பட மூலாதாரம், Getty Images
”பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழிகாட்டுவதற்குப் போதிய பின்புலமும் இல்லை. ஆனாலும் தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் சரோஜா தேவி. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள், கலையின் மீதான பக்தியும், சலியாத உழைப்பும். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என்ற தமிழ்ச்சினிமாவின் மூவேந்தர்களும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே அபூர்வத்தாரகை. பொற்காலத் தமிழ் சினிமாவின் வசூல் மகாத்மியமும் அவரே”
சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள பா.தீனதயாளன் அதில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் இவை. இவர்தான் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியவர்.
”திரையுலகில் என்னுடைய துரித வளர்ச்சிக்குக் காரணம் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம்” என்று சரோஜா தேவி, தன்னுடைய கட்டுரையில் பதிவு செய்திருந்தார்.
ஆனால் அத்தகைய பெருமை பெற்ற எம்ஜிஆரின் படங்கள் அதிகமாக விலை பேசப்பட்டதற்கும் சரோஜா தேவி முக்கியக் காரணமாக இருந்தார் என்று பா.தீனதயாளளன் பதிவு செய்கிறார்.
மன்னாதி மன்னன் படச்சுவரொட்டிகளில் சரோஜா தேவியின் ஸ்டில் இல்லாததால் விநியோகஸ்தர்கள், படப்பெட்டியைத் தூக்க மறுத்துப் பின் வாங்கினார்கள் என்ற சரோஜா தேவியின் முக்கியத்துவத்துக்கான அளவுகோல் என்றும் தீனதயாளன் குறிப்பிடுகிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, அவருடைய 87 வது வயதில் இன்று பெங்களூருவில் காலமானார்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரோஜா தேவி, 1955 ஆம் ஆண்டில் தனது 17 வயதில் மகாகவி காளிதாஸ் என்ற கன்னட மொழிப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் 1957 ஆம் ஆண்டில் பாண்டுரங்க மகாத்யம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதற்குப் பின்பே தமிழ்த்திரையுலகில் பாதம் பதித்தார்.
பட மூலாதாரம், UGC
சரோஜா தேவியை தமிழ்த்திரையுலகில் அறிமுகம் செய்தது யார்?
அவரை தமிழ்த்திரையுலகில் அறிமுகம் செய்தது யார் என்பதில் பெரும் போட்டியே இருக்கிறது என்கிறார் தீனதயாளன். ஆனால் சிவாஜி நடித்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நாயகியான ஜமுனாவிடம் தங்கமலை ரகசியத்தைச் சொல்லும் அந்தக் காட்சிதான் சரோஜா தேவியின் அறிமுகக் காட்சி என்கிறார் அவர். ஆனால் சரோஜா தேவியை தமிழகமே ‘யாரிந்த தேவதை’ என்று கேட்க வைத்தது நாடோடி மன்னன் படம்தான்.
எம்ஜிஆர் தயாரித்து இயக்கி நடித்த அந்தப் படத்தில் சரோஜா தேவியின் அழகும், கொஞ்சும் குரலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. அந்தப் படம்தான் அக்காலத்தில் ஒரு கோடி வசூலைத் தொட்டது. அதிலிருந்து வசூல்ராணியாகவே அவர் வலம் வந்ததாக தமிழ்த்திரை விமர்சகர்கள் பலரும் அவரைப் பற்றி ஒருமித்த ஒரு குறிப்பைச் சொல்கின்றனர்.
சரோஜா தேவி நடித்த முதல் படம் ‘தங்கமலை ரகசியம்’ 1957 ஜூன் 29 அன்றுதான் வெளியானது. ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் அதாவது 1960 கோடையில் சரோஜா தேவி உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார் என்று அவருடைய குறுகிய கால அசுர வளர்ச்சியைக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் பா.தீனதயாளன். கடும் உழைப்பும், தொழிலில் பக்தியும் இருந்தாலும் பண விஷயத்தில் சரோஜா தேவியின் தாயார் கறார் என்கிறார் அவர்.
பட மூலாதாரம், UGC
கண்டிப்பு நிறைந்த கன்னடக் குடும்பத்தில் கர்நாடக காவல்துறையில் பணியாற்றி பைரப்பாவின் மகளான சரோஜா தேவியின் தாயார் ருத்ரம்மா, சம்பள விஷயத்தில் ‘கறார் கண்ணம்மா’ என்கிறார் தீனதயாளன்.
தனது மகளுக்கு கேட்ட சம்பளம் கிடைக்கவில்லை என்றால் மறுநொடியே அடுத்த கம்பெனிக்கு டேராவைத் துாக்கி விடுவார் என்று அவர் குறிப்பிடுகிறார்.
அதனால்தான் அவர் திரைத்துறையை விட்டு விலகி, பல ஆண்டுகளான நிலையிலும், பெரும் கோடீஸ்வரியாக ஒரு ராஜ வாழ்க்கையை வாழ்ந்ததாகச் சொல்கிறார் நடிகர் சிவகுமார்.
சரோஜா தேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசிய நடிகர் சிவகுமார், ”வழக்கமாக திரைத்துறையை விட்டு விலகிய பல நடிகைகள் வயதான காலத்தில் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஆனால் 87 வயதிலும் செல்வமும் செல்வாக்கும் மிக்க நல்லதொரு வாழ்க்கையை அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.” என்கிறார் சிவகுமார்.
சிறு வயதிலிருந்தே தான் சரோஜா தேவியின் ரசிகன் என்று குறிப்பிடும் மூத்த நடிகர் விஜயகுமார், ”அவருடைய கொஞ்சும் தமிழ் கேட்பதற்குத் திகட்டாதது. திரையில் மட்டுமின்றி நேரில் பேசும்போதும் அதே கொஞ்சு தமிழில் அன்போடு விசாரிப்பார். எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகளாகிவிட்டாலும் இன்றும் அவருடைய படங்கள் பேசப்படுவது போல, சரோஜா தேவியின் படங்களும் நிலைத்து நிற்கும்.” என்கிறார்.
முதல் முதலாக கன்னடப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் முன், தனக்கு குடும்பத்திலும், பொது வெளியிலும் நிகழ்ந்த அனுபவங்களை ஓர் இதழில் எழுதியிருந்தார் சரோஜா தேவி.
குடும்பத்தில் 3 மகள்களுக்குப் பின் அடுத்ததாவது மகனாகப் பிறக்க வேண்டுமென்று பல கோவில்களுக்கும் சரோஜா தேவியின் பாட்டனார் யாத்திரை போய் வந்தபின்னும் 4 வது மகளாகப் பிறந்தவர் சரோஜா தேவி. சிறு வயதிலேயே முடக்குவாதம். அது சரியாக விரதமிருந்து கோவில் சென்றிருக்கிறார் சரோஜா தேவியின் தாயார் ருத்ரம்மா.
அதற்கு பாட்டனார், ‘இது இருந்தால் என்ன செத்தால் என்ன…இது ஒன்றும் பையன் இல்லையே.. இதற்கு எதற்கு நீ பட்டினி கிடக்கிறாய்’ என்று திட்டுவாராம். அவர்தான் இப்போது என்னை ‘என் செல்லக்கண்ணு’ என்று கொஞ்சுகிறார் என்று தன் வாழ்க்கை அனுபவத்தை பதிந்துள்ளார் சரோஜா தேவி.
பட மூலாதாரம், UGC
யாரென்றே தெரியாமல் எம்ஜிஆருக்கு வணக்கம் சொன்ன சரோஜா தேவி!
‘கச்ச தேவயானி’ என்ற படத்தில் தமிழ்த்திரையுலகின் முதல் கனவுக்கன்னி டிஆர் ராஜகுமாரியை அறிமுகம் செய்த இயக்குநர் கே.சுப்ரமணியம், அந்தப் படத்தின் கன்னடப்பதிப்புக்கு நாயகியாக சரோஜா தேவியை தேர்வு செய்து, அவரின் குடும்பத்தையே சென்னைக்கு குடிபெயர வைத்துள்ளார்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு மதிய உணவு இடைவேளையில் நடந்த ஒரு சுவராஸ்ய நிகழ்வையும் சரோஜா தேவி எழுதியிருக்கிறார்.
”மதிய உணவு இடைவேளை. பக்கத்தில் படப்பிடிப்பில் இருந்த ஹீரோ, அங்கே வந்தார். ஆயிரம் சூரியனின் பிரகாசம் அவரிடம். எல்லோரும் எழுந்து வணக்கம் சொன்னார்கள். நானும் சொன்னேன். யார் இவர் என்று இயக்குநரிடம் கேட்டார் அவர். போகும்போது கன்னடத்தில் ‘செனாதியம்மா’ (செளக்கியமா) என்று கேட்டு விட்டு காஃபி குடிக்கிறியா என்றும் கேட்டார். நான் தலையை மட்டும் ஆட்டினேன். அவர் போன பின்பே, யாரென்று கேட்டேன். எல்லோரும் ஆச்சரியமாக ‘என்ன உனக்கு எம்ஜிஆரைத் தெரியாதா’ என்றார்கள். அப்போ அவர் யாரு, அவர் செல்வாக்கு என்ன எதுவுமே தெரியாது. அப்புறம் வருத்தப்பட்டேன். ஆனால் அன்றைக்குத் தெரியாது. அவருடன் நான்தான் அதிகப்படங்களில் நடிக்கப் போகிறேன் என்று!”
பட மூலாதாரம், UGC
எம்ஜிஆரைப் பற்றி இப்படி எழுதிய சரோஜா தேவி, சிவாஜியைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.
”பாகப்பிரிவினை படத்தில் பிரசவ வேதனையில் நான் நடிப்பது போன்று ஒரு காட்சி. அந்த சூழ்நிலையில் ஒரு பெண் எப்படி இருப்பாளோ அதுபோல நான் துடிதுடிப்பது போல நடிக்க வேண்டும். நான் எப்படி நடிக்க வேண்டுமென்று இயக்குநர் பீம்சிங் நடித்துக் காட்டினார். டேக்கில் எனக்கு பயம் வந்தது. அப்போது சிவாஜி சார்தான், ‘பிரசவ நடிப்புதானே இங்கே வா சரோஜா’ என்று கூப்பிட்டு, அருகிலுள்ள ஒரு மரத்தைக் கட்டிக் கொண்டு அற்புதமாக நடித்துக் காட்டினார். தான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை வைத்து, ஒரு பெண்ணின் உணர்வை அப்படியே நடிப்பில் கொண்டு வந்தார். அதனால்தான் அவர் நடிகர் திலகம்!”
ஜெமினி கணேசனைப் பற்றி, ”காதல் மன்னன் படித்தவர் என்பதை விட பண்பு மிக்கவர். சில நேரங்களில் நானே அவரது நடிப்பில் குறை கூறி, இந்தக் காட்சியில் இப்படி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை கூறுவேன். இவள் என்ன சொல்லித்தருவது என்று கருதாமல் என் யோசனையை உடனடியாக ஏற்றுக் கொள்வார். சினிமாவில் சிருங்காரம் சொட்டும் நடிப்பை எனக்குக் கற்றுத்தந்தவர். காதல் காட்சிகளில் என் நடிப்பு இயற்கையாக இருக்க ஜெமினி அண்ணாச்சியே காரணம்!” என்று சரோஜா தேவி கூறியுள்ளார்.
எம்ஜிஆரை அண்ணன் என்றும், சிவாஜியை ஆசான் என்றும், ஜெமினியை அண்ணாச்சி என்றும் அவர் அழைத்ததாக சரோஜா தேவி வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் தகவல் தெரிவித்துள்ளார் பா.தீனதயாளன்.
கடந்த ஆண்டில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்திருந்த சரோஜா தேவி, தான் நடித்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படம் என்று ‘இருவர் உள்ளம்’ படத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
அந்த படத்துக்கு வசனம் எழுதியவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி. படத்தைப் பார்த்து விட்டு, ‘நல்லா நடிச்சிருக்கே’ என்று கலைஞர் என்னைப் பாராட்டினார் என்று கூறியிருந்தார் சரோஜா தேவி.
எம்ஆர் ராதாவின் ஐடியா!
பாகப்பிரிவினை படத்தில் எம்ஆர் ராதாவை விளக்குமாறால் விளாசுவது போன்று ஒரு காட்சியில் நடிக்க வேண்டிய கட்டாயம் சரோஜா தேவிக்கு. ரத்தக்கண்ணீரில் எம்ஆர் ராதாவின் குரலைக் கேட்டே நடுங்கிப் போன சரோஜா தேவிக்கு இந்த காட்சியில் எப்படி நடிப்பது என்று அச்சம். அப்போதுதான் எம்ஆர் ராதா, இயக்குநருக்கு ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார்.
”நானும் சரோஜாவும் ரூமுக்குள்ள இருக்கிறது மாதிரி முதல்ல படம் பிடிச்சிடுங்க. அதுக்கு அப்புறம் என் அலறல் சத்தம் மட்டும் வெளியே கேட்கும். நான் குய்யோ முய்யோன்னு அடிதாங்காம அலறிட்டு வெளியே ஓடி வருவேன். நம்ம மக்கள் மகா புத்திசாலிங்க. உள்ளுக்குள்ளே என்ன நடந்திருக்கும்னு அவுங்களே யூகிச்சுக்குவாங்க! என்று எம்ஆர் ராதா ஐடியா கொடுத்தார்” என அந்த அனுபவத்தையும் சரோஜா தேவி பதிவு செய்திருக்கிறார்.
தென்னிந்திய திரைப்படங்களில் சரோஜா தேவி நிறையப்படங்களில் நடித்திருந்தாலும் மலையாளப் படத்தில் நடித்தது இல்லை. அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியிருப்பதாகச் சொல்கிறார் பா.தீனதயாளன்.
”அந்தக் காலத்தில் மலையாளப் படங்களில், நடிகைகள் முண்டு எனப்படும் துண்டு மட்டும் அணிந்து நடிப்பார்கள். மலையாளப்படங்களில் நடிப்பதற்கு நிறைய அழைப்புகள் கேரளத்தில் இருந்து வந்தும் எனக்கு அப்படி நடிக்க விருப்பமில்லை.” என்று எழுதியிருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
கூந்தலுக்கு விளக்கெண்ணெய் தேய்த்துக் குளிப்பது, மஞ்சள் பூசிக்குளிப்பதைத் தவிர, அழகிற்காக வேறெதுவும் செய்வது இல்லை என்று சரோஜா தேவி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
உடலை கச்சிதமாக வைத்திருப்பதற்குக் காரணம் கேட்டபோது, ”சின்ன விஷயத்துக்கு ஓஹோன்னு சந்தோஷப்படமாட்டேன். சின்ன துக்கத்தையும் தாங்க முடியாமல் உருகிடுவேன். சாப்பாடு உட்பட எல்லா விஷயத்துலயும் நான் லைட். உடற்பயிற்சி செய்வது கிடையாது. இடையில் பத்தியமா சாப்பிட்டேன். இப்போ அதுவுமில்லை.” என்றார்.
சரோஜா தேவிக்குப் பிடித்தமான விஷயங்கள் என்றும் பா.தீனதயாளன் சில விஷயங்களைப் பட்டியலிட்டுச் சொல்லியிருக்கிறார்.
மல்லிகைப்பூ, மாம்பழம், உதட்டுச்சாயம், வெண்மை நிறச் சேலைகள், கறுப்பு சாந்துப் பொட்டு. இஷ்ட தெய்வம் அனுமான்.
ஒன்ஸ்மோர் படப்பிடிப்பின் போது சிவாஜி வீட்டுச் சாப்பாட்டை முதலில் சாப்பிட மறுத்தபோது, சிவாஜி கூறியதாக ஒரு விஷயத்தை சரோஜா தேவி பதிவு செய்திருக்கிறார்.
”சரோஜா! நமக்கு வேண்டியவுங்க ஒவ்வொருத்தரா போயிட்டே இருக்காங்க. பாலையாண்ணன், சகஸ்ரநாமம், ராதா அண்ணன், எம்ஜிஆர் வரைக்கும் போயாச்சு, நான் பப்பி (ஜெயலலிதா), நீன்னு கொஞ்சம் பேர்தான் இருக்கோம். நம்மள்ல யார் முந்துறோம்னு நமக்குத் தெரியாது. இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா அனுசரனையா இருப்போம்!” என்று சிவாஜி கூறியதாகச் சொல்லியிருக்கிறார்.
சிவாஜி கணேசன் கடந்த 2001 ஜூலை 21 அன்று தனது 72 வது வயதில் இறந்தார். ஜெயலலிதா, 2016 டிசம்பர் 5 அன்று தனது 68 வது வயதில் மரணம் அடைந்தார். சரோஜா தேவி, 2025 ஜூலை 14 அன்று தனது 87 வது வயதில் மரணமடைந்துள்ளார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு