• Fri. May 1st, 2026

24×7 Live News

Apdin News

OPEC அமைப்பிலிருந்து வெளியேறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: எண்ணெய் விலை குறையுமா, இந்தியா பயனடையுமா?

Byadmin

May 1, 2026


ஒபெக்கை விட்டு வெளியேறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: எண்ணெய் விலை குறையுமா, இந்தியா பயனடையுமா?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் காரணமாக சர்வதேச எரிபொருள் சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மே 1ஆம் தேதி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்-இல் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ஒபெக் என்பது 12 முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்தக் கூட்டமைப்பு, ஒதுக்கீடுகள் எனப்படும் வரம்புகளை நிர்ணயிப்பதன் மூலம், ஒவ்வோர் உறுப்பு நாடும் எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதும், உலகளாவிய எண்ணெய் விலைகளில் செல்வாக்கு செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.

ஒபெக்-இல் இருந்து விலகுவதன் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இனி அது உற்பத்தி செய்யக்கூடிய எண்ணெயின் அளவு குறித்த இந்த வரம்புகளைப் பின்பற்ற வேண்டியதில்லை. அது ஒபெக்+ கூட்டணியில் இருந்தும் விலகும். 2016இல் உருவாக்கப்பட்ட இந்தப் பெரிய குழுவில், அனைத்து ஒபெக் உறுப்பு நாடுகளுடன் கூடுதலாக 10 எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளும் இடம்பெற்றன.

எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஓர் அறிக்கையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எரிசக்தி அமைச்சகம் இந்த முடிவுகான காரணத்தை விளக்கியுள்ளது. அதில், “தேசிய நலன்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு”, “அரேபிய வளைகுடா மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்படும் இடையூறுகளால் புவிசார் அரசியல் ஏற்றத்தாழ்வுகள் குறுகிய காலத்தில் தொடரும் நிலையில்”, சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நாட்டின் “உறுதிப்பாட்டின்” காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கை, “இந்த முடிவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நீண்டகால மூலோபாய மற்றும் பொருளாதார தொலைநோக்குப் பார்வையுடனும், உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியில் முதலீட்டை விரைவுபடுத்துவது உள்பட அதன் எரிசக்தித் துறையின் பரிணாம வளர்ச்சியுடனும் ஒத்துப்போகிறது. அதே நேரத்தில், உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் எதிர்காலத்தை எதிர்நோக்கி, ஒரு பொறுப்பான மற்றும் நம்பகமான உற்பத்தியாளராகத் தனது பங்குக்கான உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது,” என்று கூறுகிறது.

By admin