இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவரும் மான்செஸ்டர் டெஸ்டில், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, ரிஷப் பந்த் கடைசி டெஸ்டில் (ஓவல்) இருந்து விலகினார்.
கடந்த லார்ட்ஸ் டெஸ்டில் பந்த்-க்கு கையில் காயமேற்பட்ட போது, விக்கெட் கீப்பிங்கை கவனித்துக்கொண்ட துருவ் ஜுரேல், மான்செஸ்டரிலும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், பந்த்திற்கு மாற்று வீரராக தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜெகதீசன் முதல்முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 29 வயதான ஜெகதீசன், லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் கடைசி டெஸ்டுக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜுரேல் இருக்கும் நிலையில், ஜூலை 31 இல் ஓவல் மைதானத்தில் ஜெகதீசன் தனது அறிமுக டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை. ஒருவேளை ஜுரேலுக்கு உடற்தகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் கூட, சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் அனுபவமுள்ள கேஎல் ராகுல் அணியில் இருக்கிறார்.
அதேநேரம், உள்ளூர் கிரிக்கெட்டில் ஜெகதீசன் கடந்த சில வருடங்கள் தொடர்ச்சியாக பங்களித்ததற்கு கிடைத்த வெகுமதி இந்த அழைப்பு என்பதை மறுக்க முடியாது.
பட மூலாதாரம், JayShah
ஜெகதீசன் இந்திய அணிக்கு தேர்வான கதை மிகவும் சுவாரஸ்யமானது. பந்த் தொடரில் இருந்து விலகியவுடன், தேர்வுக்குழுவின் முதல் தேர்வு, ஜார்க்கண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான்தான். பந்த் விபத்தில் சிக்கி, அணியில் இருந்து விலகியிருந்த போது, கிஷான்தான் இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தார்.
தற்போது பிரிட்டனில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் கிஷான் பொருத்தமான தேர்வாக இருக்குமென தேர்வுக்குழு நம்பியது. ஆனால், தான் முழு உடற்தகுதியில் தற்போது இல்லை என்று கூறி வாய்ப்பை கிஷான் மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.
திறமை இருந்தும் சரியான இலக்கு இல்லத்தால் தடுமாறிய ஜெகதீசனுக்கு இந்திய முன்னாள் வீரர் உத்தப்பா வழிகாட்டியாக (Life coach) இருந்துள்ளார். தொழில்முறை கிரிக்கெட்டில் ஏற்படும் அழுத்தங்களை சமாளித்து எப்படி, உற்சாகமாக மனதை வைத்துக்கொள்வது என்பதை உத்தப்பாவிடம் இருந்து ஜெகதீசன் கற்றுக்கொண்டார்.
தோல்வி மனப்பான்மையில் இருந்து வெளியே வந்து, சுதந்திரமாக கிரிக்கெட்டை அணுகியதற்கு ஜெகதீசனுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த நாட்களில், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி உடனான உரையாடல்கள் ஜெகதீசனை செதுக்கியுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு அணியின் துணை கேப்டனாக உள்ள ஜெகதீசன், தனது கிரிக்கெட் வாழ்வில் நிறைய ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். கடந்த சில வருடங்களாக, இந்தியா A அணியின் முக்கிய முகங்களில் ஒருவராக திகழ்கிறார்.
52 முதல் தர போட்டிகளில் (FC) விளையாடி, 47.50 என்ற சராசரியில் 10 சதங்கள், 14 அரைசதங்களுடன் 3373 ரன்கள் குவித்துள்ளார். தொடக்க பேட்ஸ்மேனான இவர், முதல் தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்துள்ளார்.
2018 இல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வான ஜெகதீசனுக்கு ஆடும் லெவனில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அவரை, 2023 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சாம்சன், கிஷான் உள்ளிட்ட இந்திய விக்கெட் கீப்பர்கள் கோலோச்சும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜெகதீசனுக்கு போதிய வெளிச்சம் கிடைக்கவில்லை.
