• Wed. Jun 24th, 2026

24×7 Live News

Apdin News

கோவை: சடலத்தைத் தோண்டி தங்கச் சங்கிலியை திருடிய நபர்கள்; உருக்கி விற்று பங்கீடு

Byadmin

Jun 24, 2026


மயானத்தில் புதைத்த சடலத்தை தோண்டி நகையை திருடிய 3 பேர்
படக்குறிப்பு, உயிரிழந்த நாகராஜ்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கோவையில் மாநகராட்சி மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை, 9 நாட்களுக்குப் பின் தோண்டி எடுத்து, அதில் இருந்த மூன்றே கால் சவரன் நகையை 3 பேர் திருடிச் சென்று உருக்கி விற்று பங்கிட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவர்களில் ஒருவர், இறந்தவரின் உறவினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற இருவரும் தலைமறைவாகி காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றனர்.

தனது தந்தை ஆசையுடன் அணிந்திருந்த நகையை எடுக்க வேண்டாமென்று கருதி, அந்த நகையை அப்படியே புதைத்துவிட்டதாகவும், பால் ஊற்ற வந்தபோது தலைப்பகுதி தோண்டப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்து விசாரித்தபோது இது தெரியவந்ததாக இறந்தவரின் மகன் பிபிசியிடம் தெரிவித்தார். இடுப்பு அளவு உயரத்தில் புதைக்கப்பட்ட சடலத்தின் தலை இருந்த பகுதியை நள்ளிரவில் வெறும் கையாலேயே தோண்டி அதிலிருந்த நகையை எடுத்திருப்பதாக மயானத்தில் பணிபுரியும் தகவல் பகிர்ந்தார்.

இறக்கும் வரை அணிந்திருந்த மீன் டாலர் சங்கிலி

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலப் பகுதியிலுள்ள செளரிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான மயானம் உள்ளது.

செளரிபாளையம் பகுதியையைச் சேர்ந்த நாகராஜ், கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் இதே பகுதியில் நீண்டகாலமாக மீன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். நாகராஜின் உடலை அவரது குடும்பத்தினர் கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று செளரிபாளையம் மாநகராட்சி மயானத்தில் புதைத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வந்த நாகராஜ், தன்னுடைய கழுத்தில் எப்போதும் மீன் உருவம் பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய ஒரு தங்கச்சங்கிலியை விரும்பி அணிந்ததாக அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். அவரை அடக்கம் செய்தபோது, அந்த சங்கிலியை எடுத்துவிடுமாறு உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் தன் தந்தை மீதான அன்பு காரணமாக அதை எடுக்காமலே புதைக்குமாறு அவருடைய மகன் வெங்கடேஷ்குமார் கூறியுள்ளார்.

By admin