பட மூலாதாரம், Greencare Syed
-
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
கோவை மாவட்டத்தில் சாலை விரிவாக்கம், புதிய புறவழிச்சாலைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருவது குறித்து சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அந்த மரங்களுக்குப் பதிலாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாற்று மரங்களை நடவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், அவினாசி– மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் 1,819 மரங்களுக்குப் பதிலாக வேறிடங்களில் மரங்களை நட வேண்டுமென்று தேசிய பசுமை தீர்ப்பாயம், மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த மரங்களுக்கு ஈடாகவும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மற்ற சாலைகளில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாகவும் வேறிடங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வருவதாக, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளனர்.
என்ன நடக்கிறது?
பசுமைப் பரப்பில் கோவை முதலிடம்
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 6 நகரங்களில் பசுமை மற்றும் வாழ்க்கைச் சூழல் குறித்து, இந்திய தொழிற்கூட்டமைப்பின் கிளை அமைப்பான இந்திய பசுமை கட்டடக்குழு, சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது. ஒரு நகரத்தின் பசுமைப்பரப்பு, செயல் திறன் மற்றும் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு கூறுகளை மதிப்பிடும் இந்த ஆய்வில் கோவை முதலிடம் பெற்றுள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி கூறுகிறது. ஒரு தனிநபருக்கான பசுமைப்பரப்பின் தேசிய சராசரி 24.6 சதுர மீட்டராக இருக்கும் நிலையில், கோவையில் அதுவே 46.6 சதுர மீட்டர் என்ற அளவில் இருப்பதாகச் சொல்கிறது அந்த ஆய்வு.
அதேநேரத்தில், அண்மைக் காலமாக வளர்ச்சிப் பணிகளுக்காக கோவையில் மரங்கள் அதிகமாக வெட்டப்படுவதால் பசுமையும், குளுமையும் மாறிவருவதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சாலை விரிவாக்கத்துக்காகவே அதிகளவிலான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
கடந்த 2006–2011 இடையிலான திமுக ஆட்சியின் போது, கோவை அவினாசி சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட போது ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன. அதன்பின், தடாகம் சாலை, சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை போன்ற சாலைகளும் மாநில நெடுஞ்சாலைத் துறையால் பகுதிவாரியாக விரிவாக்கம் செய்யப்பட்ட போதும் பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டன.
பட மூலாதாரம், Eswaran
கோவையில் அடர்வனத்தில் வளர்க்கப்படும் 5 ஆயிரம் மரங்கள்
கோவையைச் சேர்ந்தவரான மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் 2013 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு (W.P.No.15897 of 2013) தாக்கல் செய்தார். ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 10 மரங்களை நட வேண்டுமென்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மேற்கோள் காட்டி, கோவை நகரில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக வேறிடத்தில் மரங்கள் நட உத்தரவிடக் கோரி, அவர் தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பில் உயர் நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய ஈஸ்வரன், ”அந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில்தான், அவினாசி சாலையில் 10 ஏக்கர் பரப்பில் அடர்வனமாக 5 ஆயிரம் மரங்களையும், சத்தியமங்கலம் சாலையில் சாலையோரங்களில் ஆயிரம் மரங்களையும் மாநில நெடுஞ்சாலைத்துறை வளர்த்துள்ளது. ஆனால் அதற்குப் பின் கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக வேறெங்கும் மரங்கள் நடப்படவில்லை.” என்று குற்றம்சாட்டினார்.
கோவையில் வளர்ச்சிப் பணிக்காக வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, மாற்றாக நடப்பட்ட மரங்கள், மரங்களை ஏலம் விட்டதால் கிடைத்த தொகை, மரங்கள் நட்டு வளர்க்க அரசு செலவிட்ட தொகை உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக இவர் வாங்கியுள்ளார். அந்த விவரங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்த அவர், கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக 23 ஆயிரம் மரங்கள் நடப்பட வேண்டும் என்றார்.
”கோவை–பொள்ளாச்சி சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவாக்கம் செய்த போது 2,239 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதிலிருந்து ரூ.33,21,630 வருவாய் வந்துள்ளது. அதை வைத்து வேறிடத்தில் மரங்களை நட வேண்டிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அந்தப் பொறுப்பை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் ஒப்படைத்து தட்டிக்கழித்துள்ளது.” என்று குற்றம்சாட்டினார் ஈஸ்வரன்.
