சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை அமைத்த ஒப்பந்ததாரருக்கு திட்ட நிதி வழங்குவதற்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதால் இது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பிரசன்ன ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கிருஷ்ணகிரி மாவட்டம் மாடக்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் ஓரடுக்கு ஜல்லி சாலை அமைப்பதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு பணி உத்தரவு வழங்கி அரசாணை வெளியிட்டனர்
இதனைத் தொடர்ந்து கரடிகள் சாலை முதல் இரண்டு கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணியை கடந்த 2023-ல் செய்து முடித்தேன். 80% பணியை முடித்துக் கொடுத்தேன்.
இதற்கான தொகையை நான் கேட்டபோது இதற்கு தனியாக பணம் வழங்கினால் தான் இந்த சாலை திட்ட பணிக்கான நிதியை வழங்குவதற்கு அனுமதி அளிப்போம் என தளி பஞ்சாயத்து ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் மற்றும் மாடக்கல் பஞ்சாயத்து செயலாளர் ஆகியோர் கூறினர்.
இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபாயும் பிறகு 2 லட்சம் ரூபாயும் நான் வழங்கினேன்.
ஆனாலும் சாலை அமைத்து கொடுத்ததற்கான அரசு நிதியை எனக்கு வழங்கவில்லை மாறாக இதே போன்று போலியான பணி செய்தல் தொடர்பான ஆவணங்களை தயாரித்து வேறொரு நபருக்கு அரசு நிதியை வழங்கியது போல அவர்கள் எடுத்துக் கொண்டனர்.
எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சாலை அமைத்து கொடுத்த பணிக்காக ஒதுக்கீடு செய்த 39 லட்ச ரூபாயை எனக்கு வழங்க வேண்டும். மேலும் என்னிடம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்
இந்த மனு வேறு நீதிமன்ற நீதிபதி மாலா முன்பு விசாரிக்க வந்தது அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ முருகவேல் ஆஜராகி வாதாடினார்
இதனைத் தொடர்ந்து நீதிபதி மாலா இந்த வழக்கை பொறுத்தவரை அரசு திட்ட நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டு தீவிரமானது என்றும் எனவே இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்புவதாக நீதிபதி உத்தரவிட்டார்.