சென்னை: கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், கூடுதலாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பையும் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரை போலீஸார் கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உடலை வாங்க மறுத்த அவர்களிடம் போலீஸார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்தனர். மேலும், தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் பணியிடை நீக்கம் செய்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.