படக்குறிப்பு, ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார்கட்டுரை தகவல்
ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்ட செய்தி வெளியான பிறகு, 94 வயதான மதகுரு கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் பெயர் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.
ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்த குற்றத்திற்காக நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற, மஹ்தி குடும்பத்தினரின் மன்னிப்பு முக்கியம் ஆகும்.
ஜூலை 14 திங்கட்கிழமையன்று கேரளாவின் மிகவும் மதிக்கப்படும் மற்றும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதத் தலைவரான அபுபக்கர் முஸ்லியார், நிமிஷா பிரியா வழக்கு குறித்து ‘ஏமனின் சில ஷேக்குகளுடன்’ பேசினார் என நிமிஷா பிரியாவைக் காப்பாற்றுவதற்காக பிரசாரம் செய்து வரும் சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில், செவ்வாயன்று கூறியது
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் இந்த கவுன்சிலின் உறுப்பினருமான சுபாஷ் சந்திரா பிபிசியிடம் பேசியபோது, “சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சிலின் உறுப்பினர்கள் கிராண்ட் முஃப்தியைச் சந்தித்துப் பேசினார்கள். அதன் பிறகு அவர், அங்குள்ள (ஏமன்) சில செல்வாக்கு மிக்க ஷேக்குகளுடன் பேசினார்” என்று கூறினார்.
“இறந்தவரின் உறவினர்கள் உட்பட செல்வாக்கு மிக்கவர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று சந்திரா கூறினார்.
ஜூலை 16 அன்று நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு முஸ்லியாரின் தலையீடு உயிரிழந்த தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடனான பேச்சுவார்த்தைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
முஸ்லியார் யார்?
‘கிராண்ட் முஃப்தி’ என்று இந்தியாவில் முஸ்லியார் அறியப்பட்டாலும், அவருக்கு இந்தப் பட்டம் முறைசாரா முறையில் வழங்கப்பட்டதாகும்.
சுன்னி சூஃபிசம் மற்றும் கல்விக்கான பங்களிப்புக்காக அவர் அறியப்பட்டாலும், பெண்கள் குறித்த அவரது கூற்றுகள் பல முறை கண்டனங்களை எதிர்கொண்டுள்ளன.
கேரள பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாற்றுப் பேராசிரியர் அஷ்ரஃப் கடக்கல் பிபிசியிடம் கூறுகையில், “அவர் தனது சீடர்களுக்கு தீர்க்கதரிசியைப் போன்றவர். அவருக்கு மந்திர சக்திகள் இருப்பதாகவும் சிலர் நம்புகிறார்கள்” என்று தெரிவித்தார்.
“பரேல்வி பிரிவைச் சேர்ந்த முஸ்லியாரை சூஃபி மாநாடு ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி சிறப்பித்துள்ளார். ஆனால் பெண்கள் மீதான அவரது அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.”
“அவரை சக்திவாய்ந்த தலைவராக்குவது எது என்று நீங்கள் கேட்டீர்கள். இந்தியாவில் யாராவது சந்திராசாமியுடன் போட்டியிட முடிந்தால், அது முஸ்லியாராகத்தான் இருக்கும் என்பதே எனது பதில். அவரும் இவரைப் போன்றவரே. சந்திரசாமி, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் செல்வாக்குமிக்கவராகவும் இருந்தவர்” என்று பிபிசியிடம் கலாசார மற்றும் அரசியல் ஆய்வாளர் ஷாஜகான் மதாபத் கூறினார்.
நிமிஷா பிரியா விஷயத்தில் ஏபி அபூபக்கர் முஸ்லியார் தலையிட்ட போதிலும், பெண்கள் குறித்த அவரது கருத்துக்கள் குறித்த விவாதங்கள் தொடர்கின்றன. இருப்பினும், எழுத்தாளரும் சமூக சேவகருமான முனைவர் கதீஜா மும்தாஜ் அவரைப் பாராட்டுகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், “எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தபோதும், நிமிஷாவுக்காக முஸ்லியாரால் ஏதேனும் செய்ய முடிந்தது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.
படக்குறிப்பு, ‘சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில்’ உறுப்பினர்கள் மௌலவி முஸ்லியாரைத் தொடர்பு கொண்டனர்
முஸ்லியார் என்ன செய்தார்?
ஏமனில் உள்ள ஒரு சூஃபி பாரம்பரியத்தைச் சேர்ந்த ‘பா அலவி தரீக்கா’வின் தலைவரான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸுடனான தனது நீண்டகால நட்பையும் பிற தொடர்புகளையும் பயன்படுத்தி முஸ்லியார், தலால் மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் வெற்றியடைந்தார்.
ஷேக் ஹபீப் உமர், ஏமனில் உள்ள ‘தார் உல் முஸ்தபா’ என்ற மத நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அங்கு கேரளா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் கல்வி கற்க வருகிறார்கள்.
ஷேக் ஹபீப் உமர், போரில் ஈடுபடும் குழுக்கள் உட்பட, ஏமனில் உள்ள அனைத்து பிரிவுகள் அல்லது குழுக்களுடன் இணக்கமான தொடர்புகளை கொண்டவர்.
