3
மட்டக்களப்பு, முனைக்காடு கிராமத்தில் பிறந்து கிழக்கின் முதல் கல்வியியல் பேராசிரியராக அறியப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா. செல்வராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை
காலமானார்.
அன்னாரது பூதவுடல் நாளை திங்கட்கிழமை கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பின்னர் இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டு பிற்பகல் 4 மணியளவில் மட்டக்களப்பு கல்யங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிகின்றது.
மட்டக்களப்பின் தனித்துவம் மிக்க கல்வியலாளராக அறியப்படும்
கிழக்கிலங்கையின் முதல் கல்வியியல் பேராசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மா.செல்வராஜா தனது 77 வது வயதில் இன்று இயற்கை எய்தினார்.
படுவான் பெருநிலப் பரப்பின் முனைக்காடு பெருநிலத்தில் 1948ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 14 ஆம் திகதி திரு திருமதி மானாகப்போடி தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்/மமே/தாழங்குடாவில் கற்று உயர் கல்வியைக் கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் கற்று பல்கலைக்கழகத்துக்கு நுழைந்து பல பட்டங்களையும் பதவிகளையும் தன்னிலைப்படுத்தி கிழக்கு மாகாணத்தின் தவிர்க்க முடியாத கல்வி சக்தியாகத் திகழ்ந்தவர் எனலாம்.
குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் விசேட இளமாணிப் பட்டம், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முதுமாணிப் பட்டம், பிரித்தானிய லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிப் பட்டம் எனப் பல கல்விசார் பட்டங்களைப்
பெற்ற கல்வியலாளர் இவர்.
சிலகாலம் இரத்மலான இந்துக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றினார்.
இவரது குடும்பம் முனைக்காடு கிராமத்தில் பெரு மதிப்புப் பெற்ற குடும்பமாக இன்றும் திகழ்கின்றது. குடும்பத்தின் மூத்த புதல்வரான இவர் இளமையில் இருந்து கல்வி அறிவும் சமூக சேவை சிந்தனைகளும் தூர நோக்கு எண்ணங்களும் சமய ஈடுபாடும் கொண்டவராக வளர்ந்தவர். தன் குடும்பத்தின் உயர்ச்சிக்காகவும் தன் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் ஏணிப் படியாக நின்றவர்.
குறிப்பாக 1978/11/24 அன்று கிழக்கையே புரட்டிப் போட்ட சுறாவளியால் படுவான் பெருநிலத்தின் கல்வித் துறையும் ஸ்திரத் தன்மையிழந்து ஆட்டம் கண்டது. இந்தக் காலகட்டத்தில் 30 வயது நிரம்பிய துடுப்புள்ள இளம் ஆசிரியராக வலம் வந்த பேராசான் செல்வராஜா படுவான் கல்வித்துறைக்கு ஒளியூட்டி உயிரூட்டும் எண்ணந்துடன் ஒளிக் கல்லூரியை முனைக்காடு கிராமத்தில் ஸ்தாபித்து வயது வித்தியாசமின்றி கல்வி ஆர்வமுள்ள சகல வயதுப் பிரிவினருக்கும் கல்வித் தாகம் தீர்க்க அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்தார்.
பலரது கல்வி வளர்ச்சிக்கும் ஊன்றுதலாய் இருந்தார் பிற்காலத்தில் இவரது ஒளிக்கல்லுரியில் கல்வி கற்றோர் பலர் கல்வித் துறையில் உயரிய பதவிகளில் பணியாற்றினர். இவர் ஒளிக்கல்லூரியில் தனது மாணவர்களை கொண்டு ஏனையோருக்கும் கல்வியைப் புகட்டினார்.
ஒளிக்கல்லூரிக்கு வர முடியாத போக்குவரத்து பிரச்சினை உள்ள மாணவர்களுக்குக் கல்வி புகட்ட அவர்களது கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று கல்வி புகட்டி இன்றும் படுவான் மக்கள் மனதில் இருக்கும் அம்மக்களால் போற்றப்படும் ஒரு மனிதராகத் திகழ்கின்றார்.
இவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லப்போனால் படுவான் பெருநிலத்தின் கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார் என்றே கூறலாம்.
ஆசிரியராக, அதிபராக, விரிவுரையாளராக, பேராசிரியராக, பல்கலைக்கழக வேந்தராக உயர்வடைந்த ஒரு பேராசான் மா.செல்வராஜா ஐயா. கல்வியியல் துறையிலே தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்றிட்ட அதிகாரியாகப் பின் தேசிய கல்வி நிறுவகப் பணிப்பாளராகக் கடமையாற்றிய பேராசிரியர் செல்வராஜா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகள் துறைத் தலைவராகவும் கல்வி, பிள்ளைநல துறைத் தலைவராகவும் கிழக்குப் பல்கலைக்கழத்தின் வேந்தராகவும் கடமையாற்றியிருந்தார்.
பேராசிரியர் ஐக்கிய அமெரிக்கா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இஸ்ரேல் எனப் பல நாடுகளுக்குச் சென்று கல்விசார் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டதுடன் கல்விசார் தலைப்பில் பல நூல்களையும் பல சஞ்சிகைகளில் கட்டுரைகளையும் எழுதியுள்ளதோடு பல ஆய்வறிக்கைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயர்சிக்காக அளப்பெரிய சேவையை ஆற்றிய பேராசியர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை இளமாணியில் கல்வியியலை ஒரு பாடமாகவும் கல்வியியலில் இளமாணி, முதுமாணி போன்ற சிறப்புத் துறைகளையும் தோற்றுவித்து அதனை முன்னெடுத்துச் சென்றார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அடுத்ததாக தமிழ் மொழி மூலம் கல்விமாணிக் கற்கைநெறி கிழக்குப் பல்கலைக்கழகத்திலே முன்னெடுக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
முனைக்காடு எனும் கிராமத்திலே பிறந்து இலங்கையில் கல்வித் துறையில் தனிப் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்து பலரது கல்விக்கு உறுதுணையாக இருந்து பல கல்வியலாளர்களை உருவாக்கிய பேராசிரியர் மா. செல்வராஜா ஐயாவின் இழப்பு கிழக்குக் கல்வித் துறையில் பேரிழப்பே ஆகும்.