காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் செய்வதற்கான “அவசியமான நிபந்தனைகளுக்கு” இஸ்ரேல் ஒப்புக்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தின் போது, “போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் வேலை செய்வோம்”, என ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் டிரம்ப் தெரிவித்தார்.
“அமைதியை கொண்டு வர மிகக் கடுமையாக பணியாற்றிய கத்தார் மற்றும் எகிப்தியர்கள் இறுதி முன்மொழிவை தருவார்கள். ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன், ஏனென்றால் இது இதைவிட சிறந்ததாக மாறாது, இதைவிட மோசமானதாகத்தான் மாறும்,” என டிரம்ப் தனது பதிவில் கூறியிருக்கிறார்.
இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் உறுதி செய்யவில்லை, அதே நேரம் ஹமாஸிடமிருந்தும் எந்த உடனடியான கருத்தும் இல்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் வேலை செய்வோம் என டிரம்ப் தெரிவித்தார்.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் ‘பணயக் கைதிகளை மீட்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு’ அரசாங்கத்தில் பெரும்பான்மை உள்ளது மற்றும் இந்த வாய்ப்பு தவறவிடப்படக்கூடாது என எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அடுத்த வாரம் சந்திக்கவிருக்கும் நிலையில் டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் “மிகவும் உறுதியாக நடந்துகொள்வேன்” என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர நெத்தன்யாகு விரும்புகிறார் என தாம் நம்புவதாக டிரம்ப் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
“போரை நிறுத்த அவர் விரும்புகிறார் என என்னால் சொல்ல முடியும். அடுத்த வாரம் ஒரு ஒப்பந்தம் இருக்கும் என நான் நினைக்கிறேன், ” என டிரம்ப் மேலும் கூறினார்.
இஸ்ரேலின் மூலோபாய விவகாரங்கள் அமைச்சர் ரான் டெர்மர் மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோரை வாஷிங்டனில் சந்திக்கவிருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேனான் போர்நிறுத்தம் செய்ய இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
முன்னதாக ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேனான் போர்நிறுத்தம் செய்ய இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
பிபிசி செய்தி சேனலில் பேசிய டேனான், ஹமாஸ் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக கூறினார்.
“நாங்கள் ஹமாஸ் மீது அழுத்தம் தருகிறோம், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், பிணைக் கைதிகளை திரும்ப கொண்டுவர எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கூடுதலாக ராணுவ அழுத்தத்தை தருவதுதான்,” என்றார் டேனன்.
“பிணைக் கைதிகள் வீடு திரும்பியதும் போர் முடிவுக்கு வரும்,” என அவர் மேலும் கூறினார்.
காஸாவில் இன்னமும் சுமார் 50 பிணைக்கைதிகள் இருக்கின்றனர், இவர்களில் குறைந்தது 20 பேர் உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது.
காஸாவில் புதிய போர்நிறுத்தம் ஏற்படுத்தவும், பிணைக்கைதிகளை விடுவிக்கவும் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் மத்தியஸ்தர்கள் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனஎர். ஆனால் இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையாக இருப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கடந்த வாரம் தெரிவித்தார்.
ஹமாஸ் முழுமையாக அழிக்கப்பட்ட பின்னர்தான் போர் முடிவுக்கு வரமுடியும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நிரந்தர போர்நிறுத்தமும், காஸாவிலிருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேறவேண்டும் என்பதையும் ஹமாஸ் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.
ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க வடக்கு காஸாவில் மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்ட பின்னர் டிரம்பின் கருத்துகள் வெளிவந்துள்ளன. திங்கட்கிழமை காஸா நகரில் கடற்கரையை நோக்கி அமைந்துள்ள ஒரு உணவகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், நேரடிச் சாட்சிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கூற்றுப்படி குறைந்தது 20 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுமார் 1200 பேர் கொல்லப்பட்ட பின்னர் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை தொடங்கியது. அந்த பகுதியில் ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி அப்போதிலிருந்து காஸாவில் குறைந்தது 56,647 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நிவாரண முகாமில் உணவு பெற காத்திருக்கும் மக்கள்
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (Gaza Humanitarian Foundation – GHF) காஸாவில் நடத்தும் உதவி விநியோக மையங்களை அணுகும் பொதுமக்கள் “பாதிக்கப்பட்டதாக” வெளியான தகவல்களை ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் இந்த வாரம் தெரிவித்தது.
ஜூன் 28 வரை ஜிஹச்எஃப் முகாம்களுக்கு நிவாரணம் பெறச் செல்ல முயன்று 408 போர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
170-க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளும் பிற அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் சர்ச்சைக்குரிய குழு மூடப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன. உதவி தேடி வரும் பாலத்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் “வழக்கமாக” துப்பாக்கிச்சூடு நடத்துவதாக ஆக்ஸ்ஃபேம், சேவ் த சில்ரன் போன்ற அமைப்புகள் சொல்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் இஸ்ரேல், உதவி விநியோகத்தில் ஹமாஸின் தலையீட்டை தவிர்க்க இந்த அமைப்பு தேவையானது எனக் கூறுகிறது.
மார்ச் மாதத்தில், இஸ்ரேல் காஸாவின் மீது புதிய தாக்குதல்களை தொடுத்தபோது முந்தைய போர்நிறுத்தம் தோல்வியடைந்தது. ” பயங்கரவாத தாக்குதல்களை நிறைவேற்றவும், படைகளை திரட்டவும், மீண்டும் ஆயுதமேந்தவும் ஹமாஸின் தயார்நிலையை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட முன்கூட்டிய தாக்குதல்கள்” என்று இந்த நடவடிக்கையை இஸ்ரேலிய ராணுவம் விவரித்தது.
ஜனவரி 19ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட முந்தைய சண்டைநிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்படவிருந்தது, ஆனால் முதல் கட்டத்தை தாண்டவில்லை.
நிரந்தர போர்நிறுத்தம், காஸாவில் உயிரோடு இருக்கும் பிணைக் கைதிகளை, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலத்தீனர்களுக்கு மாற்றிக்கொள்வது, இஸ்ரேல் படைகள் காஸாவில் இருந்து முழுமையாக வெளியேறுவது ஆகிய சண்டை நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தில் இடம் பெற்றிருந்தன.