
1. இயற்கையான குளிர்ச்சி
பிரிட்ஜ் இல்லாத அந்த காலத்தில் களிமண் பானை நீர் இயற்கையாகவே குளிர்ந்த நீரை வழங்கியது. இந்த பானைகள் ‘ஆவியாதல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. அதற்கேற்ப பானையின் மேற்பரப்பில் நுண்ணிய துளைகள் இருக்கும். அவை பானைக்குள் இருக்கும் நீரை சீராகவும் இயற்கையாகவும் குளிர்விக்க உதவிடும். இது வேறு எந்த கொள்கலனிலும் இல்லாத தனித்துவமான பண்பாகும்.

2. தொண்டைக்கு இதமளிக்கும்
பிரிட்ஜுக்குள் இருக்கும் வரை நீர் அதிகப்படியான குளிர்ச்சியுடன் காணப்படும். ஆனால் வெளியே எடுத்ததும் சில நிமிடங்களில் அதிகப்படியான வெப்ப தன்மை நீரை ஆட்கொள்ளும். ஆனால் மண் பானை நீர் கோடை காலத்தில் குடிப்பதற்கு ஏற்ற சரியான வெப்பநிலையில் (இதமான குளிர்ச்சியில்) காணப்படும். அதன் மிதமான குளிர்ச்சி நன்மை தொண்டைக்கு இதமாகவும் இருக்கும். சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்களும் மண்பானை நீரை தயக்கமின்றி பருகலாம். ஆனால் பிரிட்ஜ் நீரை அப்படியே குடித்தால் சளி, இருமல் ஆட்கொண்டு விடும்.

3. வெப்பத்தாக்கத்தைத் தடுக்கும்
கோடை காலத்தில் பலருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான உடல்நலப் பிரச்சனைகளுள் ஒன்று, ‘வெப்ப பக்கவாதம்’. அதாவது அதிகப்படியான வெயில் மற்றும் வெப்பம் காரணமாக உடல் வெப்பநிலை ஆபத்தான நிலைக்கு உயர்ந்து, உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலைக்கு தள்ளப்படும். பானையில் சேமித்து வைக்கப்பட்ட நீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் குளுக்கோஸ் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் உடலுக்கு இதமான குளிர்ச்சி உணர்வையும் வழங்கும் என்பதால் வெப்ப பக்கவாதத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

4. காரத்தன்மை
மனித உடல் இயல்பாகவே அமிலத்தன்மை (அசிடிக்) கொண்டது. ஆனால் களிமண் இயல்பாகவே காரத்தன்மை (அல்கலைன்) கொண்டது. காரத்தன்மை கொண்ட மண் பானையில் சேமித்த நீரை பருகும்போது உடலின் அமிலத்தன்மையுடன் வினைபுரிந்து உடலில் சரியான பி.எச். சமநிலையை உருவாக்க உதவும். இதனால் தான் மண்பானை நீரைப் பருகுவது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

5. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்
பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரை சேமித்து பருகும்போது அதில் ‘பிஸ்பினால் ஏ’ அல்லது ‘பி.பி.ஏ.’ போன்ற நச்சு வேதிப்பொருட்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது. இவை பல வழிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. இந்த வேதிப்பொருட்கள் ஆண்களின் ‘டெஸ்டோஸ்டி ரோன்’ ஹார்மோன் அளவைக் குறைப்பதாகவும், உடலின் நானமில்லாச் சுரப்பி மண்டலத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மாறாக, மண்பானையில் சேமித்து வைக்கப்பட்ட நீரைப் பருகுவது ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்துவதுடன் உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும்.