ஆமதாபாத் மைதானம். இங்குதான் 2022-இல் முதன்முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றது. இதே மைதானத்தில்தான் கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தன் முதல் கோப்பையை வென்றது.
இந்த மைதானத்தில் இந்த ஆண்டில் இரு அணிகளும் நேற்று (ஏப்ரல் 30) மோதிக்கொண்டன. அதுவும் கடந்த முறை இறுதிப்போட்டியில் ஆடி கோப்பை வென்ற அதே பிட்ச்சில்.
புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆர்.சி.பி அணியைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட ப்ளே ஆப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எஞ்சிய ஆறு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றாலே போதுமானது.
அதேசமயம் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கோ இந்தத் தொடரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி பரிசாகக் கிடைத்துக்கொண்டிருக்கிறது. எஞ்சிய ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெறவேண்டும் என்கிற அழுத்தத்தோடுதான் இந்த போட்டியில் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ்.
பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத்
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, விராட் கோலி மற்றும் ஜேக்கப் பெத்தல்
டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் ஆடாத ப்ரஷித் கிருஷ்ணா இந்த போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த போட்டியிலும் களமிறங்கவில்லை. போன முறை ஆடிய அணியோடு களத்தில் இறங்கியது குஜராத் டைட்டன்ஸ். ஆர்.சி.பி அணியிலும் எந்த மாற்றமும் இல்லை.
சிராஜ் வீசிய முதல் ஓவரில் சிக்கனமாய் ஆறே ரன்கள். ரபாடா வீசிய இரண்டாவது ஓவரில் கோலி தன் ஆட்டத்தை தொடங்க, தொடர்ந்து நான்கு பவுண்டரிகள். அந்த ஒரு ஓவரில் மட்டும் 21 ரன்கள் எடுத்தது ஆர்.சி.பி. உலகக்கோப்பை டி20 போட்டியில் கலக்கிய ஜேக்கப் பெத்தலுக்கு ஆடுவதற்கான வாய்ப்பே பில் சால்ட் காயமடைந்த ஒரே காரணத்தினால் தான் கிடைத்தது. அதை கடந்த ஆட்டத்தில் அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை இந்த போட்டியில் நிச்சயம் அதிரடியாக ஆடுவார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க வெறும் 5 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
அதற்கடுத்த ஓவரிலேயே கோலியும் ரபாடா பந்துவீச்சில் வெளியேற, களத்தில் இருந்தது நல்ல ஃபார்மை தக்கவைத்திருக்கும் படிக்கல்லும் கேப்டன் ரஜத் படிதாரும்.
ரபாடா இந்த சீசனில் பவர்ப்ளேயில் மட்டும் பத்து விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். மின்னல் வேகத்தில் படிக்கல் ரன்கள் சேர்க்க, ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் 59/2 என்ற நிலை.
பவுலிங் மாற்றம் செய்ய விரும்பிய கில் அர்ஷத் கானை அழைத்து வர, அவர் வீசிய லென்த் பாலை படிதார் இழுத்து அடிக்க முயன்று பவுண்டரி கோட்டிற்குப் பக்கத்தில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹோல்டர் தட்டுத் தடுமாறி பிடித்த அந்த கேட்ச் விதிமுறையின்படி சரியானதா இல்லையா என நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. கோலி மற்றும் ஆர்.சி.பி நிர்வாகத்தில் பலரும் நடுவரிடம் முறையிட்டும் அது அவுட் தான் என இறுதியில் தீர்மானமானது.
அந்த கேட்ச் தான் ஆர்.சி.பி அணியின் வீழ்ச்சிக்கான தொடக்கப்புள்ளி. அதன்பின் தொடர்ந்து மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்கள். ஸ்கோர் 11 ஓவர்கள் முடிவில் 97/6 என இருந்தது.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, ஜேசன் ஹோல்டர் (நடுவில் இருப்பவர்)
ஒருமுனையில் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துக்கொண்டிருந்த படிக்கலையும் ரஷித் கான் தன் சுழலில் அவுட்டாக்க வேறு வழியே இல்லாமல் வெங்கடேஷ் ஐயரை இம்பேக்ட் பிளேயராக களமிறக்கியது ஆர்.சி.பி.
ஆனால் அர்ஷத் கான் வீசிய பந்து நேராக அவர் முழங்கையில் மோத, அவரால் அதன்பின் பந்தை முழுத்திறன் கொண்டு அடிக்கவே முடியவில்லை. புவனேஸ்வர் குமார் மட்டும் சில பவுண்டரிகள் அடித்து அணியின் ஸ்கோரை ஏற்றினார். 20வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆர்.சி.பி.
இந்தத் சீசனில் ஆர்.சி.பி அணி ஆல் அவுட் ஆவது இதுவே முதல்முறை.
குஜராத் தரப்பில் அர்ஷத் கானுக்கு மூன்று விக்கெட்கள். ரஷித் கானுக்கு இரண்டு விக்கெட்கள். ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட் என இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதோடு படிதார், டிம் டேவிட், க்ருணால் பாண்ட்யா ஆகிய மூவர் கொடுத்த கேட்ச்களையும் அடுத்தடுத்து பிடித்து பெங்களூரு ஆள் அவுட்டாக முக்கியக் காரணமாக இருந்தது அணியில் இத்தனை நாட்களாக இடம் கிடைக்காமல் இப்போது இரு போட்டிகளாக மட்டும் ஆடிவரும் ஜேசன் ஹோல்டர்.
‘பதற்றமில்லாமல் ஆடிய குஜராத் பேட்ஸ்மேன்கள்’
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, குஜராத் கேப்டன் சுப்மன் கில்
கடந்த சீசனைப் போலவே இந்த சீசனிலும் குஜராத் அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே அணியின் 70% ரன்களை அடித்திருக்கிறார்கள். அதனால் முதல் மூன்று விக்கெட்களை வீழ்த்தினால் இந்த ஸ்கோரை டிஃபென்ட் செய்துவிடலாம் என்கிற திட்டத்தோடு களமிறங்கியது ஆர்.சி.பி.
ஆனால் கில் அதற்கெல்லாம் இடமே கொடுக்கவில்லை. முதல் பந்தையே பவுண்டரியோடு தொடங்கினார். அந்த ஓவரில் மட்டும் 12 ரன்கள். ஹேசல்வுட் வீசிய இரண்டாவது ஓவரில் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என கில் எடுத்தது மட்டுமே 24 ரன்கள்.
முதல் இரண்டு ஓவர்களிலேயே 36 ரன்கள் என்பதால் 108 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தால் போதும் என்கிற நிலையை எட்டியது குஜராத். மூன்றாவது ஓவரில் சாய் சுதர்ஷன் அவுட்டாக, களமிறங்கினார் பட்லர். ரன்ரேட்டை தக்கவைக்க அவர் பங்கிற்கு அதிரடி காட்ட, பவுண்டரிகளிலும் சிக்ஸர்களிலும் வந்தன ரன்கள். 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கில் அவுட்டானாலும் பவர்ப்ளே முடிவில் 69/2 என்கிற வலுவான நிலையில் இருந்தது குஜராத்.
சுயாஷ் சர்மா வீசிய ஏழாவது ஓவரில் மட்டும் 17 ரன்கள். ஸ்கோர் சட்டென 86/2 என மாற, தேவைப்படும் ரன்ரேட் ஆறுக்கும் கீழாக குறைந்தது. அடுத்த ஓவரிலேயே பட்லர் அவுட்டாக, சீசனில் ஐந்தாவது முறையாக பேட்டிங் இறங்கினார் தமிழக வீரரான ஷாருக் கான்.
சில சீசன்களுக்கு முன் ஒரு நல்ல ஃபினிஷராக பல அணிகளால் கண்டறியப்பட்டு ஏலத்தில் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டவர். ஆனால் இன்னும் ஐ.பி.எல்லில் நினைவுகூரத்தக்க இன்னிங்ஸ் என எதுவும் அவர் ஆடவில்லை. நேற்றைய ஆட்டம் அவருக்கு அப்படியான ஒரு அருமையான வாய்ப்பை வழங்கியது. ஆனால் வெறும் எட்டு ரன்களில் வெளியேறினார் ஷாருக். இந்த சீசனில் ஐந்து போட்டிகளில் களம்கண்டு 43 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் இவர்.
அதே ஓவரில் மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரும் அவுட். ஆனால் ஸ்கோர் அதற்குள் 11 ஓவர்களில் 122/5 என்கிற பாதுகாப்பான நிலைக்கு சென்றிருந்ததால் பதற்றமில்லாமல் ஆடி இலக்கை நெருங்கினார்கள் குஜராத் பேட்ஸ்மேன்கள்.
இறுதியாக 16வது ஓவரின் முடிவில் இலக்கை எட்டி நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, ஜோஸ் பட்லர்
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஹோல்டர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றிருந்தாலும் இந்தப் போட்டியிலும் கில், பட்லர் என இரு டாப் ஆர்டர் வீரர்கள் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது.
ஷாருக், திவேதியா, வாஷிங்டன் சுந்தர் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் இன்னும் ஒரு போட்டியில் கூட அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் குஜராத் வெற்றி பெறவேண்டியது அவசியம் என்கிற நிலையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அதில் எக்கச்சக்க பொறுப்பு இருக்கிறது.
பெங்களூரு அணியிலும் மிடில் ஆர்டரில் ஒரு பலவீனமான புள்ளி இருக்கிறது. அது ஜிதேஷ் சர்மாவின் ஃபார்ம். இந்த சீசனில் ஏழு போட்டிகளில் களமிறங்கியிருக்கும் ஜிதேஷ் சர்மா எடுத்திருக்கும் ரன்கள் மொத்தமாகவே 63 தான். விக்கெட் கீப்பராக அவரின் முழுத்திறனையும் வெளிப்படுத்தியிருந்தாலும் இன்னும் ஒரு பேட்ஸ்மேனாக அவர் இந்த சீசனில் வெளிப்படவே இல்லை.
டிம் டேவிட், ஷெப்பர்ட் என முதல் பந்திலிருந்தே அதிரடியாக ஆட முயலும் பெங்களூரு மிடில் ஆர்டரில் ஜிதேஷ் சர்மா போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஆடக்கூடிய ஒரு வீரர் ஃபார்மில் இருப்பது மிகவும் அவசியம்.
கடந்த சீசனில் பேட்ஸ்மேனாக வெளிக்காட்டிய திறனை இந்த சீசனிலும் அவர் முன்னிறுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.