6
ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ரஷ்ய சுகாதார அமைச்சருடன் அந்நாட்டின் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் 07 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர். இவர்கள் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான SR-288 என்ற விமானம் மூலம் இன்றையதினம் காலை 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையில் இவர்களை வரவேற்பதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன் ஆகியோர் வந்திருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தல், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடம் ஆகியவற்றிற்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

