மதுரை: “கொலை செய்யும் நோக்கத்தில் வருவோர் கூட இந்த அளவுக்கு தாக்கியிருக்க மாட்டார்கள். உடலில் ஓர் இடம் கூட விடாமல் தாக்கியுள்ளனர்” என மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று (ஜூலை 1) மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் நேரில் ஆஜராகி அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதைப் படித்து பார்த்து நீதிபதிகள், “உடலில் ஓர் இடம் கூட விடாமல் அடித்துள்ளனர். உடலில் மிளகாய் பொடி தூவியுள்ளனர். அவ்வளவு வெறித்தனமாக தாக்கியுள்ளனர். ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தில் வருபவர்கள் கூட இந்த அளவுக்கு கொடூரமாக தாக்கியிருக்க மாட்டார்கள். காயங்களை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. அதிகாரம் போலீஸாரை இப்படி செய்ய வைத்துள்ளது. விசாரணையின்போது அஜித்குமார் குற்றவாளி இல்லை. முதல் தகவல் அறிக்கையும் இல்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முந்தைய முதல் கட்ட விசாரணையின்போது இப்படி ஒருவரை தாக்கலாமா?” என கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், “வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உயர் அதிகாரியாக இருந்தாலும் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக அரசின் அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.
மனுதாரர் தரப்பில், “நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகே டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “அது தவறு இல்லை. எப்போது நடவடிக்கை எடுத்தால் என்ன? இப்போதாவது நடவடிக்கை எடுத்தார்களே. அதற்கு பாராட்டலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். மக்கள் விரும்பும் நடவடிக்கையை அரசு எடுப்பது சிறப்பானது” என்றனர்.
அரசு தரப்பில், “இந்த சம்பவத்தை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “நீங்கள் எதிர் தரப்பாக இருந்தாலும் இதைத்தான் செய்வீர்கள். சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. அஜித்குமார் கொலை சிறப்புப் படை திட்டமிட்டு செய்த கொலையாகும். ஓர் அரசு தனது குடிமகனை கொலை செய்துள்ளது. இதனால், இதை சாதாரண கொலை வழக்கு போல் இல்லாமல் தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்றனர்.
அதற்கு அரசு தரப்பில், “விசாரணை நியாயமாக பாரபட்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்துக்கு திருப்தி ஏற்பட்டால் விசாரணையை தொடர அனுமதிக்கலாம். நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்ற விரும்பினால் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசு இந்த விஷயத்தில் நேர்மையாக உள்ளது. யாருக்கும் சாதகமாக இல்லை என்பதை வெளிப்படுத்தவே இதைக் கூறுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நீதிபதிகள், “சிபிஐ-க்கு மாற்றுவது தொடர்பாக எழுத்துபூர்வமாக மனு தாக்கல் செய்யுங்கள். அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்றனர். மனுதாரர் தரப்பில், “சிபிஐ-க்கு மாற்றினால் விசாரணை தாமதமாகும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை” எனக் கூறப்பட்டது. “அதனால்தான் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் சிறப்புப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது” என்றனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அஜித்குமார் காவல் மரணம் வழக்கு மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் அஜித்குமார் காவல் மரணம் குறித்து உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும். சிவகங்கை மாவட்ட காவல் துறை அஜித்குமார் காவல் மரணம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை நாளை காலை ஒப்படைக்க வேண்டும். இவற்றை மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாதுகாக்க வேண்டும்.
மாவட்ட நீதிபதி விசாரணை தொடர்பாக ஜூலை 8-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட அனைவரின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், அடுத்தக் கட்ட விசாரணை தொடர்பாகவும் அரசு தரப்பில் ஜூலை 8-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பவத்தை நேரில் பார்வையிட்ட சாட்சிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை ஜூலை 8-க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். | வாசிக்க > அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு