
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என உறவினர்கள் சாலை மறியல் நடத்திய நிலையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டிஜிபி) சந்தீர் ராய் ரத்தோர் இன்று கோவை சென்று சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தவெக அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
அறிக்கைகள் மூலம் அவர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் விஜய், “இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது?
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியைக் காணவில்லை என அவருடைய பெற்றோர் கடந்த வியாழக்கிழமை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த சிறுமியை இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது அதில் தெரிய வந்தது.
இந்த நிலையில், நேற்று சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள குளக்கரையில் ஒரு சடலம் இருந்ததைக் கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் மேற்கு மண்டல ஐஜி ரம்யபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
விடியவிடிய போராட்டம்

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு சூலூர் காவல்நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போரட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களமிறங்கியதால் திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஐஜி ரம்யபாரதி நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். காவல்துறை அளித்த உறுதிமொழியை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
கைதான இருவரும் யார்? காவல்துறை தந்த தகவல்கள்
பட மூலாதாரம், TN Police
இதனையடுத்து இந்த வழக்கில் கார்த்தி மற்றும் மோகன் ராஜ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி கோவையில் தங்கி கூலி வேலை செய்து வந்ததாகவும், கைது செய்யப்பட்ட இன்னொரு நபரான மோகன் ராஜ் அவருக்கு உதவியதாகவும் காவல்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
கைது செய்யப்பட்ட கார்த்தி வலது கை மற்றும் வலது கால் முறிந்த நிலையில் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் சிறுமியை கடத்த அவருக்கு உதவியதாகக் கூறப்படும் மோகன் ராஜை போலீசார் சூலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண் குமார் முன்பு ஆஜர்படுத்தினர். அவருக்கு 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்தியை நேரில் சென்று சந்தித்து நீதிபதி அருண் குமார் விசாரணை நடத்தினார்.
காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஷ்வர தயாள் சூலூர் காவல்நிலையம் வருகை தந்தார். அதோடு சம்பவம் நடைபெற்ற இடத்திலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உயிரிழந்த 10 வயது சிறுமியின் உடல் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்த நிலையில் உடற்கூராய்வு முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஷ்வர தயாள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

சிறுமி குடும்பத்தினருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நேரில் சென்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சம்பத்குமார், “சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகளிடம் பேசினேன். காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்படும். உடனடியாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டு இருக்கிறேன். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி தருவதில் அரசு உறுதியாக இருக்கிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். இந்தச் சம்பவம் இதுவே இறுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். குற்றம் செய்பவர்களுக்கு பயம் இருக்க வேண்டும்
எங்கள் அரசு எந்தச் சமரசமும் செய்து கொள்ளாது. குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை கடுமையாக இருக்கும். குற்றம் நடைபெற்ற பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்க கூடிய பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தபடும்.” எனத் தெரிவித்தார்.
ஷார்ட் வீடியோ
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்தச் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், “புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து குற்ற நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது எனக் குறிப்பிட்டுள்ள அவர், “குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தச் சம்பவம் பற்றி குறிப்பிடுகையில், “ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.” என சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், “தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் உறிவினர் ஒருவர் முதலமைச்சர் இன்னும் ஆறுதல் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.
கடும் தண்டனை பெற்றுத் தர முதல்வர் விஜய் உறுதி
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தன்னுடைய எக்ஸ் பதிவில், “சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப் பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
