கோவை குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபராகக் கருதப்படும் டெய்லர் ராஜா என்பவரை 27 ஆண்டுகளுக்குப் பின், கர்நாடகாவில் வைத்து தமிழக காவல் துறை கைது செய்துள்ளது.
தமிழக அரசால் கடந்த 2023ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட தீவிரவாத தடுப்புப் படை இவரை கைது செய்ததற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவின் உதவியுடன் தீவிரவாத தடுப்புப் படையினர், “இவர் உள்படப் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளதாக” தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த 3 முக்கிய நபர்களின் கைது நடவடிக்கையில் 3 மாநில போலீசார் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்தக் கைது நடவடிக்கையைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “கடந்த 2023ஆம் ஆண்டில் தீவிரவாத தடுப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக, நுண்ணறிவுப் பிரிவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்புப் பிரிவு (Anti Terrorism Squad), கடந்த 30 ஆண்டுகளாக தமிழக காவல்துறை, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநில காவல் துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த டெய்லர் ராஜா உள்ளிட்ட 3 பேரை கைது செய்திருப்பதாக” தெரிவித்துள்ளார்.
”உள்நாட்டுப் பாதுகாப்பில் இந்திய அளவில் தமிழக காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். கைது நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில காவல்துறைக்கு நன்றி” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதற்கு தீவிரவாதத் தடுப்புப் படைக்குப் பாராட்டு தெரிவித்தார்.
“தீவிரவாத தடுப்புப் பிரிவு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 40 வழக்குகளைத் தீர்க்க ஆபரேஷன் அறம் மற்றும் அகலி என்ற இரு ஆபரேஷன்களை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
இந்தப் பிரிவின் உறுதிப்பாட்டைப பாராட்டிய சங்கர் ஜிவால் தமிழ்நாடு விரைவில் தீவிரவாத நடவடிக்கைகளில் இருந்து விடுபடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கு
பட மூலாதாரம், Getty Images
கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியன்று, கோவை நகரின் பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் 58 பேர் உயிரிழந்தனர், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, 144 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கிற்காக கோவையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பவர்களில் 56 பேரை குற்றவாளியாக உறுதி செய்த சிறப்பு நீதிமன்றம், அவர்களுக்கு தண்டனையை அறிவித்து, மற்றவர்களை விடுவித்தது.
இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தனித்தனியே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் சிலர் விடுவிக்கப்பட்டனர், சிலர் உடல்நலக் குறைவால் சிறையிலேயே உயிரிழந்தனர்.
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்தபோது, 14 பேர் மட்டுமே சிறையில் இருந்தனர். அவர்களில் முதல் குற்றவாளியான அல்–உம்மா நிறுவனர் பாஷாவை தவிர, மற்ற 13 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
வழக்கு இப்போதும் விசாரணையில் உள்ளது. இவர்கள் அனைவருமே தற்போது பரோலில் வெளியில் உள்ளனர். பாஷா கடந்த டிசம்பரில் உயிரிழந்துவிட்டார்.
கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜா
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 18வது சந்தேக நபராகச் சேர்க்கப்பட்டவர் சாதிக் என்ற டெய்லர் ராஜா. இந்த வழக்கில், டெய்லர் ராஜா, மற்றொரு சந்தேக நபரான முஜிபுர் ரஹ்மான் ஆகிய இருவர் மட்டுமே, காவல்துறையிடம் சிக்காமல் தப்பியிருந்தனர்.
அவர்களில் டெய்லர் ராஜா தற்போது கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ”கோவை வெடிகுண்டு வழக்கிலும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வகுப்புவாத கொலை வழக்குகளிலும் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும், சாதிக், ராஜா, டெய்லர் ராஜா, வளர்ந்த ராஜா, ஷாஜகான் அப்துல் மஜீத் மகந்தார், ஷாஜகான் ஷேக் எனப் பல்வேறு பெயர்களில் வலம் வந்த நபரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
”கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் வசித்து வந்த இவரைத் திட்டவட்டமான மற்றும் நம்பத்தகுந்த உளவுத் தகவலின் அடிப்படையில், தீவிரவாத தடுப்புப் பிரிவினர் மற்றும் கோவை மாநகர காவல்துறையினர் இணைந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாதிக் (எ) டெய்லர் ராஜா, கோவையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதோடு மட்டுமல்லாமல் இவர் குற்றச் செயல்களில் ஈடுபடத் துவங்கிய காலத்தில் இருந்து கைது செய்யப்படாமல் கடந்த 29 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது” என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இவர் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன?
இவர் பல பயங்கரவாத மற்றும் வகுப்புவாத கொலை வழக்குகளில் ஈடுபட்டவர் என்பதோடு “1998 கோவை வெடிகுண்டு வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்” என்று கூறும் அந்த செய்திக்குறிப்பு, “1996ஆம் ஆண்டு கோவையில் பெட்ரோல் குண்டு வீசியதில் ஜெயிலர் பூபாலன் உயிரிழந்த வழக்கிலும், அதே ஆண்டு நாகூரில் சயீதா கொலை வழக்கிலும், 1997ஆம் ஆண்டு மதுரையில் சிறை அதிகாரி ஜெயப்பிரகாஷ் கொலை வழக்கிலும் இவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்” என்றும் கூறியுள்ளது.
இதே செய்திக்குறிப்பில், “இந்தியாவில் மிகவும் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக், முகம்மது அலி (எ) யூனுாஸ் ஆகியோரை ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினரும், கோவை மாநகர காவல் துறையினரும் இணைந்து கைது செய்தனர். நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை கைது செய்தது மூன்றாவது வெற்றிகரமான நடவடிக்கை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் டெய்லர் ராஜாவின் பங்கு என்ன?
கோவை மாநகர காவல்துறையினர் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, சாதிக் என்ற உண்மைப் பெயரைக் கொண்ட டெய்லர் ராஜா, உக்கடம் பிலால் எஸ்டேட்டில் குடியிருந்துள்ளார்.
“அல் உம்மா (Al Ummah) பயங்கரவாத அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருந்த சாதிக், வெடிகுண்டுகளை தயாரிப்பதில் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். பிலால் நகரில் வாடகைக்கு எடுத்த வீட்டில் வெடிகுண்டு தயாரித்து பதுக்கியதாகவும், அவற்றை கோவை குண்டுவெடிப்புக்கு முன்பாக அல் உம்மா உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்ததாகவும் இவர் மீது குற்றப்பத்திரிக்கையில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக” காவல்துறையினர் விளக்கினர்.
டெய்லர் ராஜாவை தீவிரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்ததில், கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் பெரும் பங்காற்றியுள்ளனர்.
கடந்த ஜூன் 30ஆம் தேதியன்று, ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் அபுபக்கர் சித்திக் மற்றும் முகம்மது அலி ஆகியோரை, தமிழக தீவிரவாத தடுப்புப்படையினர் கைது செய்தனர். அப்போது அங்கே கிடைத்த தகவலின் அடிப்படையில்தான், கர்நாடகாவில் டெய்லர் ராஜாவை கைது செய்ததாக காவல் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.
மத்திய உளவுப் பிரிவில் இருந்து கிடைத்த ஒரு தகவலை வைத்து, கோவை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு மேற்கொண்ட புலனாய்வில், இவர்களைப் பற்றி தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கடந்த ஜூன் 30 அன்று அன்னமய்யா மாவட்டத்திலுள்ள ராயசோடியில் வைத்து அபுபக்கர் சித்திக் மற்றும் முகம்மது அலியை தமிழ்நாடு தீவிரவாத தடுப்புப்படையினர் கைது செய்து அழைத்து வந்தனர்.
இவர்கள் இருவர் மீதும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகப் பல்வேறு வழக்குகள் உள்ளன.
அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலியின் பின்னணி என்ன?
அபுபக்கர் சித்திக், நாகூரைச் சேர்ந்தவர். இவர் மீது, கடந்த 1995ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு, அதே ஆண்டில் நாகூரில் பார்சல் குண்டு மூலமாக தங்கம் முத்துக்கிருஷ்ணன் என்பவர் கொல்லப்பட்டது, 2011ஆம் ஆண்டு மதுரையில் அத்வானி பாஜ ரதயாத்திரையை இலக்காகக் கொண்ட குழாய் வெடிகுண்டு முயற்சி, 2012ஆம் ஆண்டு வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை, 2013ஆம் ஆண்டில் பெங்களூரு பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு ஆகிய வழக்குகளில் தொடர்புள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
முகமது அலி, வெடிகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பம் அறிந்தவர் என்றும், 1999ஆம் ஆண்டில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காவல்துறை கட்டடங்களை இலக்காகக் கொண்டு ஒரே நேரத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களில் தொடர்புடையவர் என்றும் காவல்துறையினர் விளக்குகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
இவர்கள் இருவரும் ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்டனர். சாதாரண வழக்கு ஒன்றுக்காக விசாரிக்க வேண்டுமென்று ஆந்திரா போலீசாரிடம் கூறி, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த தமிழ்நாடு தீவிரவாத தடுப்புப் படையினர், அவர்களைக் கைது செய்து, தமிழகத்துக்கு கொண்டு வந்து சிறையில் அடைத்துள்ளனர். கைதுக்கு பிறகே, மேற்கண்ட வழக்குகளில் இவர்களுக்குள்ள தொடர்பை ஆந்திரா போலீசாரிடம் விவரித்துள்ளனர்.
அதன் பிறகு, அவர்கள் இருவரின் வீடுகளை ஆந்திரா போலீஸ் சோதனையிட்டபோது, IED வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கர்னுால் டிஐஜி கோயா பிரவீன் மற்றும் அன்னமய்யா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வித்யாசாகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி தெரிவிக்கிறது.
ஆந்திராவில் கிடைத்த தகவல்; கர்நாடகாவில் நடந்த கைது
ஆந்திராவில் இவர்களைக் கைது செய்தபோது அங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்தான், கர்நாடகாவில் டெய்லர் ராஜாவை கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு போலீசார் மற்றும் தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
அவரைக் கண்காணித்தது, கைது செய்தது ஆகிய நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழிடம் கோவை மாநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் காவல்துறை அதிகாரிகள் விளக்கினர்.
அவர்களின் பாதுகாப்பு கருதி, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் யாருடைய பெயர்களும் வெளியிடப்படவில்லை.
பிபிசி தமிழிடம் பேசிய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரி ஒருவர், ”ஆந்திராவில் கிடைத்த தகவலைக் கொண்டு, டெய்லர் ராஜா கர்நாடகாவில் இருப்பதை உறுதி செய்தபின், நாங்கள் முதலில் ஹூப்ளிக்கு சென்றோம்.
கோவை குண்டுவெடிப்புக்குப் பின் அங்கு சென்ற டெய்லர் ராஜா, தன் பெயரை ஷாஜகான் மகந்தார் என்று மாற்றிக் கொண்டு டெய்லராக இருந்துள்ளார். அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். நாங்கள் அங்கே அவரைத் தேடியபோது, 10 ஆண்டுகளுக்கு முன்பே அவரும் அவருடைய குடும்பமும் விஜயபுரா பகுதிக்குக் குடிபெயர்ந்தது தெரிய வந்தது” என்றார்.
பெயர் மற்றும் இடத்தை மாற்றி வாழ்ந்து வந்த டெய்லர் ராஜா
மேலும் தொடர்ந்த அவர், ”விஜயபுராவில் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அவர் குடியிருந்து வந்துள்ளார். அங்கே அவரை சில நாட்கள் கண்காணித்தோம். அவருடைய பேச்சு, நடவடிக்கை அனைத்தும் அவர் உள்ளூர் நபர் இல்லை என்பதை உறுதி செய்தது.
அந்த ஊரில் விசாரித்தபோது, 10 ஆண்டுகளுக்கு முன்புதான் அவரது குடும்பம் அங்கு வந்ததாகவும், வந்ததில் இருந்து காய்கறி மண்டியில் வேலை பார்த்து வந்ததாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு மிளகாய்க் கடை வைத்ததாகவும் கூறினர். மேலும் சில வழிகளில் அவர்தான் டெய்லர் ராஜா என்பதை உறுதி செய்த பிறகே அவரைக் கைது செய்து அழைத்து வந்தோம்” என்றார்.
சாதிக் என்ற டெய்லர் ராஜா, விஜயபுராவில் தன் பெயரை ஷாஜகான் ஷேக் என்று கூறியிருந்ததாகவும், ஆனால் அவருடைய ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களில் ஷாஜகான் என்ற பெயரே இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோவையில் இருந்து தப்பிச் சென்ற பிறகு, ஆந்திரா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் அவர் இருந்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலை மறுத்த காவல்துறை அதிகாரிகள், அவர் அப்போதிருந்து கர்நாடகாவில்தான் இருந்துள்ளதாக உறுதியாகக் கூறினர்.
முதலில் தன்னைப் பற்றிய தகவல்களை மறுத்த டெய்லர் ராஜா, ஒவ்வோர் ஆதாரத்தையும் அடுத்தடுத்து காண்பித்ததும், உண்மையை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருப்பதாகவும், அதன் பிறகே மேலும் பல தகவல்கள் தெரியுமென்றும் காவல்துறை அதிகாரிகள் தகவல் பகிர்ந்தனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு