0
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா ஞாயிற்றுக்கிழமை (27) காலை இயற்கை எய்தினார். சுகயீனமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அன்னாரின் பூதவுடல் தற்போது மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (28) காலை அவரது பூதவுடல் கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் மீண்டும் இல்லத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், மாலை 4.00 மணிக்கு கள்ளியங்காடு இந்துமயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறவுள்ளது.
1948 ஜப்பசி 14ஆம் தேதி மட்டக்களப்பு முனைக்காடு பகுதியில் பிறந்த பேராசிரியர் செல்வராசா, கல்லடி பகுதியை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விமானிப் பட்டம் பெற்ற அவர், குருநாகல், இரத்மலானை உள்ளிட்ட பல பாடசாலைகளில் ஆசிரியர், அதிபராக பணியாற்றினார்.
சிவானந்தா தேசிய பாடசாலையில் அதிபர், தேசிய கல்வி நிறுவனத்தில் தமிழ் பிரிவு பணிப்பாளர், ஆசிரியர்கள் பயிற்சி செயற்திட்டப் பணியாளராகவும் பணி புரிந்தார். பின்னர் இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி முகாமைத்துவத்தில் முதுமாணி பட்டம் பெற்றவர்.
இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கல்வி முறை மேம்பாடுகளை ஆய்வு செய்து, இலங்கையில் முன்பள்ளி கல்வி அபிவிருத்திக்கு தனித்துவமான பாடத்திட்டங்களை உருவாக்கினார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையை வழிநடத்தியதோடு, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் முறைமைகளுக்கு வித்திட்டார்.
1978 ஆம் ஆண்டு கிராமிய மாணவர்களுக்காக “ஒளிக்கல்லூரி” எனும் தன்னார்வ கல்வி நிறுவனத்தை தொடங்கி இலவச கல்வி வழங்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அதிமேதக ஜனாதிபதி நியமனம் மூலம் வேந்தராக நியமிக்கப்பட்ட இவர், தனது வாழ்நாளில் முழுமையாக கல்வி அபிவிருத்திக்கே அர்ப்பணித்திருந்தார். அவரின் கல்விச் சிந்தனைகள் இலங்கையின் கல்வித் துறையில் முக்கிய பங்களிப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.