பட மூலாதாரம், Greencare Syed
ஆர்.டி.ஐ. கேள்விக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில்
ஆனால், பொள்ளாச்சி சாலை விரிவாக்கப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரே, வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக வேறிடத்தில் மரங்களை நடவேண்டுமென்பது ஒப்பந்தத்திலேயே இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பதில் தரப்பட்டுள்ளது. அதன்படி, 24 ஆயிரம் மரக்கன்றுகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் ஒப்பந்ததாரர் ஒப்படைத்துவிட்டதாகவும், அவை கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி வடக்கு வட்டங்களுக்கு தலா 7 ஆயிரம் வீதமும், ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி தெற்கு வட்டங்களுக்கு தலா 5 ஆயிரம் வீதமும் பிரித்துத் தரப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த மரங்கள், எந்தெந்த இடங்களில் நடப்பட்டுள்ளன என்ற விவரங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரியபோது, 10 ஊராட்சிகளில் வளர்க்கப்பட்டுள்ளதாக பதில் தரப்பட்டது. அந்த 10 ஊராட்சிகளிலும் எவ்வளவு மரங்கள் நடப்பட்டுள்ளன என்ற விவரங்களை ஊராட்சி வாரியாக தருமாறு அவர் கேட்டிருந்தார். அதற்கு 8 கிராம ஊராட்சிகளிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
வேறிடத்தில் மரங்கள் எங்கே?
ஆர்.டி.ஐ. பதிலில் குறிப்பிடப்பட்டிருந்த இடங்களில் சென்று பார்த்த போது வடக்குக்காடு என்ற இடத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் வளர்ந்துள்ளதாகவும், வேறெங்கும் மரங்கள் வளர்க்கப்படவில்லை என்றும் ஈஸ்வரன் கூறினார்.
”மரம் வைத்து வளர்க்கும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் ஒப்படைத்தாலும் மரங்கள் வளரும் வரை கண்காணிப்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பொறுப்பாகும். அதைச் செய்யாமல் நீதிமன்ற உத்தரவை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அப்பட்டமாக மீறியுள்ளது. மரக்கன்றுகளை வளர்த்துப் பராமரிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து நிதி எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் செலவிட வேண்டிய தொகையை அரசு ஏன் செலவிட வேண்டும் என்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.” என்று ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில்
இந்த குற்றச்சாட்டுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கோவை திட்ட இயக்குநர் செந்தில் குமார் மறுத்தார். பொள்ளாச்சி சாலையில் மட்டுமின்றி, ஆணையம் மேற்கொண்ட சாலை விரிவாக்கப் பணிகளின் போது வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக வேறிடங்களில் மரங்கள் நடப்படும் பணி நடந்துவருகிறது என்று தெரிவித்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் ஒப்படைக்கப்பட்ட மரங்களை வளர்க்கும் பணியின் தற்போதைய நிலை குறித்து கேட்ட போது, ”மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக மரங்கள் வளர்க்கும் பணி நடந்தாலும், மரங்களை வளர்க்காமல் ஏமாற்றுவதற்கு வாய்ப்பேயில்லை. ஏனெனில் இந்த மரங்களை Geo Tag செய்வதால் எவ்வளவு மரங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பதை கண்டுபிடித்துவிட முடியும். எனக்குத் தெரிய பொள்ளாச்சி சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக மரங்கள் நடப்பட்டுவிட்டன. இருப்பினும் தற்போது புகார் எழுந்திருப்பதால் அதை ஆய்வு செய்த பின்பே பதில் கூற முடியும்.” என்றார்.
இந்நிலையில், தற்போது இரு வழிச்சாலையாகவுள்ள அவினாசி–மேட்டுப்பாளையம் சாலை, ரூ.226 கோடி மதிப்பில் 38 கி.மீ. துாரத்துக்கு 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக 1819 மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பசுமைக்குழு அனுமதியளித்துள்ளது. அதற்கு ஈடாக 10 மடங்கு மரங்களை நடவேண்டுமென்ற நிபந்தனை அடிப்படையிலேயே இந்த அனுமதியை பசுமைக்குழு வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை பதில்
இந்த சாலையில் விரிவாக்கத்துக்காக ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக வெளியான ஒரு செய்தியின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டலக் கிளை, சுயமாக முன்வந்து விசாரித்தது. அதன் அடிப்படையில், இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மாநில நெடுஞ்சாலைத்துறை, முதற்கட்டமாக 13 கி.மீ. துாரத்தில் 477 மரங்களையும், இரண்டாம்கட்டமாக 25 கி.மீ. துாரத்தில் 1342 மரங்களையும் வெட்ட திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அவற்றில், 39 மரங்களை வெட்டாமல் தவிர்த்ததாகவும், 116 மரங்களை மறுநடவு செய்திருப்பதாகவும், 551 மரங்கள் வெட்டப்பட்டிருப்பதாகவும் பட்டியல் தரப்பட்டிருந்தது.
மாநில நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து மரங்களை மறுநடவு செய்யும் பணியை மேற்கொள்ளும் க்ரீன்கேர் அமைப்பின் நிர்வாகி சையது, ”262 மரங்களை மறுநடவு செய்ய திட்டமிடப்பட்டது. இதுவரை 160 மரங்களை மறுநடவு செய்துவிட்டோம். தொடர்ந்து பணிகள் நடக்கின்றன. வெட்டாமலே மேலும் சில மரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்த சாலையில் முதற்கட்டமாக வெட்டப்பட்ட 477 மரங்களுக்குப் பதிலாக 1:10 என்ற விகிதத்தில் 4770 மரங்களை வளர்க்க திட்ட மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவினாசி–மேட்டுப்பாளையம் சாலையில் 3270 மரங்களும், பழைய தேசிய நெடுஞ்சாலைப்பகுதியான அவினாசி–கொச்சி சாலையில் மீதமுள்ள 1500 மரங்களும் நடப்படவுள்ளதாகவும் பசுமை தீர்ப்பாயத்திடம் மாநில நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறையின் உறுதியை ஏற்றுக் கொண்ட பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, சத்யகோபால் கொர்லாபதி ஆகியோர், கடந்த ஜூன் 24-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். அதில், வரும் 2 பருவமழைக் காலத்துக்குள் மீதமுள்ள மரங்களை நட வேண்டுமென்றும், இனிமேல் இந்த சாலையில் கூடுதலாக எந்த மரங்களையும் வெட்டக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
‘ஓராண்டில் ஒரு லட்சம் மரங்களை நட திட்டம்’
பிபிசி தமிழிடம் பேசிய மாநில நெடுஞ்சாலைத்துறையின் கோவை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், ”அவினாசி–மேட்டுப்பாளையம் சாலையில் இதுவரை வெட்டப்பட்ட 1400 மரங்களுக்கு மாற்றாக 14 ஆயிரம் மரங்கள் நடும்பணி நடந்து வருகிறது. மரங்களை வெட்ட வெட்ட மறுநடவும் தொடர்ந்து நடக்கிறது. அதே சாலையில் வாய்ப்புள்ள இடங்களில் மரங்கள் வைக்கப்படுகின்றன. இல்லாதபட்சத்தில் துறைக்குச் சொந்தமான வேறு சில சாலைகளில் மரங்கள் நடப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
கோவை கோட்டத்துக்குட்பட்ட 3 மாவட்டங்களில், சாலை விரிவாக்கத்துக்காக வெட்டிய மரங்களுக்கு மாற்றாக மரங்கள் வைக்கப்பட்டுள்ளன என்று பட்டியலிட்ட கண்காணிப்புப் பொறியாளர் ரமேஷ், இவற்றைத் தவிர்த்து ஆண்டுக்கு 2 ஆயிரம் மரங்கள் வீதமாக துறை சார்பில் பல்வேறு சாலைகளிலும் வைக்கப்படுகின்றன, தற்போது 22 ஆயிரம் மரங்கள் வளர்க்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
இதேபோன்று, கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு 56 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகக் கூறிய மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், இந்த ஆண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார். வெள்ளலுார் குப்பைக்கிடங்கு வளாகம் மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்களில் 25 ஏக்கர் பரப்பளவில் மரங்களை நட திட்டம் உள்ளதாகவும், கோவை நகரில் வெப்பம் அதிகமுள்ள பகுதி கண்டறியப்பட்டு அங்கு பசுமைப்போர்வையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
அடர் வனத்துக்கு இடையில் விமான நிலைய அணுகுசாலை வருமா?
கோவை, அவினாசி சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான 10 ஏக்கரில் அடர்வனமாக வளர்க்கப்பட்டுள்ள 5 ஆயிரம் மரங்களும் விமான நிலைய விரிவாக்கத்தில் புதிய நுழைவாயில் அணுகுசாலைக்காக அகற்றப்படவுள்ளதாகவும் தகவல் பரவியது.
இதுபற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கோவை கோட்டப் பொறியாளர் தனபாலிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”விமான நிலைய விரிவாக்கத்துக்காக இதுவரை அப்படி எந்த முன்மொழிவும் வரவில்லை. அப்படி எடுத்தாலும் சாலைக்கான இடம் மட்டும் எடுக்கவே வாய்ப்புள்ளது. அதையும் மாற்றியமைக்க திட்டமிடலாம். எல் அண்ட் டி புறவழிச்சாலை விரிவாக்கத்துக்காக எடுத்த இடத்துக்கு ஈடாக, தற்போது அந்த 10 ஏக்கர் இடம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு