களை எதிர்கொண்டது. நகரங்கள் வளர்ந்ததால் தொற்றுநோய்கள் அதிகமாகப் பரவின. வேளாண் உற்பத்தியில் மாற்றங்கள் ஏற்பட்டன. மேலும், 16ஆம் நூற்றாண்டில் இருந்து 19ஆம் நூற்றாண்டு வரை நீடித்த ‘சிறிய பனிக்காலம்’ எனப்படும் குளிர்ச்சி காலமும் ஏற்பட்டது.
“வடக்கு ஐரோப்பிய ஆண்கள் 1700கள் வாக்கில் சராசரியாக 2.5 அங்குல (6.4 செ.மீ) உயரத்தை இழந்திருந்தனர். இந்த இழப்பு 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வரை முழுமையாக மீட்கப்படவில்லை” என்று பேராசிரியர் ஸ்டெக்கல் அந்த ஆய்வில் பதிவு செய்திருந்தார்.
பிரிட்டனின் இம்பீரியல் காலேஜ் லண்டனின் மக்கள் தொகை ஆராய்ச்சியாளரான முனைவர் ஆண்ட்ரியா ரோட்ரிக்ஸ் மார்டினெஸ், மனித உயரப் போக்குகளை ஆய்வு செய்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
காலநிலை மாற்றம் நவீன மக்கள் தொகையின் மீதும் இது போன்ற அழுத்தத்தைச் செலுத்தக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார்.
“உலகெங்கிலும் சுமார் ஒரு பில்லியன் குழந்தைகள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் ‘மிகவும் அதிக ஆபத்தில்’ இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. காலநிலை மாற்றம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு வழிகளில் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று சொல்வது சரியானதுதான்” என்கிறார் முனைவர் ஆண்ட்ரியா ரோட்ரிக்ஸ் மார்டினெஸ்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நம் உயரம் எவ்வளவு இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் மரபியல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், ஒரு நபர் தனது முழு உயரத்தையும் எட்டுவதற்கு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழல் அவசியம்
உயரம் குறைந்து வரும் டச்சுகாரர்கள்
இருபதாம் நூற்றாண்டு முழுவதையும் கவனத்தில் கொள்ளும்போது, மனிதர்களின் உயரத்தில் வாழ்க்கைச் சூழல் முக்கியப் பங்கு வகித்தது என்பது தெரிய வருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள சுகாதார விஞ்ஞானிகளின் கூட்டமைப்பான என்.சி.டி-ரிஸ்க், 1896 முதல் 1996 வரை பிறந்த 200 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் உயிரியல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து வெளியிட்டது. அந்தக் காலக்கட்டத்தில், ஆண்களின் உலகளாவிய சராசரி உயரம் 162 செ.மீ-லிருந்து 171 செ.மீ ஆக உயர்ந்ததாக அது மதிப்பிட்டுள்ளது. பெண்களிடையே இது 151 செ.மீ-லிருந்து 159 செ.மீ ஆக உயர்ந்ததாகவும் அது மதிப்பிட்டது.
இருப்பினும், சில நாடுகள் மற்ற நாடுகளைவிட அதிக வளர்ச்சியைக் கண்டன. உதாரணமாக, இரானிய ஆண்கள் 16.5 செ.மீ உயரமும் தென்கொரிய பெண்கள் 20.2 செ.மீ உயரமும் பெற்றனர். இதற்கு நேர்மாறாக, மடகாஸ்கர் பெண்கள் அந்த நூற்றாண்டில் வெறும் 1.5 செ.மீ மட்டுமே வளர்ந்தனர் மற்றும் பாகிஸ்தானிய ஆண்கள் 1.27 செ.மீ மட்டுமே வளர்ந்தனர்.
உயரத்தில் ஏன் இத்தகைய ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது?
“உயரத்தில் ஏற்படும் மாறுபாடுகளுக்குப் பெரும்பாலும் மரபணுக்களே காரணமாக உள்ளன. ஆனால் அவை ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொருளாதார காரணிகளின் கலவையோடும் தொடர்புடையவை” என்று மருத்துவர் மார்டினெஸ் விளக்குகிறார்.
சத்தான உணவு மற்றும் சுத்தமான நீர் கிடைப்பதுடன், நோய்களை எதிர்த்துப் போராடும் நமது திறனை மேம்படுத்திய மருத்துவ முன்னேற்றங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.
மனிதர்களின் சராசரி வளர்ச்சி ஒரு தேக்கநிலையை எட்டி வருவதாகக் கூறும் தரவுகளும் உள்ளன. குறைந்தபட்சம் உலகில் மிகவும் வளர்ந்த சில நாடுகளிலாவது இவ்வாறு நிகழ்கிறது.
வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட வரலாற்று ரீதியான மேம்பாடுகள், உயர்தர உணவு மற்றும் மருத்துவத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக டச்சு மக்கள் உலகின் மிக உயரமானவர்களாக உள்ளனர்.
“வாழும் சூழலுக்கும் ஆரோக்கியமான, உயரமான மக்களுக்கும் இடையே தெளிவான தொடர்பு இருப்பதை அவர்களின் வரலாறு காட்டுகிறது” என்று நெதர்லாந்தின் வாகனிங்கன் பல்கலைக்கழகத்தின் ஆரோக்கியம் மற்றும் சமூகப் பேராசிரியர் கிறிஸ்டினா தாம்சன் கூறுகிறார்.
ஆனால், நெதர்லாந்து புள்ளியியல் அலுவலகத்தின் படி, அவர்களின் சராசரி உயரம் குறைந்துள்ளது. 1980-இல் பிறந்த ஆண்கள் 19 வயதை எட்டும்போது சராசரியாக 183.9 செ.மீ உயரமாக இருந்தனர், ஆனால் 2001-இல் பிறந்த ஆண்களுக்கு இது 182.9 செ.மீ ஆகக் குறைந்தது. டச்சுப் பெண்களுக்கு இந்த சராசரி உயரம் 170.7 செ.மீ-லிருந்து 169.3 செ.மீ ஆகக் குறைந்தது.
“குறைந்த உயரம் கொண்ட புதிய மக்கள் குடியேறுவதும், அவர்களுக்கு இங்கே பிறக்கும் குழந்தைகளும் தான்” இதற்கு ஒரு காரணம் என்று சிபிஎஸ் அறிக்கை கூறுகிறது. ஆனால், நெதர்லாந்திலேயே பிறந்தவர்களின் குழந்தைகளும் குறைவான உயரம் கொண்டவர்களாக இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.
“இந்தக் குறைபாட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என்று கூறும் தாம்சன், “உணவின் தரம் குறைந்துவிட்டதா? அல்லது சிறுவயது உடல் பருமன் வளர்ச்சியைத் தடுக்கிறதா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
பட மூலாதாரம், Getty Images
ஏற்றத்தாழ்வுகளால் முடக்கப்பட்ட வளர்ச்சி
உலகின் மிக அதிகமாக வளர்ந்த நாடுகள் உலகளாவிய உயர வரிசையில் முதலிடங்களைப் பிடிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் அந்தத் தரவரிசைகள் மாறக்கூடும்.
கடந்த 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்கா உலகின் மூன்றாவது உயரமான நாடாக இருந்ததாக என்.சி.டி தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று, அமெரிக்கர்கள் முதல் 20 இடங்களுக்குள்கூட இல்லை.
அதாவது, அவர்கள் வளர்ச்சியில் குன்றிவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. 1996இல் அமெரிக்காவில் பிறந்த ஆண்கள், 100 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தங்கள் முன்னோர்களைவிட சராசரியாக 6 செ.மீ அதிக உயரமாக இருந்தனர். ஆனால் உலகின் மற்ற பகுதிகள் இதைவிட வேகமான வளர்ச்சியைக் கண்டன.
நூற்றாண்டுகளாக மனித அளவீடுகளைப் பற்றி ஆய்வு செய்யும் மானுடவியல் வரலாற்று முன்னோடியும், அமெரிக்க பொருளாதார நிபுணருமான ஜான் கொம்லோஸ், அந்நாட்டில் காலப்போக்கில் உருவான சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக சமீபத்திய காலங்களில் மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள சிரமங்களை அவர் குறிப்பிடுகிறார்.
“ஏழை மக்கள்கூடத் தங்கள் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்லக்கூடிய ‘மக்கள் நலன் சார் அரசு’ போன்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்த நாடுகளைவிட அமெரிக்கா பின்தங்கிவிட்டது” என்று அவர் விளக்குகிறார்.
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் உடல் பருமன் விகிதங்களையும், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே நிலவும் இந்தப் போக்கையும் பேராசிரியர் கொம்லோஸ் குற்றம் சாட்டுகிறார்.
கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கர்களின் உணவுப் பழக்கம் மேம்பட்டுள்ளதாக அரசுத் தரவுகள் காட்டினாலும், 18 வயதிற்கு உட்பட்ட அமெரிக்கர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே உண்பதாக அவை தெரிவிக்கின்றன.
மேலும் , “மக்கள் தொகை எண்ணிக்கையில் பெருக வேண்டும் அல்லது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவர்களுக்குச் சரியான உணவை முதலில் வழங்க வேண்டும் என்பதைத்தான் கடந்த காலம் நமக்குக் கற்பித்துள்ளது” என்றும் அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Hulton Archive via Getty Images
இரு கொரியர்கள் மற்றும் இரு ஜெர்மானியர்களின் கதை
வாழ்க்கைச் சூழல், வளர்ச்சியில் வகிக்கும் பங்குக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க உதாரணம் கொரிய மக்கள். இவர்கள் 1950களில் நடந்த போரினால் வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டாகப் பிரிந்தனர்.
சியோலில் உள்ள சுங்கயுங்க்வான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 2011ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில், வடக்கில் பிறந்தவர்கள் தங்களைவிடச் செழிப்பாக இருக்கும் தெற்கில் பிறந்தவர்களைவிட சராசரியாக 8 செ.மீ வரை உயரம் குறைவாக இருந்தனர் என்பது தெரிய வந்தது.
ஜெர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்த 41 ஆண்டுகளில் (1949-1990) அங்கு பிறந்த மக்களிடையே செய்யப்பட்ட ஒப்பீடுகளில், இதேபோன்ற, ஆனால் அவ்வளவாக வெளிப்படாத ஒரு வேறுபாடு காணப்பட்டது. மேற்கு ஜெர்மானியர்கள், தங்கள் கிழக்கு அண்டை நாடுகளைவிட சராசரியாக சுமார் 1 செ.மீ. உயரம் அதிகமாக இருந்தனர்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, தெற்காசியாவில் நிலவும் கடுமையான வெப்ப அலைகளும், அதிகரித்து வரும் ஈரப்பதமும் ஏற்கெனவே குழந்தைகளின் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.
அப்படியென்றால் நாம் வளர்வதை நிறுத்திவிட்டோமா?
வளர்ந்த நாடுகள் சிலவற்றில் மனித வளர்ச்சி அதன் உச்சத்தை எட்டிவிட்டதாகவோ அல்லது தேக்கமடைந்துவிட்டதாகவோ சான்றுகள் உள்ளன. ஆனால், வளர்ந்து வரும் நாடுகள் அந்த வளர்ச்சியை எட்டிப் பிடிப்பதன் மூலம் இது ஈடுகட்டப்பட வாய்ப்புள்ளது.
அதே நேரம், உலகில் பின்தங்கியுள்ள பகுதிகளில் சமூக-பொருளாதார சூழல்கள் இன்னும் மேம்பட வாய்ப்பிருந்தாலும், மனிதர்களால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றங்கள் அதற்கு ஒரு தடையாக அமையக்கூடும் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
“அதிகப்படியான மற்றும் வேகமாக அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் கொண்ட சூழலில் வாழும் மக்கள், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்வதில் பெரும்பாலும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கின்றனர்” என்று கேட்டி மக்மஹோன் குறிப்பிடுகிறார்.
“விவசாயம் போன்ற துறைகளில் வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் ஏர் கண்டிஷனிங் வசதி சிறிதும் இல்லாத அல்லது மிகக் குறைவாக உள்ளவர்களுக்கு, காலநிலை மாற்றம் நாங்கள் கவனித்த எதிர்மறையான விளைவுகளை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.”