ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவரை மீன் ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘கொம்மு கோனாம்’ என்று அழைக்கப்படும் அந்த மீன் வலையில் சிக்கியிருந்தது. வலையை மீனவர்கள் இழுக்கும் போது, அந்த மீன் மிகுந்த வேகத்துடன் வலையை இழுத்து அந்த மீனவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது, என்று கூறுகிறார் யல்லாஜி. கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நபருடன் சென்ற யல்லாஜி, அதனை நேரில் கண்டதாக கூறினார்.
ஜூலை 2-ம் தேதி அன்று காலை சோடுபில்லி யேரய்யா மீன்பிடிக்க சென்றார். புதிமடகா கடற்கரையில் இருந்து 25 கி.மீ கடலுக்குள் சென்று மீன் பிடித்த போது அவரை மீன் இழுத்துச் சென்றது. கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் மூலம் அவரை தேடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
“புதன்கிழமை காலை மீன் பிடித்துவிட்டு புதிமடகா கடற்கரைக்கு மீனவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வலையில் கொம்மு கோனாம் என்ற மீன் சிக்கியது. அந்த மீனை தாங்கும் அளவுக்கு அந்த வலை வலுவானதாக இல்லை. எனவே யேரய்யா மற்றொரு வலையை வீசி அந்த மீனை வலைக்குள் இழுக்க முயன்றார். ஆனால் கொம்மு கோனாம் மீன் யேரய்யாவை வேகமாக கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. அதன் பின்னர் யேரய்யா என்ன ஆனார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை,” என்று பிபிசியிடம் பேசிய வாசுபள்ளி யல்லாஜி விவரித்தார்.
பட மூலாதாரம், Kishor
படக்குறிப்பு, சோடுபில்லி யேரய்யாவை தேடும் பணியில் கிராமமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்
அன்று என்ன நடந்தது?
சோடுபில்லி யேரய்யா, அவருடைய சகோதரர் சோடுபில்லி கொர்லய்யா, வாசுபள்ளி யல்லாஜி மற்றும் கனகல்ல அப்பலராஜூ ஆகிய நான்கு மீனவர்கள் புதிமடகா கிராமத்தில் இருந்து புதன்கிழமை காலை அதிகாலை 2 மணிக்கு மீன்பிடிக்க சென்றனர். அந்த கிராமம் ஆந்திராவின் அச்சுதபுரம் பகுதியில் அமைந்துள்ளது.
கடற்கரையில் இருந்து 25 கி.மீ தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள், காலை 9 மணியளவில் வலையை எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அதில் ஏதோ பெரிதாக சிக்கியிருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
“நாங்கள் அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்த போது, 200 கிலோகிராம் எடை கொண்ட கொம்மு கோனாம் மீன் அதில் சிக்கியிருந்தது. ஆனால் வலை போதுமான அளவுக்கு வலுவாக இல்லை. எனவே யேரய்யா மற்றொரு கயிற்றுடன் தூண்டில் அமைத்து அந்த மீனை இழுக்க முயன்றார். ஆனால் அந்த மீன் யேரய்யாவை வேகமாக கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. நாங்கள் அங்கே அரை மணி நேரத்திற்கும் மேலாக தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை,” என்று யல்லாஜி பிபிசிக்கு தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய அவருடைய தம்பி கொர்லய்யா, “என் கண் முன்னே என்னுடைய அண்ணன் கடலுக்குள் விழுந்துவிட்டான். அவனுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.
“அவருடைய அண்ணனுக்கு நிகழ்ந்ததை நேரில் பார்த்து கொரலய்யா ஆடிப் போய்விட்டார். எங்களால் நீண்ட நேரம் அங்கே இருக்க இயலவில்லை. கொம்மு கோனாம் மீன் படகில் இருப்பவர்களுக்கும் அச்சுறுத்தலாக மாறும் என்பதால் நாங்கள் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தோம். நாங்கள் திரும்பி வந்த பிறகு கிராம மக்களிடம் தெரிவித்தோம். அவர்களும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தினார்கள். அன்று மாலை வரை நாங்கள் தேடினோம். ஆனால் அனைத்தும் வீணாகிவிட்டது,” என்று யல்லாஜி தெரிவித்தார்.
பட மூலாதாரம், Kishor
படக்குறிப்பு, புதிமடகா கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் புதன்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது
தொடரும் தேடுதல் பணி
புதிமடகா கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் யேரய்யாவை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சிலர் படகுகளில் சென்று கரையோரங்களில் தேடி வருகின்றனர். சிலர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று அவரை தேடி வருகின்றனர்.
அண்டை மீனவ கிராமங்களில் இருந்தும் மீனவர்கள் யேரய்யாவின் வீட்டிற்கு வந்து தங்களின் ஆறுதலை தெரிவிப்பதோடு உதவியையும் செய்து வருகின்றனர்.
“என் வீட்டின் முதுகெலும்பு என் மூத்த மகன். கொரலய்யா இளைய மகன். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்போது நான் என்ன செய்து அவர்களை காப்பாற்றுவேன்?” என்று அவரின் தாயார் கோடந்தம்மா அழுதபடி கேள்வி கேட்கிறார்.
பட மூலாதாரம், Kishor
படக்குறிப்பு, அண்டை மீனவ கிராமங்களில் இருந்தும் மீனவர்கள் யேரய்யாவின் வீட்டிற்கு வந்து தங்களின் ஆறுதலை தெரிவிப்பதோடு உதவியையும் செய்து வருகின்றனர்
இது தொடர்பாக பேசிய புதுமடகாவின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் உள்ளூர் மீனவர் சமூகத்தின் தலைவருமான பாபுநாயுடு, “நாங்கள் புதிமடகா காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளோம். கடலோர காவல்படையினருக்கும் தகவல் அளித்துள்ளோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, முத்தியலாம்மாபாலம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரையும் கொம்மு கோனாம் மீன் தாக்கி உயிரிழந்தார்,” என்று தெரிவித்தார்.
கடலோர காவல்படையினர் தேடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை யேரய்யா குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார் புதிமடகா கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜி. பைதிராஜூ.
பட மூலாதாரம், KISHOR
படக்குறிப்பு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொம்மு கோனாம் மீனால் தாக்கப்பட்டு உயிரிழந்த மீனவர்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?
2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜோகன்னா என்ற முத்தியலாம்மாபாலம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கொம்மு கோனாம் மீன் தாக்கியதில் உயிரிழந்தார்.
“வலையில் சிக்கிய மீன் அதிக எடை கொண்டது. எவ்வளவோ நாங்கள் முயற்சி செய்தும் எங்களால் அந்த மீனை இழுக்க இயலவில்லை. எனவே தண்ணீருக்குள் சென்று அதை தூக்க முயன்றோம். ஜோகன்னா தான் முதலில் நீரில் குதித்தான். அவன் குதித்த நேரத்தில் மீன் அவரை வேகமாக தாக்கியது. அப்படியே அவர் தண்ணீரில் விழ, அதிர்ச்சி அடைந்த நாங்கள் வலையை நழுவவிட்டோம். உடனடியாக நீருக்குள் குதித்து நாங்கள் ஜோகன்னாவை தூக்கிக் கொண்டு வந்தோம். ஆனால் அவர் அப்போது இறந்துபோயிருந்தார்,” என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை விவரிக்கிறார் ஜோகன்னாவுடன் மீன்பிடிக்கச் சென்ற கங்கன்னா.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரணத்தையும் செய்தியாக்கியிருந்தது பிபிசி.
பட மூலாதாரம், Kishor
படக்குறிப்பு, தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் மீனவ மக்கள்
கொம்மு கோனாம் மீன் ஆபத்தானதா?
இந்த மீன் மிகவும் கூர்மையான அலகைக் கொண்டிருக்கிறது என்று சில மீனவர்கள் கூறுகின்றனர். அது மிகவும் ஆக்ரோஷமான மீன் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
“அது அதிக எடை கொண்டது. எனவே கொம்மு கோனாம் கிடைத்தால் அது கொண்டாட்டம் தான். ஆனால் அது தாக்கினால் நிலைமை மோசமாகும். அது ஒரு உயிரைக் கொல்லும் மீன்,” என்று மீனவர் ரமணாபாபு தெரிவிக்கிறார்.
மேற்கொண்டு பேசிய அவர், “இத்தகைய மீன்கள் எளிதில் வலையில் சிக்காது. அப்படியே சிக்கினாலும் பல நேரங்களில் அதை கிழித்துக் கொண்டு வெளியேறிவிடும். அதிக எடை கொண்ட காரணத்தால் அதை எளிதில் இழுக்க இயலாது. நாம் அதனை இழுக்க முயன்றால் அது தன் பக்கம் மிகவும் வேகமாக வலையை இழுக்கும். நாம் வலுவாக இல்லை என்றால் இது போன்ற சூழலில் கடலுக்குள் விழும் அபாயம் ஏற்படும்,” என்று தெரிவித்தார்.
15 கிலோமீட்டருக்கு அப்பால் கிடைக்கும் கொம்மு கோனாம்
“கரையில் இருந்து 15 கிலோமீட்டர் உள்ளே கடலுக்குள் சென்றால் தான் கொம்மு கோனாம் மீன் கிடைக்கும். இதற்கு அதிக டிமாண்ட் உள்ளது. அதே நேரத்தில் மிகவும் அபாயகரமானது” என்று கூறுகிறார் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பிரிவு பேராசிரியர் மஞ்சுலதா.
“இந்த மீன் 20 முதல் 250 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கும். அவை தனியாக நீந்தாது. அவை கூட்டமாக இடம் பெயரும் தன்மை கொண்டவை. எனவே ஒரே நேரத்தில் அதிகமான மீன்களை பிடிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இருப்பினும், அபாயத்தை உணரும் பட்சத்தில் தன்னுடைய கூர்மையான அலகால் மற்ற மீன்களையும் மனிதர்களையும் தாக்கும் தன்மை கொண்டவை இந்த மீன்கள்,” என்று விவரித்தார் அவர்.
“சூரை (ட்யூனா) மீனுக்கு அடுத்தபடியாக அடுத்த ‘டிமாண்ட்’ கொண்ட மீன்களாக இந்த கொம்மு கோனாம் உள்ளது. அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக பிடிபடும் போது நேரடியாக ஏற்றுமதியாளர்களுக்கு விற்பனை செய்வதும் உண்டு. மீன்களை வலையில் இருந்து எடுப்பதற்கு முன்பே அதன் அளவு மற்றும் விலையை பேசி முடித்துவிட்டு செல்லும் வியாபாரிகளும் உள்ளனர்,” என்று விசாகப்பட்டினத்தில் உள்ள படகு உரிமையாளர் தனன்யா கூறுகிறார்.