பட மூலாதாரம், Vipin KUmar/Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, அஷுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோர் தங்களது காவல் நீட்டிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர், ஆனால் நீதிமன்றம் அவர்களை மீண்டும் எஸ்.இ.எம் நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டது.கட்டுரை தகவல்
காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர்களான அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. டெல்லி, ஜந்தர் மந்தரில் தடை உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இருவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஐந்து நாட்களுக்கு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, அவர்கள் சிறப்பு நிர்வாக நடுவர் (எஸ்.இ.எம்) முன் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்களுக்குப் பிணை வழங்கப்படவில்லை. இந்த முடிவை எதிர்த்து இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். எனினும் பிணை கோரி மீண்டும் சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர் நீதிமன்றம் அவர்களை அறிவுறுத்தியது.
புதன்கிழமையன்று, சிறப்பு நிர்வாக நடுவர் அவர்களின் பிணைப் பத்திரத்தை ஏற்றுக்கொண்டு, அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார். முன்னதாக, இரு தலைவர்களும் தங்களின் நீதிமன்றக் காவலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் திரும்பப் பெற்றிருந்தனர்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு மீதான விசாரணையின்போது, புதன்கிழமை சிறப்பு நிர்வாக நடுவர் முன் நடைபெறவிருக்கும் விசாரணை வரை காத்திருக்குமாறு ரங்கா மற்றும் தாஸின் வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது.
அவர்கள் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் நேரடியாக ரிட் மனு தாக்கல் செய்வதற்குப் பதிலாக, அவர்கள் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
இதனையடுத்து, நீதிமன்றத்தின் யோசனையை ஏற்றுக்கொண்ட அவர்களின் வழக்கறிஞர்கள் தங்களது மனுவைத் திரும்பப் பெற்றனர்.
பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, சிஜேபி தலைவர்கள் காவல்துறையின் அனுமதியின்றி சமூக ஊடகங்கள் மூலம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
மேல்முறையீட்டு மனுவில் வழக்கறிஞர்கள் வழக்கின் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் வாதிட முடியும். ஆனால் ரிட் மனுவில் முடிவு எடுக்கப்பட்ட நடைமுறை நியாயமானதா இல்லையா என்பது மட்டுமே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தகுதி அல்லது உண்மைத்தன்மை குறித்து நீதிமன்றம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸின் நீதிமன்றக் காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. சிறப்பு நிர்வாக நடுவர் ரிது ராஜ் தலைமையிலான நீதிமன்றம், அக்டோபர் 19ஆம் தேதி இந்த உத்தரவைப் பிறப்பித்தது. அவர்களின் காவலை நீட்டிக்க நீதிமன்றம் இரண்டு முக்கியக் காரணங்களைக் குறிப்பிட்டது.
முதலாவதாக, அவர்களின் முந்தைய நடவடிக்கைகள், சட்டத்தை மதிக்காத போக்கு, பொது அமைதிக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஆகியவை குறிப்பிடப்பட்டன. இரண்டாவதாக, அவர்களுக்காக உத்தரவாதம் அளிக்க முன்வந்தவர்கள் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டது.
ரங்கா மற்றும் தாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தனர்.
சிஜேபி-யின் சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங், இந்த வழக்கை விரைவாக விசாரிக்குமாறு கோரப் போவதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, சனிக்கிழமை சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அக்டோபர் 16ஆம் தேதி, கன்னாட் பிளேஸில் நடந்த “லஹர் தோ திரங்கா” (Lahar Do Tricolour) போராட்டத்திற்கு சற்று முன்னதாக, அவர் தங்கியிருந்த இடத்திலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
பட மூலாதாரம், Raj K Raj/Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, விடுவிக்கப்பட்ட உடனேயே, சிஜேபி தலைவர்கள் மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கத் தொடங்கியதாக காவல்துறை கூறுகிறது.
அக்டோபர் 10 கைது மற்றும் ‘அமைதிப் பத்திரம்’ தொடர்பான சட்டச் சிக்கல்கள்
இந்த விவகாரம் உண்மையில் அக்டோபர் 10ஆம் தேதிதான் தொடங்கியது. டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, காவல்துறை அனுமதியின்றி போராட்டம் நடத்துமாறு சிஜேபி கட்சித் தலைவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக அழைப்பு விடுத்தனர்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடுமென காவல்துறை வாதிட்டது. இதன் அடிப்படையில், அக்டோபர் 10ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் திப்கே, ரங்கா, தாஸ் ஆகியோரை காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்தனர்.
மறுநாளான அக்டோபர் 11ஆம் தேதி, அவர்கள் சிறப்பு நிர்வாக நடுவர் (SEM) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஓர் ஆண்டு காலத்திற்கு அமைதியைக் கடைபிடிப்பதாக உறுதியளித்து, பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் (BNSS) 136வது பிரிவின் கீழ் தலா ரூ.50,000 மதிப்பிலான சொந்தப் பிணை மற்றும் உத்தரவாதப் பிணை வழங்கியதைத் தொடர்ந்து மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
சட்ட வழக்கில் இது “அமைதிப் பிணை” (Peace Bond) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு பகுதியில் அமைதியைப் பராமரிப்பதாகவும், சட்டம் ஒழுங்கைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்றும் ஒருவர் எழுத்துபூர்வமாக உறுதியளிப்பதாகும்.
பிணை மீறல் குற்றச்சாட்டு மற்றும் காவல்துறையின் புகார்கள்
விடுவிக்கப்பட்ட உடனேயே, சிஜேபி தலைவர்கள் மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கத் தொடங்கியதாகக் காவல்துறை கூறுகிறது.
இந்த வழக்கில் புகார்தாரரான உதவி ஆய்வாளர் மோகித் பாட்டி, அக்டோபர் 13ஆம் தேதி காலை அஷுதோஷ் ரங்காவும் சௌரவ் தாஸும் ஜேடியு அலுவலக வளாகத்தின் உட்பகுதியில் இருந்து குதித்து வெளியேறி, ஜந்தர் மந்தரை அடைந்ததாகவும், அங்கு முழக்கங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டதாகவும் சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அக்டோபர் 14ஆம் தேதி சிறப்பு நிர்வாக நடுவர் மகேஷ் குமார் மீனா பிறப்பித்த முதல் காவல் உத்தரவில், காவல்துறையும் நீதிமன்றமும் மிகவும் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தன. ரங்காவும் தாஸும் “பிடிவாதமானவர்கள் மற்றும் ஆக்ரோஷமானவர்கள்” என்றும், “தங்களது செயல்களுக்காக எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை” என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பட மூலாதாரம், Pradeep Gaur/SOPA Images/LightRocket via Getty Images
படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடத்தை, “அவர்களுக்கு சட்டத்தின் மீது எந்த மரியாதையும் இல்லை” என்பதைக் காட்டுவதாக நீதிமன்றம் கடுமையாகக் குறிப்பிட்டது
குற்றம் சாட்டப்பட்ட இருவரின் முந்தைய நடவடிக்கைகளும், அவர்கள் “அதிகாரிகளின் சட்டபூர்வமான உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல்” இருப்பதையும், பொது மக்களை சட்டவிரோதப் போராட்டங்களில் ஈடுபடத் தூண்டுவதில் உறுதியாக இருப்பதையும் காட்டுவதாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கருத்துகள் மற்றும் பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில், நீதிமன்றம் பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 130வது பிரிவின்கீழ் நோட்டீஸ் பிறப்பித்து, அவர்களை ஐந்து நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
காவல் நீட்டிப்பு தொடர்பான சமீபத்திய உத்தரவு கூறுவது என்ன?
அக்டோபர் 19ஆம் தேதி அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சிறப்பு நிர்வாக நடுவர் ரிது ராஜின் நீதிமன்றக் காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்தார். இருவரும் “வேண்டுமென்றே பிணை நிபந்தனைகளை மீறி, பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்” என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடத்தை, “அவர்களுக்கு சட்டத்தின் மீது எந்த மரியாதையும் இல்லை” என்பதைக் காட்டுவதாகவும் நீதிமன்றம் கடுமையாகக் குறிப்பிட்டது. மேலும், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பகுதிகளில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் போக்கை இருவரும் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அவர்களின் கடந்த கால நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளும்போது, அமைதியைப் பராமரிப்பதாக அவர்கள் அளிக்கும் உறுதிமொழிகளை நம்ப முடியாது என்றும் நீதிமன்றம் கருதியது. இதற்கிடையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதாகத் தெரிவிக்கும் “அடையாளம் தெரியாத வாட்ஸ்அப் செய்தி” ஒன்று கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் புதிதாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிணை உத்தரவாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது, காவலை நீட்டித்தமைக்கான மற்றொரு முக்கியக் காரணம். உத்தரவாதப் பிணை ஒன்றில் இடம்பெற்றிருந்த புகைப்படத்திற்கும் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்திற்கும் தெளிவான முரண்பாடு இருப்பதாக நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
மற்றொரு உத்தரவாததாரர், தாஸின் பெற்றோரின் பெயர் மற்றும் முகவரி போன்ற “அடிப்படைத் தகவல்களைக்கூட வழங்கத் தவறிவிட்டார்.” இந்த உத்தரவாததாரர்களுக்குக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
படக்குறிப்பு, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கப்படும் என்ற அச்சம் ஏற்படும்பட்சத்தில், ஒரு நபரைப் பிணைப் பத்திரம் நிறைவேற்றுமாறு கோருவதற்கு பிஎன்எஸ்எஸ்-இன் 126 முதல் 143 வரையிலான பிரிவுகள் நிர்வாக நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கின்றன.
சட்ட நிபுணரின் கருத்து
இந்த முழுச் சட்ட நடைமுறையையும், பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 9வது அத்தியாயத்தின்கீழ் உள்ள தடுப்பு அதிகாரங்களின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் நிபுன் சக்சேனா விவரிக்கிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், “பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 126 முதல் 143 வரையிலான பிரிவுகளின்படி, பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருந்தால், ஒருவர் பிணைப் பத்திரத்தில் கையெழுத்திடுமாறு நிர்வாக நடுவர் உத்தரவிட அதிகாரம் உள்ளது. ஒருவர் இந்த அமைதிப் பிணையை மீறும்போது, 130வது பிரிவின்கீழ் நிர்வாக நடுவர் விசாரணையைத் தொடங்குவார்” என்றார்.
பிணை நிராகரிக்கப்படுவது தொடர்பாகப் பேசிய அவர், பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 140வது பிரிவு, பிணை உத்தரவாதம் அளிப்பவர் தகுதியானவரா இல்லையா என்பதைப் பரிசீலிக்க நிர்வாக நடுவருக்கு அதிகாரம் அளிப்பதாகக் கூறினார். மேலும், “குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொறுப்பேற்கும் நபர்தான் உத்தரவாததாரர். குற்றம் சாட்டப்பட்டவரைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைக்கூட உத்தரவாததாரரால் வழங்க முடியாவிட்டால், நிர்வாக நடுவர் அந்த உத்தரவாதத்தை நிராகரிக்கலாம்” என்றார் சக்சேனா.
இந்தத் தடுப்புப் பிரிவுகளின் கீழ் ஒருவரை அதிகபட்சமாக ஆறு மாதம் வரை காவலில் வைக்க முடியும் என்று தெளிவுபடுத்திய சக்சேனா, இருப்பினும் முந்தைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, “பிணை உத்தரவாதத்தை வழங்க இயலாமை மட்டுமே ஒருவரை நீண்ட காலம் காவலில் வைப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Raj K Raj/Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, “அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவது அமைதிப் பத்திரத்தை மீறுவதாகாது.”
பிரதிவாதியின் சட்ட வாதங்கள்
சிஜேபி தலைவர்களின் வழக்கறிஞரான அபிஷ்தா ஹேலா, இந்தச் சட்ட நடைமுறை முழுவதிலும் நலன் முரண்பாடு இருப்பதாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“காவல்துறை அதிகாரிகள்தான் புகார்தாரர்கள். அவர்கள்தான் [ரங்கா மற்றும் தாஸை] தடுப்புக் காவலில் வைத்து, பின்னர் சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். அந்த நீதிமன்றத்தை நடத்துபவரும் காவல் உதவி ஆணையர் பதவி நிலை அதிகாரிதான்” என்று ஹேலா கூறினார்.
அமைதிப் பிணையை மீறியதாக காவல்துறை கூறுவது குறித்து அவர் சட்டரீதியான வாதத்தை முன்வைத்தார். “ஒருவரின் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவது அமைதிப் பிணையை மீறுவதாகாது. பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போதுதான் அமைதிப் பிணை மீறப்பட்டதாகக் கருதப்படும். ஆனால், அங்கு பொது மக்கள் யாரும் இருக்கவில்லை” என்றார்.
ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், திப்கே விடுவிக்கப்பட்டு, தாஸ் மற்றும் ரங்கா தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருப்பது குறித்துப் பேசிய சக்சேனா, “பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் கீழ் ஒருவர் சொந்தப் பிணை வழங்க வேண்டுமா அல்லது உத்தரவாததாரரை ஏற்பாடு செய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நிர்வாக நடுவருக்கு” இருப்பதாகக் கூறினார்.
அவரது கூற்றுப்படி, திப்கேவிடம் புதிய சொந்தப் பிணையைப் பெற்ற பிறகு அவர் விடுவிக்கப்பட்டிருக்கலாம். அதே நேரத்தில், தாஸ் மற்றும் ரங்கா விவகாரத்தில் நீதிமன்றம் பிணை உத்தரவாதங்களைக் கோருகிறது.
சட்ட நடைமுறையில் இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படுவதாக ஹேலா சுட்டிக்காட்டினார். திப்கேவின் வழக்கில் உத்தரவாததாரர்கள் முறையாகச் சரிபார்க்கப்படவில்லை என்றும், தாஸ் மற்றும் ரங்காவின் வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டு உத்தரவாததாரர்களிடமும் கடும் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.