0
கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் ஸ்காட்லாந்து பெண்ணின் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து கைவிடப்பட்ட கட்டிடத்துக்குக் கொண்டு சென்றதாக ஒரு நபர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று கிரேக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
38 வயதான எலிசபெத்-ஜேன் ராஸ் (Elisabeth-Jane Ross), கடந்த ஜூலை 18ஆம் திகதியன்று ஏதென்ஸின் கிப்செலி (Kypseli) மாவட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவர் காணாமல் போனதாக முறைப்பாடு அளிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய 26 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்று அறியப்படுகின்றது.
அவர் பொலிஸாரிடம் தனது செயல்களை ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை, கொள்ளை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்த நபரின் வீட்டில் சோதனையிட்டபோது ஒரு போலி கைத்துப்பாக்கி மற்றும் கத்தி கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி – பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் ஸ்காட்லாந்து பெண்ணின் சடலம்: மர்ம மரணம் குறித்து விசாரணை
கைது செய்யப்பட்ட நபர், எலிசபெத்தின் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து அந்தப் பாழடைந்த இடத்துக்குக் கொண்டு சென்றதாகவும், பின்னர் அவரது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி, பணம் எடுத்ததாகவும் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
எலிசபெத், ஜூன் 26ஆம் திகதியன்று கிரீஸ் வந்தடைந்தார். அவர் ஜூலை 15ஆம் திகதியன்று தனது “அமெரிக்க நண்பர்களை” சந்திக்க கிப்செலி செல்வதாகத் தனது கிரேக்க நண்பர்களிடம் தெரிவித்திருந்தார்.
அவரது மரணத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய நச்சுயியல் (toxicology) சோதனைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கான முடிவுகள் வர சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்.
ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் ஜான் ஸ்வினி (John Swinney) இதனை ஒரு “கொடூரமான வழக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்காட்லாந்து அரசு மற்றும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஸ்காட்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் உள்ளூர் பொலிஸார் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

