(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் கம்பீரா பாலம் திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் ஆற்றுக்குள் உடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிடிஐ செய்தி முகமையின்படி, இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மத்திய குஜராத் பகுதியில் உள்ள பிபிசி குஜராத்தியின் சகாக்கள், மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள, வாகனங்கள் வந்துசெல்லும் இந்த பாலம் பெரியளவில் உடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த பாலம் வதோதரா மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. பாலம் திடீரன உடைந்ததால், அதில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சில ஆற்றுக்குள் விழுந்துள்ளன.
இந்த சம்பவத்தையறிந்து, உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்தால் யாரும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல், “மஹி ஆற்றில் ஐந்து முதல் ஆறு வாகனங்கள் வரை வீழ்ந்துள்ளன. மத்திய குஜராத் மற்றும் சௌராஷ்டிராவை இணைக்கும் கம்பீரா பாலத்தின் ஒரு ஸ்லாப் (slab) விழுந்ததால் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளனர்” என கூறியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக, ஆனந்த் மாவட்ட ஆட்சியர் பிரவீன் கௌத்ரி பிபிசியிடம் கூறுகையில், “விபத்து நடந்த வதோதரா பகுதியில் முழு அளவில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்தை மட்டும் அங்கே நிறுத்தியுள்ளோம். வதோதரா மாவட்ட எல்லைக்குள்ளும் இந்த பாலம் வருகிறது. ஆனந்த் மற்றும் சௌராஷ்டிராவிலிருந்து வதோதரா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 1983-1984ம் ஆண்டு வாக்கில் இந்த பாலம் கட்டப்பட்டது” என தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் இசுதன் காத்வி கூறுகையில், “இந்த பால விபத்து மனித தவறால் நிகழ்ந்துள்ளது. ஒரு டிரக் உட்பட 4 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்துள்ளன. பொதுமக்கள் வரி செலுத்தும்போது அரசாங்கமும் பாஜகவும் ஒரு வலுவான உள்கட்டமைப்பை எதிர்பார்க்கின்றனவா என்பதுதான் கேள்வி.” என தெரிவித்தார்.
இதுதொடர்பாக பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய அவர், “ஒரு பாலத்தைக் கடந்து செல்லும் போது இன்றைக்கு ஒருவர் அச்சத்தில் உள்ளார். அந்த பாலம் சேதமடைந்த நிலையில் இருந்திருந்தால், ஏன் அப்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தவில்லை?” என அவர் கேள்வியெழுப்பினார்.
பட மூலாதாரம், ugc
மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் இந்த பாலம் முக்கியமான பாலமாக கருதப்படுகிறது. தற்போது, அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து சில படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றில், பாலத்தின் உடைந்த பகுதிக்கு அருகே டிரக் ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. மற்றொருபுறம், ஆற்றில் சில வாகனங்கள் விருந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.
பாலத்தின் மற்றொரு பகுதியில் வாகனங்களும் மக்களும் நிற்பதை புகைப்படத்தில் காணலாம்.
அப்பகுதியிலிருந்து வெளியான காணொளி ஒன்றில், சுகாதார பணியாளர்கள் ஆற்றில் விழுந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைப்பதைக் காண முடிகிறது.
இதுவரை கிடைத்த தகவலின்படி, விபத்து நிகழ்ந்த பகுதி ஆனந்த் மாவட்டத்தின் கம்பீராவிலிருந்து வதோதரா மாவட்டத்தின் பத்ரா மற்றும் பரூச் பகுதிகளை இணைக்கிறது. இந்த பாலம், ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.