படக்குறிப்பு, திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கூவம் ஆற்றில் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கும் இடம். கட்டுரை தகவல்
தமிழக அரசின் நீர்வளத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடத்திய கள ஆய்வில், திருவள்ளூர் நகராட்சி தனது கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் கூவம் ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த நீர் செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடைவதால் சென்னைவாசிகளின் குடிநீர் பாதிக்கப்படக் கூடும் என்றும் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் அறிக்கை கூறுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் நிறமற்றதாக இருக்கும், ஆனால் திருவள்ளூர் நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அடர் பச்சை நிறத்தில் கழிவுநீர் வெளியேறுகிறது என்பது கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பாக்டீரியாக்களின் அதிக வளர்ச்சி காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் ஏரியும் கூவம் ஆறும் மாசடைவதாக அறிக்கை கூறுகிறது.
இது ஒரு ஏரி அல்லது ஒரு ஆற்றின் மாசுபாட்டுடன் மட்டும் முடியும் பிரச்னை அல்ல. கூவம் ஆற்றின் இந்தப் பகுதி, சென்னையின் குடிநீர் ஆதாரங்களுடன் இணையும் நீர்வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருப்பதாலேயே ஆய்வுக்குழு இதை முக்கியமான அபாயமாக சுட்டிக்காட்டியுள்ளது.
புட்லூர் தடுப்பணையிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் நீர் கொரட்டூர் தடுப்பணையை அடைகிறது; அங்கிருந்து பிரியும் புதிய பங்காரு கால்வாய் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீரை எடுத்துச் செல்லும் வரத்து கால்வாய்களில் ஒன்றாக உள்ளது என்று நீர்வளத்துறை பதிவு செய்துள்ளது. அதனால், ஓர் இடத்தில் கழிவுநீர் வெளியேறுவது, நீரின் இயல்பான பயணத்தின் வழியே பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு குடிநீர் ஆதாரத்தின் தரம் குறித்த கேள்வியாக மாறுகிறது.
ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ள தரத்துக்கு ஏற்ப கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை புதிய தொழில்நுட்பம் கொண்டு மேம்படுத்தி வருவதாக திருவள்ளூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, கூவம் ஆற்றின் டிரோன் காட்சி. (கோப்புப் படம்)
‘கூவம் ஆற்றில் நேரடியாக கலக்கும் கழிவு நீர்’
ஆனால் இந்தப் பிரச்னை 2025-ம் ஆண்டு ஆய்வின்போது முதன்முறையாக அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது அல்ல. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பதிவுகளின்படி, திருவள்ளூர் நகராட்சியின் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான இந்த பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 2014 டிசம்பர் 5-ம் தேதி நிறுவுவதற்கான அனுமதி (Consent to Establish) வழங்கப்பட்டபோதே, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் முழுவதையும் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், அருகிலுள்ள ஏரி உள்ளிட்ட எந்த நீர்நிலையிலும் அதை வெளியேற்றக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் பொதுமக்களின் புகார்கள், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் அதன் உத்தரவின்படி அமைக்கப்பட்ட கூட்டுக் குழுக்களின் ஆய்வுகளைத் தொடர்ந்து, 2020 செப்டம்பர் 4-ம் தேதி மாசு கட்டுப்பாட்டு வாரியம் நகராட்சிக்கு மீண்டும் உத்தரவிட்டது. அதன்படி, நிலையத்தை இயக்குவதற்கான (Consent to Operate – CTO) அனுமதியைப் பெற வேண்டும்; புட்லூர் ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்றப்படுவதை முழுமையாக நிறுத்தி, குழாய் அமைத்து புட்லூர் தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் கூவம் ஆற்றில் அதை வெளியேற்ற வேண்டும் என்பதும் அந்த உத்தரவுகளில் இடம்பெற்றிருந்தது.
2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில் திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்புக்காக வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை தொடர்ந்து மீறிவந்துள்ளதாகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உத்தரவுகளை பின்பற்ற தவறிவிட்டதாகவும் “சுத்திரிக்கப்படாத,மற்றும் பகுதி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கொண்டு கூவம் ஆறு மற்றும் புட்லூர் ஏரியை மாசடைய அனுமதித்துள்ளது” என்பது கண்டறியப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் திருவள்ளூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடிக்கடி பழுதடைவதால் கழிவுநீர் நேரடியாக புட்லூர் ஏரியில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து, (அருகில் உள்ள) மணவாளன் நகரில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீர் பாதிக்கிறது.
நகராட்சி அளித்த தகவலின்படி, 6.2 MLD — அதாவது நாளொன்றுக்கு 62 லட்சம் லிட்டர் — சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த நிலையத்திற்கு சுமார் 5.8 MLD (58 லட்சம் லிட்டர்) கழிவுநீர் வருகிறது. ஆனால் தற்போதுள்ள நிலையம் செயல்பாட்டு ரீதியாக தோல்வியடைந்துள்ளதாகவும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படவில்லை என்றும் ஆய்வுக்குழு பதிவு செய்துள்ளது. நிலைய வளாகத்திற்குள்ளேயே சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தேங்கி இருந்ததையும் அதிகாரிகள் கண்டுள்ளனர்.
“சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் தடுப்பணையிலிருந்து கொரட்டூர் தடுப்பணையை சென்றடைகிறது. அங்கிருந்து பிரிந்து செல்லும் புதிய பங்காரு கால்வாய் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீரை எடுத்து செல்கிறது. எனவே, சென்னை மக்களின் குடிநீரின் தரத்தை இது பாதிக்கக் கூடும்” என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, கூவம் ஆற்றுநீர் பங்காரு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் நோக்கி பிரிந்து செல்ல தொடங்கும் கொரட்டூர தடுப்பணை.
போதிய திறனற்ற சுத்திகரிப்பு நிலையம்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறன் குறைவாக இருக்கிறது என்றும் அது பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது என்றும் ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
டிசம்பர் 2024 கள ஆய்வின் போது கூவம் ஆற்றில் மழைநீர் ஓடிக்கொண்டிருந்த நிலையில், புட்லூர் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் பச்சை நிறத்தில் மணவாளன் நகர் அருகே கூவத்துடன் கலப்பதை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். ஏரி முழுவதும் காணப்பட்ட அதிகமான பாசி வளர்ச்சி, கழிவுநீர் மாசுபாட்டால் ஏற்பட்ட ஊட்டச்சத்து மிகைப்பாட்டை (eutrophication) காட்டுவதாகவும் ஆய்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.
கழிவுநீர் கூவம் ஆற்றில் கலக்கும் இந்த இடத்தை ஆகஸ்ட் 24-ம் தேதி பிபிசி தமிழ் நேரில் சென்று பார்த்தது. அப்போது பச்சை நிறத்தில் நுரையுடன் கூடிய நீர் கூவம் ஆற்றின் கரையோரத்தில் நுழைவதை காண முடிந்தது.
படக்குறிப்பு, கூவம் ஆற்றில் கலக்கும் நுரையுடன் கூடிய கழிவுநீர்
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சேகரித்த மாதிரிகளின் ஆய்விலும் மாசுபாட்டுக்கான அறிகுறிகள் பதிவாகியுள்ளன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வெளியேற்றப் பகுதி, புட்லூர் ஏரி மற்றும் சுற்றுப்பகுதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் உயிரிய-வேதியியல் ஆக்சிஜன் தேவை (Biochemical Oxygen Demand – BOD) அதிகமாகவும், கரைந்த ஆக்சிஜன் (Dissolved Oxygen) குறைவாகவும், மலம் சார்ந்த மற்றும் மொத்த கோலிஃபார்ம் அளவுகள் அதிகமாகவும் இருந்ததாக ஆய்வறிக்கை கூறுகிறது. கழிவுநீர் கலப்பதால் நீர்நிலை கடுமையாக மாசடைந்ததை இந்த முடிவுகள் உறுதிப்படுத்தியதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மணவாளன் நகரில் வசிக்கும் ஆனந்தகிருஷ்ணன் துரைசாமி, “இப்பகுதியில் உள்ள பல வீடுகளில் நிலத்தடி நீரில் கருப்பான படிமத்தை காண முடியும். இதனால் குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படும். நீர் அதிக வன்நீராக (தாதுகள் அதிகம் உள்ள நீர்) மாறி வருகிறது. இங்குள்ள வீடுகள் பெரும்பாலும் நிலத்தடி நீரையே குடிநீராக பயன்படுத்துகின்றன. சில இடங்களில் உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் நீர் வழங்கும். ஆனால் அதுவும் இந்த நிலத்தடி நீரே” என்கிறார்.
இந்தப் பிரச்னை தொடர்பாக மணவாளன் நகர் குடியிருப்போர் பொதுநல சங்கமும் அரசிடம் மனு அளித்துள்ளது. அதன் மனுவில், கூவம் ஆற்றின் நீர்வழித்தடம் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீராதாரங்களுடன் கொண்டுள்ள தொடர்பை சுட்டிக்காட்டி, கழிவுநீர் மாசுபாட்டைத் தடுப்பதற்கான நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. கூவம் ஆற்றின் இந்த நீர்வழித்தடத்தை குடிநீர் பாதுகாப்புடன் இணைத்து அணுக வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கள ஆய்வறிக்கையில், “புட்லூர் ஏரி முழுவதும் பாசி படிந்துள்ளது. கழிவுநீரால் ஏரிநீர் மாசடைந்ததையே இது குறிக்கிறது. சுத்திகரிப்பு நிலையத்தின் மோட்டார்கள் உட்பட பல்வேறு பாகங்கள் பழுதடைந்திருந்தன. கழிவுநீரை வடிகட்டும் வடிவமைப்பில் (Sludge drying bed ) செடி கொடிகள் வளர்ந்திருந்தன. நெடு காலமாக அது பயன்படுத்தப்படவில்லை என்பதை இது குறிக்கிறது. குளோரின் தொட்டி வழியாக குளோரினேஷன் (தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ்களை நீக்க குளோரின் சேர்க்கும் முறை) செய்யப்படாமல் கழிவுநீர் வெளியேறுகிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, கழிவுநீரின் அளவை கணக்கிடுவதற்கான உள்ளீடு மற்றும் வெளியீட்டு மின்காந்த ஓட்டமானிகள் (outlet electromagnetic flow meter) பராமரிக்கப்படவில்லை. மாசுபாட்டை கண்காணிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்த கழிவுக் கழிவுநீரைத் தொடர்ந்து கண்காணிக்கும் இணையவழி அமைப்பு (Online Continuous Effluent Monitoring System – OCEMS) நிறுவப்படவில்லை; நிலையத்தின் செயல்பாடுகளைப் பதிவு செய்ய வேண்டிய பதிவேடுகளும் பராமரிக்கப்படவில்லை.
படக்குறிப்பு, ஆனந்தகிருஷ்ணன் துரைசாமி
“புதிய தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு நிலையம்”
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட இந்த ஆய்வுக் குழு, திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்க தேவையான அனுமதிகளை பெறவில்லை என்றும் குறிப்பிடுகிறது.
2025 நவம்பர் 17-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், புட்லூர் ஏரிக்குள் சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்துதல், சுத்திகரிக்கப்படாத அல்லது பகுதி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் நிலைய வளாகத்திற்கு வெளியே செல்லாமல் தடுப்பது, கழிவுக் கழிவுநீரைத் தொடர்ந்து கண்காணிக்கும் இணையவழி அமைப்பை நிறுவுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. டிசம்பர் 1-ம் தேதி இந்த உத்தரவுகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டபோதும் அவை பின்பற்றப்படவில்லை என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
“தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தொழில்நுட்ப ரீதியாக போதுமானதாக இல்லை, மிகவும் மோசமாக பராமரிக்கப்பட்டு வருகிறது, இயங்குவதற்கு போதிய திறன் இல்லை, தற்போதுள்ள கழிவுநீர் சுமையை கையாள முடியவில்லை” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளுக்கு 6.2 மில்லியன் லிட்டர் அளவிலான கழிவுநீரை மட்டுமே கையாள முடியும். எதிர்கால மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு அப்பகுதியில் 15 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட நிலையத்தின் அவசியத்தை ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது.
புதிய சுத்திகரிப்பு வசதியை உருவாக்குவதுடன் மட்டும் பிரச்னை முடிவதில்லை என்றும் ஆய்வுக்குழு கூறியுள்ளது. நீண்டகாலமாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலந்ததால் புட்லூர் ஏரியில் படிந்துள்ள சகதியை அகற்ற, ஏரியை ஒரு மீட்டர் ஆழம் வரை தூர்வார வேண்டும் என்று நீர்வளத்துறை பரிந்துரைத்துள்ளது. கழிவுநீரின் தரத்தை தொடர்ச்சியாக கண்காணித்து நீர்வளத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுமக்கள் பார்க்கக்கூடிய வகையில் கண்காணிப்பு அமைப்பை நிறுவவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சி பதில்
இந்த விவகாரம் குறித்து ஆனந்தகிருஷ்ணன் துரைசாமி முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளித்த மனுவுக்கு திருவள்ளுர் நகராட்சி ஆகஸ்ட் 29ம் தேதி பதில் அளித்துள்ளது. “பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் MBBR (Moving Bed Biofilm Reactor) தொழில்நுட்பத்தின் அடிப்படையிலானது. இதனால் மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரைக்கும் தரத்தை அடைய முடியவில்லை. எனவே மண் உயிரி தொழில்நுட்பம் (Soil BioTechnology) எனும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கழிவுநீரை சுத்தம் செய்து அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் 4.30 கி.மீட்டர் தூரத்தில் கூவம் ஆற்றில் புட்லூர் தடுப்பணைக்கு பின்புறம் வெளியேறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருவள்ளூர் நகராட்சி ஆணையர் என்.தாமோதரன் பிபிசி தமிழிடம் பேசிய போது, “பழைய தொழில்நுட்பத்தை கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரங்களை அடைய முடியவில்லை. மண் உயிரி தொழில்நுட்பம் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான செம்மண் (laterite soil) கிடைப்பதில் சிக்கல் இருந்தது. எனவே பணிகள் தாமதாகியுள்ளன. அக்டோபர் 15-ம் தேதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்” என்றார்.
ஆனால் புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வருவதுடன், புட்லூர் ஏரிக்குள் சுத்திகரிக்கப்படாத அல்லது பகுதி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் செல்வதை உடனடியாக நிறுத்துவது, தேவையான சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுவது, புதிய குழாயை புட்லூர் தடுப்பணையின் கீழ்ப்பகுதி வரை முடிப்பது, தேவையான கண்காணிப்பு அமைப்புகளை நிறுவுவது ஆகியவற்றுக்கும் நகராட்சியே முதன்மைப் பொறுப்புடைய அமைப்பு என்று கூட்டுக் குழு கூறியுள்ளது. புட்லூர் ஏரியையும் கூவம் ஆற்றையும் நீண்டகாலம் பாதுகாக்க துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட பொறுப்புணர்வு தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.