• Fri. Sep 11th, 2026

24×7 Live News

Apdin News

கிழக்கு காங்கோவில் 2 பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் பலி

Byadmin

Sep 11, 2026


கிழக்கு காங்கோவின் புகாவு நகரில் அருகருகே அமைந்திருந்த இரண்டு பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 26 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர் என்று மாகாண அரசு தெரிவித்துள்ளது.

தெற்கு கிவு (South Kivu) மாகாண அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 19 மாணவிகளும் 7 மாணவர்களும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது; மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நகரத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள M23 கிளர்ச்சிக் குழுவின் செய்தி தொடர்பாளர் லாரன்ஸ் கன்யுகா, முன்னதாக 24 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 29 பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

மளமளவென பரவிய தீ:

ஒரு வீட்டில் தொடங்கிய தீ, அதனையொட்டி அமைந்திருந்த இரண்டு பள்ளிகளுக்கும் பரவியதாக உள்ளூர் பகுதி நிர்வாகி மொய்ஸ் லுபாலா ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஃபுராஹா மேல்நிலை பள்ளிக்குள் பல மாணவர்கள் சிக்கிக்கொண்டதாகவும், அவர்களில் சிலர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வெவ்வேறு வயதுடைய மாணவ-மாணவிகள் பள்ளிச் சீருடைகளுடன் நியாமுலகிரா BDOM சுகாதார மையத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக செவிலியர் சிசா ஜீன்-பாப்டிஸ்ட் ஏபி-யிடம் தெரிவித்தார். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், துல்லியமான எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் மருத்துவப் பணியாளர்கள் சிரமப்பட்டதாக அவர் கூறினார்.

மரத்தால் ஆன வீடுகள்:

“வெளியேறும் வழி மிகவும் குறுகலாக இருந்ததால், சில மாணவர்கள் ஜன்னல்கள் வழியாகக் குதிக்கத் தொடங்கினர்; மற்றவர்கள் கதவை நோக்கி ஓடினர். அனைவரும் வெளியேற முண்டியடித்தபோது, ​​மாணவர்கள் கீழே தள்ளப்பட்டு மிதிக்கப்பட்டனர்,” என்று லுபாலா கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை; ஆனால் தீ தொடங்கிய பகுதி அதிக மக்கள் அடர்த்தி கொண்டது என்றும், அங்குள்ள பெரும்பாலான வீடுகள் மரத்தால் ஆனவை என்றும் லுபாலா தெரிவித்தார்.

காங்கோ அரசு நாட்டின் கிழக்கு பகுதி மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டப் போராடி வருகிறது. ருவாண்டாவின் ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்கள் பிப்ரவரி 2025-இல் புகாவு நகரத்தைக் கைப்பற்றினர். உலகின் பெரும்பாலான தொழில்நுட்பத் துறைக்கு இன்றியமையாததாகத் திகழும், கிழக்கு காங்கோவின் டிரில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள கனிம வளங்களைக் கைப்பற்ற 100-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய குழுக்கள் போட்டியிட்டு வருகின்றன.

வரலாற்றிலேயே மிகக் கொடிய எபோலா நோய்த்தொற்றுப் பரவலால் இப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரச் சேவைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன; இந்நோய்த்தொற்றால் 3,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6,800-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

By admin