• Mon. Sep 23rd, 2024

24×7 Live News

Apdin News

கோழிப்பண்ணை செல்லதுரை | திரைவிமர்சனம் – Vanakkam London

Byadmin

Sep 23, 2024


தயாரிப்பு : விஷன் சினிமா ஹவுஸ்

நடிகர்கள் : ஏகன், யோகி பாபு, பிரிகிடா சாகா, சத்யா தேவி, லியோ சிவகுமார், பவா செல்லதுரை, குட்டி புலி தினேஷ் மற்றும் பலர்.

இயக்கம் : சீனு ராமசாமி

மதிப்பீடு : 2/5

மண் சார்ந்த படைப்புகளை நேர்த்தியாகவும், உணர்வு பூர்வமாகவும் படைத்து தேசிய விருதினை வென்ற படைப்பாளியான சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர் (ரியாஸ்)மற்றும் அவரது மனைவி( ஐஸ்வர்யா தத்தா)க்கு 11 வயதில் ஆண் பிள்ளையும், அதைவிட சிறிய வயதில் பெண் பிள்ளையும் இருக்கிறார்கள்.

கணவர் ஆமியில் பணியாற்றுவதால் கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என விரும்பிய அவரது மனைவி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றின் முகவராக மாறுவதற்கான பயிற்சி முகாமிற்கு செல்கிறார்.

அங்கு நடைபெறும் நிகழ்வில் ஒருவர் திரைப்பட பாடலை பாடுகிறார். அவரது குரலுக்கு அவர் மயங்குகிறாள்.

பிள்ளைகள் பாடசாலைக்கு சென்ற பிறகு.. அந்த பாடகர்-  ராணுவ வீரனின் மனைவி வசிக்கும் வீட்டை தேடி வருகிறார்.

இருவருக்கும் திருமணம் கடந்த உறவு ஏற்படுகிறது. இதனை அக்கம் பக்கத்தினர் ஆமியில் பணியாற்றும் அவரது கணவருக்கு தெரிவிக்க.. அவர் திடீரென்று வருகை தந்து இருவரையும் கையும் களவுமாக பிடிக்க அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்து விடுகிறார்கள்.

மனைவி மீதான கோபத்தை அந்த ராணுவ வீரர் தனக்குப் பிறந்த பிள்ளைகளிடம் காண்பிக்க.. அந்த பிள்ளைகள் வேறு வழியில்லாமல் பாட்டியின் பொறுப்பில் வளர்கிறார்கள்.

பெற்றோரால் கைவிடப்பட்ட அந்த இரண்டு பிள்ளைகளும் பாட்டியின் தயவுடன் சிறிது காலம் கழிக்கிறார்கள். பாட்டியும் இறந்து விட அனாதையாக ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள்.

இந்த தருணத்தில் அவருக்கு அந்த ஊரில் உறவென்று சொல்லிக் கொள்வதற்கு பெரியப்பா பெரியசாமி( யோகி பாபு)இருக்கிறார். அவரிடம் உறவைச் சொல்லி உதவியை கேட்க, அவர் உதவி செய்வதுடன் வேலையும் தருகிறார். அந்த ஆண் பிள்ளை வளர்ந்து தன் தங்கையை கல்லூரிக்கு உயர்கல்வி கற்க அனுப்புகிறார்.

கல்லூரிக்கு சென்ற தங்கை ஒரு வாலிபனை காதலிக்கிறார். இதனை நேரில் காணும் அண்ணன்.. எங்கே தன் தாயின் வழியில் தங்கையும் காதல் என்ற பெயரில் பிரிந்து சென்று, தனக்கு நிரந்தரமான அவமானத்தை ஏற்படுத்தி விடுவாரோ..! என்ற கோபத்தில் உயிராக நினைத்து வளர்த்த தங்கையிடம் சொல்ல விரும்பாத சொல்லக்கூடாத தடித்த சொல்லை உதிர்க்கிறார்.

இதனால் தங்கை துடிதுடித்து போகிறார். அதன் பிறகு அவர்களின் வாழ்க்கையில் என்ன நடைபெற்றது? அவர்களின் வாழ்க்கை விரும்பிய படி நடைபெற்றதா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் கதை.

இதில் பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகளாக இளம் பருவத்து சகோதரர்  சகோதரியாக அறிமுக நடிகர் ஏகன் மற்றும் நடிகை சத்யா தேவி நடித்திருக்கிறார்கள்.

ஏகனுக்கு பெரியப்பா பெரியசாமி எனும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். ஏகனின் தங்கையான சத்யாவை காதலிக்கும் காதலராக நடிகர் லியோ சிவகுமார் நடித்திருக்கிறார்.

அண்ணன் – தங்கை இடையேயான உறவை வலிமையாக பேச நினைத்த இயக்குநர் அதனை அழுத்தமான சம்பவங்களால் விவரிக்காமல் மேலோட்டமாக கடந்து சென்றதால் ரசிகர்களின் மனதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

வாழ்க்கை எப்போதும் புதிரானது எதிர்பாராதது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் திரைக்கதை என்பது ஒரு படைப்பாளியால் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் இனிமையான அனுபவம்.

இதில் இயக்குநர் விரும்பிய வகையில் அளிப்பதை விட கதைக்கு என்ன தேவையோ அதற்கான அழுத்தமான சம்பவங்களை அழகாக கோர்த்து தருவது தான் படைப்பாளியின் முதன்மையான பணி.

அதில் சீனு ராமசாமி தடுமாறி இருக்கிறார்.  செல்லதுரையின் வலி மிகுந்த உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் கவனம் செலுத்த தவறியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம் பிடித்திருந்தாலும் பார்வையாளர்களின் யூகத்திற்கு ஏற்ப கதை பயணிப்பதால் சோர்வும், தொய்வும் ஒரு சேர ஏற்படுகிறது.

இதனால் படத்திற்கு கிடைக்க வேண்டிய வெற்றி குறைகிறது. இருப்பினும் ஏகன் எனும் புதுமுகத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைப்பதற்காகவும் ரசிகர்கள் ஏகன் எனும் அறிமுக நடிகரை ஏற்றுக் கொள்வதற்காகவும் மெனக்கட்ட சீனு ராமசாமியின் நோக்கம் நிறைவேறி இருக்கிறது என்று சொல்லலாம்.

இந்த விடயத்தில் வலிமையான கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தின் பொறுப்பை உணர்ந்து திரையில் தன் இருப்பை உணர்த்த ஏகன் நிறைய சிரமப்பட்டு இருக்கிறார்.

ஆனாலும் நடிகராக வேண்டும் என்ற அவருடைய முயற்சி வெற்றி பெறுகிறது என்றே குறிப்பிடலாம்.

இதனைத் தொடர்ந்து பெரியசாமி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு தன் அனுபவமிக்க நடிப்பால் ரசிகர்களின் மனதை எளிதாக கவர்கிறார்.

படத்தில் உருவத்தில் சிறியவராக தோன்றும் குட்டிப்புலி தினேஷ் சில இடங்களில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார்.

தங்கையாக நடித்திருக்கும் சத்யா தேவி இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார். கதையின் நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சகா ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமாக நடித்து தன் கதாபாத்திரத்தை சொதப்பி இருக்கிறார்.

பார்த்திபன் போன்ற அனுபவம் மிக்க இயக்குநரிடம் பணியாற்றிய பிறகும் தான் ஏற்கும் கதாபாத்திரத்தை  திரைதோன்றலில் நடிப்பால் எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் தேர்ச்சி பெறவில்லையோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறார்.

சீனு ராமசாமியின் படங்களில் ஏதேனும் ஒன்று இரண்டு இடங்களில் அழுத்தமான உரையாடல்கள் இடம் பெறும். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

ஆனால் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் அசோக் குமாரும், இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தனும் பார்வையாளர்களுக்கு ஆறுதலை அள்ளி அள்ளித் தருகிறார்கள். குறிப்பாக என். ஆர். ரகுநந்தனின் பின்னணி இசை சுகமான அனுபவம்.

கோழிப்பண்ணை செல்லதுரை – பார்த்து வாசிப்பதற்கு தவற விட வேண்டிய டிஜிற்றல் நாவல்.

By admin