0
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து தாய் ஒருவர், நீதிமன்ற உத்தரவை மீறித் தனது இரண்டு சிறுவர்களுடன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான சர்வதேசத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
34 வயதான நிஷிகா சமரதுங்க (Nishika Samaratunga) என்ற பெண், தனது ஐந்து வயது மகன் பிளேன் (Blaine) மற்றும் மூன்று வயது மகன் நதானியேல் (Nathaniel) ஆகியோருடன் கடந்த மார்ச் 29 முதல் காணாமல் போயுள்ளார்.
நீதிமன்ற அனுமதியுடன் ஐக்கிய இராச்சியத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர், குழந்தைகளை அமெரிக்காவிலுள்ள அவர்களது தந்தை பென் பேயரிடம் (Ben Baier) ஒப்படைக்கத் தவறியதையடுத்து, இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.
காணாமல் போன இரண்டு சிறுவர்களும் ஆட்டிசம் (Autism) குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களது நலன் குறித்து தந்தை பென் பேயர் கவலை தெரிவித்துள்ளார். அவர்கள் முறையான மருத்துவப் பராமரிப்பு அல்லது கல்வி வசதிகளைப் பெறாமல் இருக்கக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, குழந்தைகளை இலண்டனுக்கு அழைத்துச் செல்ல நிஷிகா விடுத்த கோரிக்கையை கொலராடோ நீதிமன்றம் நிராகரித்ததுடன், தந்தைக்கே அவர்களின் முதன்மைக் காவலை (Primary custody) வழங்கியது. சிறுவர்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்ற அச்சத்தில், அவர்களைக் பொலிஸார் பொறுப்பேற்க அமெரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
இந்நிலையில், தாய் குழந்தைகளுடன் காணாமல் போயுள்ளார்.
சிறுவர்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் வகையில், இந்த வழக்கின் விவரங்களை பகிரங்கப்படுத்த இலண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், நிஷிகா மற்றும் சிறுவர்களைத் தேடுவதற்கு ஐக்கிய இராச்சியத்திலுள்ள பல நிறுவனங்களுக்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த வழக்கு ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளது.