தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.
வயோதீகம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (ஜூலை 13) அதிகாலை காலமானார்.
வில்லன், குணச்சித்திர நடிகர் என எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று அதற்கு தக்க வகையில் நடிக்கும் திறமை உடையவர் என்று திரையுலக பிரபலங்கள் தங்களின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
கோட்டா சீனிவாச ராவ் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நாற்பதாண்டு கால திரையுலக வாழ்வில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
தமிழில் பெயர் வாங்கிக் கொடுத்த ‘பெருமாள் பிச்சை’
கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.
தொடர்ந்து அவர் தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ். கார்த்தி – சந்தானத்துடன் இணைந்து ‘அழகுராஜா’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவையிலும் அவர் கலக்கியிருப்பார்.
வில்லன் கதாபாத்திரங்களில் அசத்திய சீனிவாச ராவ்
இளம் வயதில் அவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பின்னாட்களில், நாடக கலையால் ஈர்க்கப்பட்ட அவர் திரையுலகிற்கு வந்தார்.
குணசித்திர வேடங்களில் மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர் அவர். கிராமப் புறத்தில் வாழும் நபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திய அவர், நவ நாகரிக கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியும் நடிப்பில் அசத்தினார்.
தெலுங்கில் கிருஷ்ணா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகர்ஜுனா போன்ற பிரபலங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் விக்ரம், விஜய், சிலம்பரசன் ஆகியோரின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
‘ஆஹா! நா பெல்லண்டா’ என்ற படத்தில் பிசினாரி என்ற கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பல பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. வெங்கடேஷ் நடிப்பில் வெளியான கணேஷ் திரைப்படத்தில் அரசியல் தலைவராக நடித்திருக்கும் அவர் தெலுங்கானாவுக்கே உரித்தான தெலுங்கு பேச்சுவழக்கில் மிரட்டியிருப்பார்.
நகைச்சுவை உணர்வுக்காக நன்கு அறியப்பட்டவர் அவர்.
பட மூலாதாரம், UGC
அரசியல்வாதியாகவும் சீனிவாச ராவ்
நடிப்பில் மட்டுமின்றி அவர் அரசியலிலும் ஆர்வம் செலுத்தினார். விஜயவாடா கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1999-ஆம் ஆண்டு அவர் பாஜக சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்புத் திறமைக்காக பல விருதுகளையும் அவர் வென்றுள்ளார். நந்தி, சைமா உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற அவருக்கு 2015-ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு.
கோட்டா சீனிவாச ராவின் திறமையான நடிப்பு குறித்து பல நேரங்களில் நடிகர்களும் இயக்குநர்களும் புகழ்வது உண்டு. மூன்று நாட்களுக்கு முன்பு ஜூலை 10 அன்று, கோட்டா சீனிவாச ராவின் பிறந்த நாளை ஒட்டி இயக்குநர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “நடிகர்கள் உங்களை சிரிக்க வைக்கலாம். சிலர் உங்களை அழ வைக்கலாம். ஆனால் கோட்டாவால் மட்டுமே உங்களை சிரிக்க வைக்கவும், அழ வைக்கவும், அச்சப்படுத்தவும் முடியும்,” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.