பட மூலாதாரம், Sanchit Khanna/Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, கோடை காலத்தில் ஏசி வெடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, ஏசியை முறையாகப் பராமரிப்பது இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க உதவியாக இருக்கும்.
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இந்தியாவில் வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல பகுதிகளில் வெப்பநிலை 40-45 டிகிரி வரை செல்லத் தொடங்கியுள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசினால் வெப்பம் மேலும் கோரத்தாண்டவம் ஆடுகிறது.
இத்தகைய சூழலில் ஏசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஆனால், அதனுடன் கடும் வெப்பம் காரணமாக அடிக்கடி ஏசி வெடிக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
எனவே ஏசியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்வது அவசியம்.
அப்படி கோடை காலத்தில் ஏசி வெடிக்கும் சம்பவங்கள் ஏன் நடக்கின்றன? ஏசி வெடிப்பதை தவிர்க்க நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
இத்தகைய விபத்துகளைத் தடுக்க பராமரிப்பில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
அதிகரித்து வரும் வெப்பநிலைதான் ஏசி வெடிக்கக் காரணமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவில் புவி வெப்பமடைதலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலையாகத் தெரிகிறது.
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பொருத்தப்பட்டுள்ள ஏசிகள் வெடிப்பதற்கும், அதிகரித்து வரும் வெப்பநிலைக்கும் இடையே தொடர்பு உள்ளது.
ஆனால் இதன் அறிவியல் எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, பிபிசி செய்தியாளர் அர்ஷத் மிசால் ஐஐடி பிஹெச்யு மெக்கானிக்கல் துறையின் பேராசிரியர் ஜஹர் சர்க்கார் உடன் பேசினார்.
குளிர்ச்சிக்கு சுற்றுப்புற (கம்ப்ரஸரைச் சுற்றியுள்ள) வெப்பநிலை, கண்டன்சர் வெப்பநிலையை விட சுமார் 10 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“இந்தியாவில் பொதுவாக ஏசி கண்டன்சரின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். சுற்றுப்புற வெப்பநிலை கண்டன்சரின் வெப்பநிலையை விட அதிகமாகும்போது ஏசி வேலை செய்வதை நிறுத்திவிடும். இந்தச் சூழலில் ஏசி கண்டன்சர் மீது அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக கண்டன்சர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
வேறு எந்த காரணங்களால் ஏசி வெடிக்கலாம்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஏசி வெடிப்பதற்கு கேஸ் லீக் ஆவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிக வெப்பநிலை தவிர, ஏசி தொடர்பான விபத்துகளுக்கு மேலும் சில காரணங்கள் இருக்கலாம்.
கேஸ் லீக்கேஜ்: கண்டன்சரில் இருந்து கேஸ் கசிவதும் ஏசி தொடர்பான விபத்துகளுக்குக் காரணமாகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். கேஸ் குறையும்போது கண்டன்சர் மீது அழுத்தம் அதிகமாகிறது, இதனால் அது அதிக வெப்பமடையத் தொடங்குகிறது. இது தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
அழுக்கான காயில்கள்: ஏசியின் குளிர்ச்சியில் கண்டன்சர் காயில்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இது காற்றில் உள்ள வெப்பத்தை வெளியேற்றுகிறது. அழுக்கு காரணமாக காயில் அடைத்துக் கொள்ளும்போது, கேஸின் இயல்பான ஓட்டத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கண்டன்சர் அதிக வெப்பமடையத் தொடங்கி, தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
மின் அழுத்த ஏற்றத்தாழ்வு : தொடர்ந்து மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதும் கம்ப்ரஸரின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதுவும் விபத்திற்குக் காரணமாக அமையலாம்.
ஏசி வெடிக்காமல் பாதுகாப்பது எப்படி?
பட மூலாதாரம், Indranil MUKHERJEE / AFP via Getty Images
படக்குறிப்பு, நிபுணர்களின் கூற்றுப்படி, வழக்கமான சர்வீஸ் செய்வதன் மூலம் ஏசி வெடிப்பது போன்ற சம்பவங்களைத் தடுக்கலாம்.
அதிக வெயில் இருக்கும்போது ஏசி கம்ப்ரஸரை நிழலில் வைக்கவும். கம்ப்ரஸர் மற்றும் கண்டன்சர் யூனிட்களைச் சுற்றி சரியான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யவும், அப்போதுதான் அந்த யூனிட்கள் அதிக வெப்பமடையாது.
ஏசியை அவ்வப்போது முறையான இடைவெளியில் சர்வீஸ் செய்யவும், இதனால் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அவற்றைச் சரியான நேரத்தில் சரிசெய்ய முடியும்.
ஏர் ஃபில்டர் மற்றும் கூலிங் காயில்களைத் தொடர்ந்து சுத்தம் செய்யவும். இதனால் கம்ப்ரஸர் மீது அதிக அழுத்தம் ஏற்படாது மற்றும் அது சரியாகச் செயல்படும்.
அவ்வப்போது கூலிங் ஃபேனையும் பரிசோதிக்கவும். அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் உடனடியாகச் சரிசெய்யவும்.
தாமிரக் கண்டன்சர்களைக் கொண்ட ஏசிகள், அலுமினிய கண்டன்சர் ஏசிகளை விட விலை அதிகமாக இருந்தாலும், தாமிரமே சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தாமிரம் தண்ணீர் அல்லது காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் வினைபுரிவதில்லை, அதாவது அது அதிக அரிப்பு எதிர்ப்புத் திறன் கொண்டது, அதனால் அதிக வலிமையானது.
தாமிரத்தின் குறைந்த வெப்ப ஏற்புத் திறன் காரணமாக அது விரைவில் வெப்பமடையாது மற்றும் விரைவாகக் குளிர்ச்சியூட்டும். நிபுணர்கள் பெரும்பாலும் அலுமினியத்திற்குப் பதில் தாமிரம் உள்ள ஏசிகளையே பரிந்துரைக்கின்றனர்.
இந்தியாவில் ஏசி விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவில் ஏசி விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் புவி வெப்பமடைதலின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. இப்போது ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
பிபிசி செய்தியின்படி, இந்தியாவின் 30 கோடி வீடுகளில் வெறும் 8 சதவீத வீடுகளில் மட்டுமே ஏசிகள் உள்ளன, அவற்றில் சில வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட யூனிட்கள் உள்ளன. இருந்தபோதிலும், இந்தியாதான் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஏசி சந்தையாக உள்ளது.
எகனாமிக் டைம்ஸ் செய்தியின்படி, 2025-ல் இந்தியாவில் ஒரு கோடியே 40 லட்சம் ஏசி யூனிட்கள் வாங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு உலகளவில் விற்கப்பட்ட 17 கோடி ஏசி யூனிட்களில், சீனா 9 கோடி யூனிட்களை வாங்கியுள்ளது, இந்தியா 1 கோடி யூனிட்களை வாங்கியுள்ளது.
பாரீஸைத் தலைமையிடமாகக் கொண்ட எரிசக்தி சிந்தனைக் குழுவான சர்வதேச எரிசக்தி முகமை (IEA), 2050-க்குள் நாட்டில் வீட்டு ஏசிகளின் எண்ணிக்கை ஒன்பது மடங்கு அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. இது டிவி, பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட மற்ற அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களின் வளர்ச்சியை விட மிக அதிகமாக இருக்கும்.