6
டமாஸ்கஸில் உள்ள சிரியாவின் இராணுவத் தலைமையகத்தையும், ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள பகுதியில் இஸ்ரேல் விமானப்படை ஏவுகணை, குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவின் ஸ்விடா மாகாணத்தில் வாழும் ட்ரூஸ் மதத்தினருக்கு ஆதரவாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன், ட்ரூஸ்களை சிரியா பாதுகாக்கவில்லையென்றால் அரச படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் மிரட்டியுள்ளது.
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் கவிழ்ந்ததுடன், ஜனாதிபதியாக இருந்த அல் அசாத், ரஷ்யாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், சிரியாவில் ட்ரூஸ் மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருவதுடன், இஸ்ரேலிலும் சிறுபான்மையினராக இருக்கின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் எல்லை மாகாணமான சிரியாவின் ஸ்விடா மாகாணத்தில் வசித்து வரும் ட்ரூஸ் மதத்தினருக்கும், இஸ்லாமிய மதத்தின் சுன்னி பிரிவை சேர்ந்த பெடொய்ன் பழங்குடியிருனருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்தது.
இந்த மோதலை தடுக்க ஸ்விடா மாகாணத்திற்கு கூடுதல் படைகளை சிரியா அனுப்பியதுடன், பெடொய்ன் பழங்குடியிருனருடன் சேர்ந்து அரசப்படைகளும் ட்ரூஸ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், பெரும்பாலானோர் ட்ரூஸ் மதத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இஸ்ரேலில் வசித்து வரும் ட்ரூஸ் மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மக்களை பாதுகாக்கக் கோரி இஸ்ரேலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சிரியா படை தாக்குதலுக்கு அஞ்சி பல ட்ரூஸ்கள் இஸ்ரேலுக்குள் தஞ்சமடைய எல்லையில் குவிந்து வருவதால், இஸ்ரேல் – சிரியா எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.