அரியானாவில் தாதா ஒருவனை காதலிப்பதுபோல் நடித்து அவனை கொல்ல எதிரி கும்பலுக்கு துப்பு கொடுத்த காதலி குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
அரியானாவின் ரோஹ்தக்கில் உள்ள மிலன் தாபாவில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த பரபரப்பான விவரங்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 27ஆம் தேதி அதிகாலை நடந்த இந்த கொலைகளுக்கு பின்னால் ஒரு பெண் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
தாதா சன்னி ரிட்டோலியாவை கொல்வதற்காக, எதிரிக் கும்பல் ஒன்று அமைத்த தேன் பொறியில் அவரும் ஒரு அங்கம் என்பது முதற்கட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
காதலி – உளவாளி
ஜாஹ்னவி என்ற அந்தப் பெண், சன்னி ரிட்டோலியாவின் காதலியாக நடித்து, எதிரிகளுக்கு தகவல்களை கொடுத்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காவல்துறையின் கூற்றுப்படி, சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஜாஹ்னவி சன்னி ரிட்டோலியாவின் கும்பலில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சன்னியுடன் நெருக்கமாகி, அவரது முழு நம்பிக்கையையும் பெற்றுள்ளார்.
எதிரிக்கு தகவல்
தாக்குதல் நடந்த அன்று, சன்னி ரிட்டோலியா மிலன் தாபாவில் இருப்பதாக எதிரியான ஹிமான்ஷு பாவ் கும்பலுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் கிடைத்தவுடன், தாக்குதல் நடத்தியவர்கள் அந்த தாபாவைத் தாக்கியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டின்போது சன்னி ரிட்டோலியா பின்னாலிருந்து சாமர்த்தியமாக தப்பித்தாலும், ரிங்கு, வினீத், யாஷ் மற்றும் ஹிமான்ஷு ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கம்பி நீட்டிய ஜாஹ்னவி
இதன்பின் ஹிமான்ஷு பாவின் கும்பல், ஜாஹ்னவி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உதவியதாகத் தெரியவந்துள்ளது.
கொலைகள் நடந்த மறுநாள், அவர் விமானம் மூலம் பாங்காக்கிற்குத் தப்பிச் சென்றார்.
ஜாஹ்னவியின் பின்னணி
விசாரணையின்போது ஜாஹ்னவியின் குடும்பப் பின்னணியும் சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் இருந்துள்ளது. அவரது தாயார் பாப்லி தேவி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் மீது பல கடுமையான வழக்குகள் உள்ளன என்றும் காவல்துறை கண்டறிந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜாஹ்னவியின் தந்தையும் பாக்பத்தில் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தின் குற்றப் பின்னணிக்கும் இந்தத் தேன் பொறிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
சன்னி ரிட்டோலியா மற்றும் ஹிமான்ஷு பாவ் கும்பல்களுக்கு இடையேயான பழைய விரோதத்தின் விளைவாக இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஐந்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.