“அவரது தலையீடு முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் இருந்தது. ஷரியா சட்டத்தில் ஒரு நபருக்கு ரத்தப் பணம் செலுத்துவதன் மூலம் மன்னிப்பு பெற முடியும் என்ற விதி உள்ளது என்று மட்டுமே அவர் அவர்களிடம் கூறினார். அவரது முயற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது” என்று முஸ்லியாரின் செய்தித் தொடர்பாளர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்டவரின் (தலால் அப்தோ மஹ்தி) குடும்பம் மன்னிப்பு அளித்தால், நிமிஷாவின் தண்டனை ரத்து செய்யப்படும். அந்த மன்னிப்பிற்கு ஈடாக ‘ப்ளட் மணி’ (Blood money) அல்லது தியா (Diyah) எனப்படும் நஷ்டஈடு (பெரும்பாலும் பணம்) வழங்கப்படும்.
முஸ்லியாரிடம் பிபிசியால் பேச முடியவில்லை. மலப்புரத்தில் உள்ள நாலேட்ஜ் சிட்டி நகரத்தில் முஸ்லியாரின் மகனால் அமைக்கப்பட்ட மசூதி மற்றும் மதீன் சாதத் அகாடமியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது ஷேக் ஹபீப் உமர் கேரளாவிற்கு வருகை தந்துள்ளார்.
படக்குறிப்பு, நிமிஷா பிரியா 2017 ஆம் ஆண்டு கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார், அவரது கணவர் மற்றும் மகள் கேரளாவில் வசிக்கின்றனர்
மௌலவி முஸ்லியார் பிரபலமானதன் பின்னணி
1926 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுன்னி அமைப்பான ‘சமஸ்தா கேரள ஜமியதுல் உலமா’ என்ற அமைப்பில் இருந்து பிரிந்து புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தபோது இஸ்லாமிய வட்டாரங்களில் முஸ்லியார் பிரபலமானார்.
இந்த அமைப்பு 1986 வரை ஒற்றுமையாக இருந்தது, ஆனால் பின்னர் சித்தாந்தத்தில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின.
“முஸ்லியார் தீவிர சல்ஃபி இயக்கத்தை எதிர்த்தார். ஆங்கிலம் ‘நரகத்தின் மொழி’ என்பதால் இஸ்லாமியர்கள் அதைக் கற்கக்கூடாது என்றும், மலையாளம் ‘நாயர் சமூகத்தின் மொழி’ என்பதால் அதைக் கற்கக்கூடாது என்று நம்பிய இயக்கம் அது. அவர் பெண் கல்விக்கும் எதிரானவர்” என்று பேராசிரியர் அஷ்ரஃப் விளக்குகிறார்.
வெளிநாட்டிலிருந்து நன்கொடைகளைப் பெற்று கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்தினார்.
“குறைந்தது 40 சதவீத சுன்னி இஸ்லாமியர்கள், முஸ்லியாருக்கு ஆதரவாக இருந்தனர். பாரம்பரியமாக சுன்னி அமைப்பு ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) உடன் இருந்தது.
ஆனால் முஸ்லியார் ‘எதிரியின் எதிரி நண்பன்’ என்ற கொள்கையை பின்பற்றி சி.பி.எம் கட்சியை ஆதரித்தார். இதன் காரணமாக மக்கள் அவரை ‘அரிவாள் சுன்னி’ என்று அழைக்கத் தொடங்கினார்கள், அரிவாள் சி.பி.எம் கட்சியின் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது.”
“அவர் ஒரு சிறந்த அமைப்பாளர் என்பதால் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகம், ஆனால் பெண்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்த அவரது கருத்துக்கள் மிகவும் பழமையானவை. சல்ஃபி வட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வணக்கம் கூட சொல்லக்கூடாது என்று அவர் ஒருமுறை கூறினார்” என்று ஷாஜகான் கூறுகிறார்.
இஸ்லாமிய ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பது அவசியம் என்று கூறும் அவரது கூற்றை முனைவர் மும்தாஜ் கண்டிக்கிறார்.
“முதல் மனைவியின் மாதவிடாய் காலத்தில் ஆண்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரண்டாவது மனைவியைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார். பெண்கள் குறித்த இதுபோன்ற அவரது கருத்துக்கள் கவலையளிப்பவை. இதுபோன்ற அவரது கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று அவர் கூறுகிறார்.
இவை அனைத்தையும் மீறி, “நிமிஷா பிரியா இஸ்லாமியர் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அவர் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி உதவியிருக்கிறார் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று மும்தாஜ் கூறுகிறார்.
மேலும், 26/11 மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்லாமியர்களுக்கான மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்வதில் மௌலவி முஸ்லியார் தீவிர பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், “இஸ்லாத்தில் பயங்கரவாதம் தடைசெய்யப்பட்டுள்ளது” என்ற செய்தியை இஸ்லாமிய சமூகத்திற்கு வழங்குவதாகும்.