ஆனால், உள்ளூர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஜெகதீசன், அசைக்க முடியாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். 2023 இல் உள்ளூர் 50 ஓவர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்கள் விளாசி உலக சாதனை படைத்தார்.
அருணாசல பிரதேசத்துக்கு எதிராக 141 பந்துகளில் 277 ரன்கள் குவித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இது.
கிரிக்கெட்டை எப்படி தொழில்முறையாக அணுகவேண்டும் என்பதை ஹஸ்ஸியிடம் இருந்து ஜெகதீசன் பாடம் படித்துள்ளார். 30 வயதை நெருங்கிய பிறகுதான், ஹஸ்ஸிக்கும் ஆஸ்திரேலிய அணியின் கதவுகள் திறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து ஊடகங்களில் பேசிய ஜெகதீசன், “இந்திய அணியில் இருந்து அழைப்பு வந்தபோது ஆச்சர்யப்பட்டேன். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது சிறுவயதில் இருந்தே என்னுடைய கனவு. இது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான நகர்வு. இது எனக்கும் என் பெற்றோர், பயிற்சியாளருக்கும் பெருமையான தருணம்” என்றார்.
ஜெகதீசன் இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து முத்த கிரிக்கெட் இதழாளர் ஆர் மோகனிடம் பேசியபோது, “ஓவல் டெஸ்டில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான். ஆனால், இந்திய அணியில் காயம் காரணமாக வீரர்கள் அடிக்கடி விலகுவதை பார்க்கும் போது, எதுவும் சாத்தியமே. இப்போது இல்லையென்றாலும் அடித்து வரும் டெஸ்ட் தொடர்களில் நிச்சயம் ஜெகதீசனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.
ஒருகாலத்தில் சென்னைக்கு குடிபெயர்ந்தால் தான் தமிழக அணியில், இந்திய அணியில் விளையாட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது தமிழ்நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. சேலத்தை சேர்ந்த நடராஜன் முன்பு இந்திய அணியில் இடம்பெற்ற நிலையில், தற்போது கோவையில் வசிக்கும் ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஆர் மோகனிடம் கருத்து கேட்டதற்கு, “ஐபிஎல் வருகைக்கு பிறகு திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அங்கீகரிக்கும் போக்கு உருவாகியுள்ளது. இனிவரும் காலத்தில் இது இன்னும் அதிகரிக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
பட மூலாதாரம், Instagram/jagadeesan_200
தமிழகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம்பெறுவதை பற்றிய கேள்விக்கு, “முன்பு தமிழக வீரர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு காலத் இந்திய அணியை மும்பை+வெங்கட்ராகவன் என்று விளையாட்டாக சொல்வோம். அதாவது 10 மும்பை வீரர்கள், தமிழகத்தை சேர்ந்த ஒரேயொரு வீரர் (வெங்கட்ராகவன்) என்ற அர்த்தத்தில். இப்போது அந்த நிலை மாறியுள்ளது.
அஸ்வின், முரளி விஜய் தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் நிறைய ஆண்டுகள் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். ஜெகதீசனும் சாதிப்பார்” என நம்பிக்கை தெரிவித்தார்.
ஏற்கெனவே, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் என இரு தமிழக வீரர்கள் அணியில் இருக்கும் நிலையில், ஜெகதீசனும் இந்திய அணியில் இணையவுள்ளார். நெருங்கிய நண்பரான சாய் சுதர்சனுடன் இணைந்து உள்ளூர் கிரிக்கெட்டில் பல முக்கியமான பார்ட்னர்ஷிப்களை ஜெகதீசன் அமைத்துள்ளார்.
தற்போது, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் இருவரும் அணியில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திவிட்ட நிலையில், ஜெகதீசனும் வாய்ப்பு கிடைக்கும்போது, தன்னை நிரூபிப்பார் என நம்பலாம்.