பட மூலாதாரம், MK Stalin/X
“தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாக இருப்பார்கள்” என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி பேசியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆனால், “கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள்,” என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். ‘ஆட்சியில் பங்கு’ என பா.ஜ.க கூறுவதற்கு அ.தி.மு.க மறுப்பு தெரிவித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளுக்கு சிறிய கட்சிகளால் நெருக்கடி ஏற்படுகிறதா?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில், “கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்போம்” என அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.
தேர்தலுக்கு முன்னரே ஆஃபரை அறிவிப்பதாக த.வெ.கவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவளன் விமர்சித்திருந்தார்.
‘கூட்டணி ஆட்சிதான்’ – அமித் ஷா பேச்சும் எடப்பாடி விளக்கமும்
கடந்த ஏப்ரல் மாதம் அ.தி.மு.க-பா.ஜ.க இடையே கூட்டணி ஏற்பட்டதைத் தொடர்ந்து, “தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான ஆட்சி அமையும்” என அமித் ஷா கூறியிருந்தார். இதற்கு அ.தி.மு.க தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில், “அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும்போது ஆட்சியில் நிச்சயமாகப் பங்கு பெறுவோம்” எனக் கூறியிருந்தார்.
“பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் கூட்டணியில் இணையுமா?” எனக் கேட்டபோது, “தமிழ்நாட்டில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை ஒரே மேடைக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன” என அமித் ஷா பதில் அளித்துள்ளார்.
அமித் ஷாவின் பேட்டிக்கு ஜூலை 16ஆம் தேதி சிதம்பரத்தில் பதில் அளித்தார், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித் ஷா கூறினார். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை” என விளக்கம் கொடுத்தார்.
“கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்கும்” எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணியில் யாரும் விரிசலை ஏற்படுத்த முடியாது. ஆட்சியில் நான் முதலமைச்சர். இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்துள்ள பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “அமித் ஷா கூறுவது போல கூட்டணி ஆட்சிதான் அமையும். இதில் அ.தி.மு.கவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அவர்கள் அமித் ஷாவுடன் பேசிக் கொள்ளட்டும்” எனக் கூறியுள்ளார்.
‘பா.ம.கவும் பங்கு பெற வேண்டும்’
பட மூலாதாரம், AIADMK/X
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க, 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இணைந்தது. ஆனால், ஓர் இடத்திலும் அக்கட்சி வெற்றி பெறவில்லை.
தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.கவில் அன்புமணி, ராமதாஸ் எனப் பிரிந்துள்ள அணிகள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், “உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் தமிழ்நாட்டை ஆளும் அரசாங்கத்தில் பா.ம.கவும் பங்கு பெற வேண்டும்” என அன்புமணி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து தி.மு.க கூட்டணியிலும் ‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கம் எழுந்துள்ளது.
‘காங்கிரஸ் சார்பில் 2 அமைச்சர்கள்’
திருச்சியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது நமது குறிக்கோள்” எனப் பேசினார்.
“வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படாத வகையில் கூட்டணி இருக்கும்” எனக் கூறிய திருச்சி வேலுச்சாமி, “2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக இருப்பார்கள்” எனப் பேசினார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 13 அன்று “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் சென்னை முழுவதும் சுவரொட்டி ஒட்டியிருந்தது விவாதப் பொருளாக மாறியது. ‘துணை முதல்வரே’ என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை குறிப்பிட்டு இந்தச் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது.
தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லாத புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியும் இதே கோரிக்கையை எழுப்பியுள்ளார். அதேநேரம், கூட்டணி ஆட்சி குறித்துப் பேசியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “கூட்டணி ஆட்சி என்பதில் தெளிவாக உள்ளோம். ஆனால், 2026 தேர்தல் அதற்கான களம் இல்லை” எனக் கூறியுள்ளார்.
‘த.வெ.க இருப்பதுதான் காரணம்’
பட மூலாதாரம், @TVKPartyHQ/x
“வாக்கு வங்கி கணக்குப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் சிறிய கட்சிகளுக்கு எந்த வாய்ப்புகளும் இல்லை. அரசியல் களத்தில் த.வெ.க இருப்பதால் தங்களுக்குப் பேர வலிமை கூடிவிட்டதாக நினைக்கிறார்கள்” எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
“தி.மு.க, அ.தி.மு.க ஆகிய பிரதான கட்சிகளைத் தவிர்த்துவிட்டு தனித்து நின்றால் எந்தப் பயனும் இல்லை. இது அவர்களுக்கும் தெரியும்” எனவும் பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார்.
தங்கள் தயவின்றி பெரிய கட்சிகள் வெற்றி பெற முடியாது என்ற தோற்றம் சிறிய கட்சிகளுக்கு உள்ளதாகக் கூறும் அவர், “இன்றைய காலகட்டத்தில் தனியாக நிற்கக்கூடிய திறன் உள்ள கட்சியாக தி.மு.கவும் அ.தி.மு.கவும் உள்ளன. 2016 தேர்தலில் தனியாக நின்று அ.தி.மு.க அதை நிரூபித்துள்ளது” என்கிறார்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 232 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா நடப்பதாகக் கூறி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
கூட்டணியாக இல்லாமல் அனைத்துத் தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க போட்டியிட்டது. இதில் 134 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.
தி.மு.க கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. தே.மு.தி.க, ம.தி.மு.க, வி.சி.க, இ.கம்யூ, மா.கம்யூ, த.மா.கா ஆகிய கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டன. இந்த அணி எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.
‘வாக்கு வித்தியாசம்தான் காரணம்’
பட மூலாதாரம், Shiyam
“வெற்றி, தோல்விக்கு இடையில் சுமார் ஐந்து சதவிகிதம் அளவுக்கு வாக்கு வித்தியாசம் உள்ளது. இதை இழந்துவிடக் கூடாது என்பதால் கூட்டணிக்கு பிரதான கட்சிகள் முயற்சி செய்கின்றன” எனக் கூறுகிறார் ஷ்யாம்.
இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி, “பலமான கூட்டணி அமைப்பதால் பல நேரங்களில் வெற்றி வாய்ப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவை சில சதவிகித வாக்குகள் தீர்மானிக்கின்றன. இதனால் கூட்டணி அமைக்க வேண்டிய நிலையில் அரசியல் கட்சிகள் உள்ளன,” என்றார்.
தி.மு.க, காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.க என்பது மெகா கூட்டணியாகப் பார்க்கப்படுவதாகக் கூறும் ஷ்யாம், “தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மேலும் சில கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டணி உடைந்தால்தான் லாபம் என அ.தி.மு.க கருதுகிறது” என்கிறார்.
தங்கள் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ரத்தினக் கம்பளம் விரித்துக் காத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுவதும் இதன் அடிப்படையில்தான் என்றும் குறிப்பிட்டார் ஷ்யாம்.
‘நெருக்கடி கொடுக்காத காங்கிரஸ், பா.ம.க’
பட மூலாதாரம், Anbumani Ramadoss/FB
கடந்த 2006ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி குறித்துப் பேசும் ஷ்யாம், “அப்போது தி.மு.க அரசு மைனாரிட்டியாக இருந்தது. பா.ம.கவுக்கு 18 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். ஆனால், நெருக்கடி கொடுத்து ஆட்சியில் பங்கேற்கவில்லை” என்கிறார்.
“மத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்ததால் 34 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஆட்சியில் பங்கேற்பதை அவர்களும் வலியுறுத்தவில்லை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி பொறுப்பில் இருந்ததால், அவர்களும் ஆட்சியில் பங்கு கோரவில்லை” என்கிறார் ஷ்யாம்.
தி.மு.க, 2006 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 34 இடங்களிலும் பா.ம.க 18 இடங்களிலும் மா.கம்யூ 9 இடங்களிலும் இ.கம்யூ 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.
ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் முன்வைத்தாலும், முதலமைச்சராக இருந்த கருணாநிதி அதற்கு இடம் அளிக்கவில்லை.
கூட்டணியில் கூடுதலாக இடங்கள் கிடைக்காதா என்பதற்காக இவ்வாறு அரசியல் கட்சிகள் பேசுவதாகக் கூறிய ஷ்யாம், “ஜனவரி மாதம் தொடங்கும்போது இதைப் பற்றிப் பெரிதாக விவாதம் எழுவதற்கு வாய்ப்பில்லை” என்றார்.
‘மோதல்கள் வரவே செய்யும்’
“தற்போதைய காலகட்டத்தில் கூட்டணி என்பது அவசியமாகிவிட்டது. கூடுதல் இடங்களை ஒதுக்காவிட்டால் சென்றுவிடுவேன் எனக் கூறுவதைத் தவிர்க்க முடியாது. கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மதிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் கூட்டணி ஆட்சி முழக்கம் முன்வைக்கப்படுகிறது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.
கூட்டணி ஆட்சி பேச்சுகளால், யார் யாருக்கு தர்ம சங்கடம் என்பதைத் தாண்டி ‘ஒரு கட்சியால் இன்னொரு கட்சி பலன் அடையும்போது அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்ற அடிப்படையில் இத்தகைய கருத்துகளை சிறிய கட்சிகள் முன்வைப்பதாகவும் சிகாமணி குறிப்பிட்டார்.
“தேர்தல் நெருங்கும் வரை இதுபோன்ற மோதல்கள் வரவே செய்யும்” என்கிறார் அவர். “ஜனநாயகத்தில் இதைத் தவிர்க்க முடியாது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் இருப்பைத் தக்கவைக்க விரும்பும்.”
மேலும், “கூட்டணிக் கட்சிகளை தி.மு.க சமாளித்துவிடும். ஆனால், அ.தி.மு.க பலவீனமான நிலையில் உள்ளதால் அவர்களால் தங்களின் கூட்டணிக் கட்சிகளைச் சமாளிக்க முடியுமா என்பதுதான் கேள்விக்குறி” என்கிறார் சிகாமணி.
திமுக நம்பியிருக்கும் ‘அந்த ஃபார்முலா’
பட மூலாதாரம், Sigamani
“கூட்டணி ஆட்சி, தமிழ்நாட்டில் எடுபடுவதற்கு வாய்ப்பில்லை” எனக் கூறுகிறார், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
“ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் இதுபோன்று பேசுவார்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்றுக் கொள்வார்கள்” எனவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
“இதுபோன்று கோரிக்கைளால் நெருக்கடி ஏற்படுகிறதா?” எனக் கேட்டபோது, “ஆசை என்பது அனைவருக்கும் இருக்கும். அதில் தவறு கிடையாது. ஆனால், இறுதியில் விவாதித்து முடிவெடுப்பார்கள்” என்றார்.
“எப்படிப்பட்ட ஆட்சி அமைய வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்களோ அதற்கேற்ப தான் முடிவெடுக்க முடியும். அதுவரை அவரவர் பேசும் கருத்துகளுக்குப் பதில் கூற முடியாது” என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
அதோடு, போதிய பெரும்பான்மையின்றி மைனாரிட்டியுடன் 2006ஆம் ஆண்டில் தி.மு.க ஆட்சியை நடத்தியுள்ளதாகக் கூறும் அவர், “அந்த ஃபார்முலாதான் எப்போதும் நிற்கும்” என்கிறார்.
அதுமட்டுமின்றி, “கடந்த 1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சியின் தயவில் ஆட்சிக்கு வந்தோம். அவர்கூட ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பேச்சுகள் வருவது இயல்பு. இவை பழக்கப்பட்டுப்போன ஒன்று. இறுதியில் ஒரு கட்சி மட்டுமே ஆட்சி அமைக்கும்” என அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு