
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கோவை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், கடந்த மே 21ஆம் தேதி, வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி காணாமல் போனார். அவருடைய பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுநாள் காலையில் சிறுமியின் உடல் அதே பகுதியிலுள்ள ஒரு குளக்கரைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணை நடத்தி, சிறுமியின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர் மோகன் ஆகியோரை கைது செய்தனர். சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அவரைக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சம்பவம் நடந்த 21 நாட்களுக்குள் 819 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் தீர்ப்பு இன்று (27.11.2026) வெளியாகுமென்று போக்சோ நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதற்காக சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் காத்திருந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என்றும், அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை விவரம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என்று நீதிபதி ஹரிஹரன் அறிவித்துள்ளார்.

பெற்றோருடன் சேர்ந்து சிறுமியை தேடிய குற்றவாளி
சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி கார்த்திக் தனது டூ வீலரில் அழைத்துச் சென்று, குளக்கரையில் தோட்டப் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததும், கொலையை மறைக்க மோகன் உதவியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த இரு வாரங்களுக்குள் இந்த சம்பவம் நடந்தது. அதனால் அரசியல் ரீதியாகவும் இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெருமளவில் பேசப்பட்டது. குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வலியுறுத்தி, போராட்டங்கள் நடந்தன. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது இதுபற்றி எக்ஸ் தளத்தில் கருத்துப் பதிவிட்ட முதலமைச்சர் விஜய், “இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச்செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.” எனக் குறிப்பிட்டிருந்தார். கொல்லப்பட்ட சிறுமியின் தாய், தந்தை இருவரிடமும் தனித்தனியாக ஃபோனில் பேசி முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார்.
சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்காமல் உடலை வாங்கமாட்டோம் என்று சிறுமியின் தாய் வழி உறவினர் போராட்டம் நடத்தினர். ஆனால் சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள், காவல்துறை மற்றும் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, உடற்கூராய்வு செய்த சிறுமியின் உடலை வாங்கிச் சென்று, சொந்த கிராமத்தில் இறுதிச்சடங்கு செய்தனர்.

சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.7 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டது. பிபிசி அப்போது சிறுமியின் குடும்பம் வசித்து வந்த கிராமத்திலும், கொலை நடந்த பகுதியிலும் களஆய்வு செய்தது. சிறுமியின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள், அண்டை வீட்டார் அனைவரிடமும் பேசியது.
பிபிசியிடம் சிறுமியின் தாயார் மற்றும் அவருடைய உறவினர்கள் பகிர்ந்த தகவலின்படி, “கொல்லப்பட்ட சிறுமிக்கு 10 வயதாகியிருந்தது. நான்காம் வகுப்பு முடித்து கோடை விடுமுறையில் இருந்த போதுதான் அவர் கொல்லப்பட்டிருந்தார். இவர்களது பக்கத்து வீட்டில் குற்றவாளி கார்த்திக்கும் சில நாட்களுக்கு முன்பு வரை வசித்து வந்துள்ளார். இதனால் சிறுமிக்கும், குற்றவாளிக்கும் ஏற்கெனவே நன்கு அறிமுகம் இருந்துள்ளது.”
சிறுமியின் தாயார் பிபிசி தமிழிடம் கூறுகையில், ”அன்று மாலை 5 மணிக்குதான் நான் கடைசியாக என் மகளைப் பார்த்தேன். ஏழு மணிக்கு என் கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வரை பாப்பா (சிறுமி) வீட்டிற்கு வராததால் பல இடங்களில் தேடினோம். ஆனால் காணவில்லை. உடனே 100க்கு போன் செய்தோம். அடுத்த சிறிது நேரத்தில் போலீசார் வந்துவிட்டனர். நாங்களும் போலீசாரும் தேடியபோது, குற்றவாளி கார்த்திக்கும் எங்களுடன் சேர்ந்து தேடினான். கடைசியாக அவனுடைய ஃபோனிலிருந்துதான் என் மகள் என் கணவரிடம் பேசியிருக்கிறாள்.” என்றார் அவர்.
”அவனுடைய ஃபோனில் அப்பாவிடம் பேசி, எப்போது வருவீர்கள் என்று அவள் கேட்டதற்கு, அவர் ஏழு மணிக்கு வந்து விடுகிறேன், வந்ததும் எல்லோரும் கோவிலுக்குப் போகலாம் என்று கூறியிருக்கிறார். அதனால் 7 மணிக்குதான் வருவார் என்பதைத் தெரிந்து கொண்டு, வண்டியில் குழந்தையை அவன் அழைத்துச் சென்றிருக்கிறான். ஏற்கெனவே அவனைத் தெரியும் என்பதுடன் கார்த்திக்கின் குழந்தைகளுடன்தான் அவள் எப்போதும் விளையாடுவாள் என்பதால் நம்பி அவனுடன் சென்றிருக்கிறாள்.” என்றார் சிறுமியின் தாயார்.
சிறுமியின் தாயாரும் அவருடைய உறவினர்களும் கூறியதன்படி, காவல்துறையினரும், சிறுமியின் குடும்பத்தினரும் குழந்தையைத் தேடியபோது, குற்றவாளி கார்த்திக்கும் சேர்ந்து குழந்தையைத் தேடியிருக்கிறார். மாலையில் ஒரு டூ வீலரில் யாருடனோ சிறுமி ஏறிச்சென்றதைத் தான் பார்த்ததாகக் கூறிய கார்த்திக், அது சிறுமியின் அப்பா என்று நினைத்ததாகவும் போலீசாரிடமும் தகவல் தெரிவித்திருக்கிறார்.
”அவன் சொன்னதை நம்பி சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு டூ வீலரில் ஒருவரின் பின்னால் ஒரு குழந்தை சென்றதைக் காண்பித்து அது எங்கள் குழந்தையா என்று கேட்டனர். பார்த்தபோது அது என் மகள் போல இருந்ததால் ஆமென்று கூறிவிட்டோம். ஆனால் அந்த டூ வீலரில் சென்றது வேறு ஒரு அப்பாவும் மகளும் என்பது பின்பு தெரிந்தது. அதன்பின்பே கார்த்தி மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது” என்று விளக்கினர் சிறுமியின் தாயாரின் சித்தியும் பெரியம்மாவும்.

21 நாட்களில் 819 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
குற்றவாளியை கண்டுபிடித்தது பற்றி பிபிசியிடம் விளக்கிய சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த், ”சிறுமி மாலை 5 மணிக்கே காணாமல் போயிருக்கிறாள். ஆனால் எங்களுக்கு தகவல் வந்தபோதே இரவு 8 மணிக்கு மேலாகிவிட்டது. ஆனால் அப்போதே 5 தனிப்படைகளைப் போட்டு, இரவெல்லாம் தேட ஆரம்பித்து விட்டோம். அதன்பின் சுற்று வட்டாரத்திலுள்ள 240க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில்தான் சில பதிவுகளில் இவருடன் சிறுமி வண்டியில் சென்றது தெரியவந்தது.” என்றார்.
அதன்பின் குற்றவாளியின் செல்போன் இருந்த டவர்களை ஆய்வு செய்து, அவரிடம் விசாரணையைத் துவக்கியதாகக் கூறிய அவர், மறுநாள் மதியம் குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அதற்குப் பின்பே கொலை நடந்த இடத்தைக் காண்பித்ததாகத் தெரிவித்தார். அதற்குப் பின்பு, அன்று மாலையில்தான் சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது.
கார்த்தி மற்றும் மோகன் மீது போக்சோ பிரிவுகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் சம்பவம் நடந்த 21 நாட்களில் 819 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27 அன்று வெளியாகும் என்று போக்சோ நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக, போக்சோ நீதிமன்றத்துக்கு வெளியே, சிறுமியின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், ஏராளமான பெண் வழக்கறிஞர்கள், பொது மக்கள் என பலரும் பெருமளவில் கூடியிருந்தனர்.
மாலை 3:30 மணியளவில், வழக்கின் தீர்ப்பை வாசித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன், கைது செய்யப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். எந்தெந்த பிரிவுகளின் குற்றங்கள் யார் யார் மீது நிரூபிக்கப்பட்டன என்பதையும் அவர் விளக்கினார். இவர்கள் இருவர் மீதான தண்டனைத் தீர்ப்பு, வரும் டிசம்பர் 4 ஆம் தேதி அறிவிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

சிறுமியின் தந்தை கூறியது என்ன?
இதுபற்றி செய்தியாளர்களிடம் விளக்கிய அரசு தரப்பு வழக்கறிஞர் கே.ஆர்.சங்கரன், ”இந்த வழக்கில் 68 அரசுத் தரப்பு சாட்சிகள், 2 எதிர் தரப்பு சாட்சிகள், 221 சான்று ஆவணங்கள் மற்றும் 10 சான்று பொருட்கள் போக்சோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. முதல் எதிரி மீது கூட்டுச்சதி, கொலைக்காக கடத்துவது, இயற்கைக்கு மாறான இச்சைக்காக ஒருவரை கடத்துவது, கொலை, சாட்சியங்களை மறைத்தது, சட்டவிரோதமாக அடைத்து வைப்பது மற்றும் போக்சோ பிரிவுகளில் 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உள்ளிட்ட பிரிவுகளிலும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.” என்றார்.
”பிஎன்எஸ் 87 என்ற பிரிவு அதாவது ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்வதற்காக கடத்துவது என்ற பிரிவில் மட்டும் முதல் எதிரி விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டாம் எதிரி (மோகன்) மீது கூட்டுச்சதி, இயற்கைக்கு மாறான இச்சைக்காக கடத்துவது, குற்றம் செய்யத் தூண்டுவது, சாட்சியங்களை அழிப்பது, தவறான தகவல் தந்து புலன் விசாரணையை திசை திருப்புவது, குற்றம் செய்த ஒருவரைக் காப்பாற்றுவது ஆகிய பிரிவுகளின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.” என்றார் கே.ஆர்.சங்கரன்.
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்தரப்பு வழக்கறிஞர் சசிகுமார், ”இந்த வழக்கில் இரு குற்றவாளிகள் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இரண்டாம் எதிரியின் மீது பதிவு செய்யப்பட்ட பிஎன்எஸ் 140 (1) என்ற பிரிவு, அதாவது கொலை செய்யும் நோக்கத்துடன் கடத்துவது நிரூபிக்கப்படாததால் அதிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தண்டனை விவரம் குறித்த இரு தரப்பு வாதங்களையும் கேட்பதற்காக வரும் வெள்ளிக்கிழமைக்கு (டிசம்பர் 4) வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து எதிர்தரப்பு சார்பில் நிச்சயம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்றார்.
முதல் எதிரியின் குடும்பப் பின்னணி, முந்தைய குற்றப் பின்னணி மற்றும் சிறைச்சாலை நடத்தை ஆகியவை குறித்த அறிக்கையைச் சமூக நலத்துறை மற்றும் நன்னடத்தை அலுவலர்கள் மூலம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

பிபிசியிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் கே.ஆர்.சங்கரன், ”கடந்த மே 21 அன்று நடந்த குற்றத்திற்கு, 7 மாதங்களுக்குள் இத்தனை சாட்சியங்களை நிறுத்தி, மிக விரைவாக குற்றத்தை நிரூபித்திருக்கிறோம். டிசம்பர் 4ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கும்போதுதான் அதிகபட்ச தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு குறித்து தெரியும்.” என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய சிறுமியின் தந்தை, ”கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதில் கொஞ்சம் திருப்திதான். ஆனாலும் தண்டனை அறிவிக்கப்படும் போதுதான், என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்குமா என்பது தெரியவரும். அதுவரைக்கும் எதுவும் பேசுவதற்குத் தயாராகயில்லை.” என்றார் .
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு