படக்குறிப்பு, இந்த எஃப்-35பி போர் விமானம் ஜூன் 14ஆம் தேதி முதல் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுகட்டுரை தகவல்
எழுதியவர், கீதா பாண்டே
பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
பிரிட்டனை சேர்ந்த அதிநவீன போர் விமானம் ஒன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சிக்கிக் கொண்டிருக்கிறது. இது பேசுபொருளாவதுடன், ஒரு நாட்டின் நவீன விமானம் எப்படி வெளிநாட்டில் பல நாட்கள் சிக்கியிருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
எஃப்-35பி விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூன் 14ஆம் தேதி தரையிறங்கியது. இந்திய பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது மோசமான வானிலையில் சிக்கிக்கொண்ட விமானம், பிரிட்டன் ராயல் கடற்படையின் ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் விமானம் தாங்கிக் கப்பலுக்கு திரும்ப முடியாத சூழலில் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
அங்கு அது பாதுகாப்பாகத் தரையிறங்கியது, ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானத்தால் கப்பலுக்குத் திரும்ப முடியவில்லை.
விமானம் தரையிறங்கிய பின்னர் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் விமானம் தாங்கிக் கப்பலின் பொறியாளர்கள் குழு வந்து அதை ஆய்வு செய்துள்ளனர். ஆனால் அவர்களால் இதுவரை விமானத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரி செய்ய முடியவில்லை.
“விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு பழுதுநீக்கல் வசதிக்கு விமானத்தை நகர்த்த முன்வைக்கப்பட்ட திட்டத்தை பிரிட்டன் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறப்புக் கருவிகளுடன் பிரிட்டன் பொறியாளர்கள் குழு வந்தவுடன் விமானம் ஹேங்கருக்கு (விமானத்தை நிறுத்தி வைக்கும் இடம்) கொண்டு செல்லப்படும். இதன் மூலம் மற்ற விமானங்களின் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படும்,” என பிரிட்டன் தூதரகம் பிபிசிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தது.
“பழுதுநீக்கம் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முடிவடைந்த பின்னர் விமானம் தனது வழக்கமான சேவைகளைத் தொடங்கும். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு விமானக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பிரிட்டனை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் சனிக்கிழமை வருவார்கள் என எதிர்பார்ப்பதாக திருவனந்தபுரம் விமான நிலைய அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். 110 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த போர் விமானத்தை பிரிட்டனின் ராயல் விமானப் படையைs சேர்ந்த ஆறு அதிகாரிகள் 24 மணிநேரமும் பாதுகாத்து வருகின்றனர்.
மும்பையில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் பாதுகாப்பு, உத்தி மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் சமீர் பாட்டீல், ராயல் கடற்படைக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். “அதில் ஒன்று, விமானத்தைப் பழுதுநீக்கி பறக்கச் செய்வது. இல்லையென்றால், சி-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானம் போன்ற அதைவிடப் பெரிய சரக்கு விமானத்தைப் பயன்படுத்தி அதைக் கொண்டு செல்லலாம்.”
போர் விமானம் சிக்கிக் கொண்டிருக்கும் விவகாரம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டுள்ளது. விமானத்தைப் பாதுகாத்து, மீண்டும் அதன் பணிகளைத் தொடங்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றித் தெளிவுபடுத்த வேண்டும் என திங்கள் கிழமையன்று எதிர்க்கட்சியான பழமைவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பென் ஒபீஸ் ஜெக்டி அரசிடம் கேள்வி எழுப்பியதாக, யுகே டிஃபென்ஸ் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
“விமானத்தை மீட்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன, அதற்கு இன்னமும் எத்தனை காலம் எடுக்கும் மற்றும் ஹேங்கரில் விமானம் இருக்கும்போதும் பார்வைக்குத் தெரியாமல் இருக்கும்போதும் விமானத்தின் ரகசிய தொழில்நுட்பங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு எப்படி உறுதி செய்யும்?” என அவர் கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
விமானம் தொடர்ந்து பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரிட்டனின் ஆயுதப் படைகள் அமைச்சர் லூக் பொலார்ட் உறுதி செய்தார்.
“எஃப் 35பி போர் விமானத்தால் கப்பலுக்குத் திரும்ப முடியாதபோது, முதல்தர ஆதரவளித்த நமது இந்திய நண்பர்களுடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என அவர் தெரிவித்தார்.
அதோடு, “ராயல் விமானப்படையின் வீரர்கள் விமானத்துடன் எப்போதும் இருக்கிறார்கள் என்பதால் போர் விமானத்தின் பாதுகாப்பு சிறந்த கரங்களில் இருக்கிறது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Kerala Tourism
படக்குறிப்பு, கேரளாவுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் போலவே, போர் விமானத்திற்கும் அங்கிருந்து திரும்பச் செல்வது கடினமாக இருப்பதாக கேரளா மாநில சுற்றுலாத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது
லாக்ஹீட் மார்டீனால் தயாரிக்கப்படும் எஃப் 35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (மறைந்து செயல்படும் ஆற்றல் கொண்ட) போர் விமானங்களாகும். இவற்றின் குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கத் தொடங்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகின்றன.
எனவே, ஓடுதளத்தில் “எஃப் 35பி தனிமையில்” நிறுத்தி வைக்கப்பட்டு கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக ஊடகங்களில் மீம்களாக பரவி வருகின்றன.
போர் விமானம் மிகவும் மலிவு விலையான 4 மில்லியன் டாலருக்கு இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக நகைச்சுவையாக ஒரு பதிவு வைரலானது.
“ஆட்டோமேடிக் பார்க்கிங், புத்தம் புதிய டயர்கள், புதிய பேட்டரி மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோரை அழிக்க ஆட்டோமேடிக் துப்பாக்கி” போன்ற அம்சங்கள் இருப்பதாக அதில் நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் போதிய காலம் இருந்துவிட்டதால் அந்த போர் விமானத்திற்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மற்றொருவர் இந்தியா வாடகை வசூலிக்க வேண்டும் எனவும், கோஹினூர் வைரம் பொருத்தமான கட்டணமாக இருக்கும் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, F-35B போர் விமானம் (சித்தரிப்புப் படம்)
புதன்கிழமை கேரள அரசின் சுற்றுலா துறையும் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வேடிக்கைப் பதிவுகளில் பங்கெடுத்தது. விமானத்தின் புகைப்படத்துடன், “கேரளா, நீங்கள் வெளியேறவே விரும்பாத இடம்” என சுற்றுலா துறை பதிவிட்டது.
அந்தப் பதிவில் தென்னை மரங்களின் பின்னணியில் எஃப் 35பி போர் விமானம் ஓடுதளத்தில் நின்றுகொண்டிருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
அதன் இயற்கையான அழகுக்காக சுற்றுலா விளம்பரக் கையேடுகளில் “கடவுளின் தேசம்” என விவரிக்கப்படும் மாநிலத்திற்கு வரும் பெரும்பாலான பயணிகளைப் போலவே, இந்தப் போர் விமானமும் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை எனக் கூறும் வகையிலான வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், போர் விமானம் சிக்கிக் கொண்டிருக்கும் ஓவ்வொரு நாளும் , எஃப் 35பி மற்றும் ராயல் கடற்படையின் பிம்பத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் என்கிறார் பாட்டீல். “நகைச்சுவை துணுக்குகள், மீம்கள், வதந்திகள் மற்றும் சதிக் கோட்பாடுகள் போன்றவை பிரிட்டன் ராயல் கடற்படையின் நற்பெயரைப் பாதிக்கின்றன. எவ்வளவு காலம் போர் விமானம் சிக்கிக்கொண்டு இருக்கிறதோ அந்த அளவுக்குத் தவறான தகவல்கள் பரவும்.”
முதலில் நினைத்ததைவிட தொழில்நுட்ப பிரச்னைகள் மேலும் மோசமானவையாகத் தெரிவதாக அவர் கூறுகிறார். ஆனால் பெரும்பாலான ராணுவங்கள் “மிகவும் மோசமான சூழ்நிலைகளுக்கு” தயார்படுத்திக் கொள்வதாகவும், போர் விமானம் வெளிநாட்டு மண்ணில் சிக்கிக்கொள்வது அத்தகைய ஒரு சூழ்நிலை எனவும் அவர் தெரிவித்தார்.
“இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பெரும்பாலான ராணுவங்கள் ஒரு நிலையான செயல்பாட்டுத் திட்டத்தை வைத்திருப்பார்கள். அப்படியிருக்க, ராயல் கடற்படையிடம் அப்படிப்பட்ட திட்டம் இல்லையா?” என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
அதோடு, இதைப் பற்றிய தோற்றம் மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறும் அவர், “இதைப் போன்ற ஒரு சம்பவம் எதிரி மண்ணில் நடைபெற்றிருந்தால், அவர்கள் இத்தனை நேரம் எடுத்துக் கொள்வார்களா? ஒரு தொழில்முறை கடற்படைக்கு இது மிக மோசமான மக்கள் தொடர்பாக இருக்கிறது” என்றார்.
– திருவனந்தபுரத்தில் இருந்து கூடுதல் தகவல்களை சேகரித்து அளித்தவர் அஷரஃப் பத்தனா