• Sat. Oct 3rd, 2026

24×7 Live News

Apdin News

கிட்டி | திரைவிமர்சனம்

Byadmin

Oct 3, 2026


தயாரிப்பு : ரியா ஸ்ரீ கிரியேசன்ஸ்

நடிகர்கள் : அசோக், யுகன், அர்ஜுனா, சங்கவி, நிஷா, சிமு அத்வானி, இயக்குநர் ஆர். அரவிந்தராஜ், வை. ஜி. மகேந்திரன் மற்றும் பலர்.

இயக்கம் : நெடுமாறன் மோகன்தாஸ்

மதிப்பீடு : 2/5

தமிழ் திரையுலகில் 2007 ஆம் ஆண்டில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தாலும் நட்சத்திர அந்தஸ்திற்காக தொடர்ந்து ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாக கடுமையாக போராடி வரும் நடிகர் அசோக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கிட்டி’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார். சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

மூவருளி சாரதியான விஜய் ( அசோக்) காவல் நிலையத்திற்கு வருகை தந்து கடலூர் சிவா ( சிவா) – பூஜா ( நிஷா) ஆகிய இருவரை கொலை செய்து விட்டதாக சரணடைகிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து செய்த காவல்துறை அதிகாரி ராஜபாண்டியன்( யுகன் ) விசாரணையை தொடங்குகிறார். விசாரணையில் விஜயின் நண்பனான ராஜா( அர்ஜுனா) விடம் மேற்கொள்ளும் போது, விஜய் உளவியல் ரீதியிலான சிக்கலுடன் இருப்பது காவல்துறை அதிகாரியான ராஜ பாண்டியனுக்கு தெரிய வருகிறது. இதை உளவியல் நல சிகிச்சை நிபுணர் டொக்டர் அரவிந்தராஜும் ( ஆர். அரவிந்தராஜ்) உறுதிப்படுத்துகிறார்.

இது தொடர்பாக கூடுதல் தகவல்களை ராஜபாண்டியன் சேகரிப்பதற்காக வேறு சில காவல் நிலையத்தின் உயரதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விடயங்களை சேகரிக்க.. விஜயின் உளவியல் பலவீனம் தெரிய வருகிறது. அதாவது ஏதேனும் ஒரு சம்பவத்தை நீ தான் செய்தாய் என விஜய்யிடம் தொடர்ந்து விவரித்தால்.. அவரது மனம் அத்தகைய செய்யலை தான் செய்ததாக பழியை ஏற்றுக்கொண்டு காவல்துறையின் சரணடைந்துவிடும்.  இந்த உளவியல் சிக்கலை உண்மையான குற்றவாளி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.. என்ற அவதானத்திற்கு வரும் ராஜபாண்டியன்… அசலான குற்றவாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

உளவியலில் சிக்கிக் கொள்ளும் முதன்மையான கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கும் இயக்குநர்.. அந்த கதாபாத்திரம் உளவியல் ரீதியாக வலிமையற்றது என்பதற்கான காரணத்தை அழுத்தமான திரை மொழிகளால் சொல்லி இருக்கலாம். இதனால் இது ஒரு சாதாரண படைப்பாக பார்வையாளர்களிடம் கடந்து செல்கிறது.

காவல்துறை விசாரணையின் பாணியில் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பெரும்பாலும் நகர்வதால்… தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய காட்சி அமைப்புகளும் பரவாயில்லை ரகத்துடன் திரையில் தோன்றுகிறது.

படமாளிகை அனுபவத் தருணங்கள்… நீதிமன்றத்தில் மஹா( சங்கவி) எனும் பெண் வருகை தந்து சாட்சி சொல்லும் காட்சியில் கிடைக்கிறது.

கிரைம் நாவல்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கு இப்படத்தில் வில்லன் யார்? என்பது உளவியல் சிகிச்சை நிபுணரின் திரை தோற்றம் வருகை தந்த உடன் எளிதாக அவதானிக்க இயலுகிறது. ஆனால் அதற்காக காவல்துறையின் விசாரணை சற்று நீளமாகவும்… சிக்கலானதாகவும்… சுவராசியம் குறைவானதாகவும்…  விவரித்திருக்கிறார்கள்.

விஜய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோக் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து திரையில் நிறைவான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

ராஜபாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் யுகன் கம்பீரமாக காவல்துறையின் சீருடை திரையில் தோன்றி… காவல் அதிகாரிக்கான உடல் மொழியுடன் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவு என பாராட்டலாம். அனுபவம் வாய்ந்த இயக்குநர்களின் கைகளில் இவர் தன்னை ஒப்படைத்தால்… அவர்கள் அற்புதமான கலைஞராக இவரை உருவாக்கி உயரத்தை தொட வைப்பார்கள்.

பூஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிஷா-  மஹா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சங்கவி-  தீப்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிமு அத்வானி என மூன்று நாயகிகளும் இயக்குநர் சொன்னதை மட்டும் செய்து திரையில் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

உளவியல் நல சிகிச்சை நிபுணர் டொக்டர் அரவிந்தராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநரும், நடிகருமான ஆர். அரவிந்தராஜ் அனுபவமிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களுக்கு சில சுவராசியமான விடயங்கள் இருக்கிறது.

‘சாரா சாரா..’ மற்றும் படத்தில் முதல் பாடல் ஆகியவை ரசிகர்களுக்கு இனிய விருந்தை அளிப்பதுடன் படத்தின் பின்னணி இசையிலும் தன் இருப்பை வெளிப்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் காதர்.

ஒரு க்ரைம் திரில்லருக்கான காட்சிப் கோணங்களை உருவாக்கி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார் ஒலிப்பதிவாளர் வி எஸ் வேலன்.‌ கார்த்தி பாண்டியன் படத் தொகுப்பில் இன்னும் கூர்மை தீட்டி இருக்கலாம்.

சிறு முதலீட்டு திரைப்படம் என்ற முத்திரையில் வெளியானதால்.. ‘கிட்டி’ வெகுஜன ரசிகர்களின் கவனத்தை கவரவில்லை.

கிட்டி –  கிரிட்டி ( Gritty)

The post கிட்டி | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.

By admin