பட மூலாதாரம், Screengrab
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித் குமார் போலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் 5 காவலர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனைக் கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “போலீஸின் போலி எஃப்.ஐ.ஆர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மேற்பார்வை செய்து விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
சமீப காலமாக, லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனையளிக்கிறது எனக் கூறியுள்ள தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த வழக்கில் முதலமைச்சர் முறையான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு காவல் நிலைய மரணங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கூறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஜூலை 3ம் தேதி கண்டன ஆர்ப்பாடம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்தது.
சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சிவகங்கை காவல் மரண வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் ஜுலை 1ம் தேதி இரவு அறிவித்தார்.
காவல்துறை அத்துமீறல்கள் ஆளுங்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?
பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில் காவல் நிலைய மரணங்கள் மற்றும் சித்ரவதைகளால் விமர்சனங்களைச் சந்திக்கும் திமுக அரசுக்கு அதனால் பின்னடைவு ஏற்படுமா என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு, 2019-ல் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம், 2020 சாத்தான்குளம் காவல்நிலைய மரணம் ஆகிய சம்பவங்களை வைத்து அப்போதைய எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சியாக இருந்த அதிமுகவை குறிவைத்தன.
தற்போது கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள், அம்பாசமுத்திரம், காவல்நிலைய சித்ரவதை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்களால் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைச் சந்தித்த நிலையில் சிவகங்கை காவல் மரணத்தையும் ஒட்டியும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது திமுக அரசு.
பொள்ளாச்சி மற்றும் அண்ணா பல்கலைக்கழக வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வழக்கில் 9 பேரும், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மற்ற வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகின்றன.
காவல்துறை சர்ச்சைகளால் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாகக் கூறுகிறார் பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்ரமணியன், “சென்னையில் விக்னேஷ் என்கிற இளைஞர் காவல்நிலையத்தில் உயிரிழந்தார். சிவகங்கையில் காவல்நிலையத்தில் மரணம் நிகழவில்லை. போலிஸ் விசாரணையில் இருக்கும்போது நிகழ்ந்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் அழுத்தம் மற்றும் அவர்கள் உடந்தையாக இல்லாமல் இத்தகைய சம்பவங்கள் நிகழ வாய்ப்பில்லை. இத்தகைய சம்பவம் நிகழ்வது இது முதல் முறையல்ல. காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைந்து வருவதைத் தான் இது காட்டுகிறது.” என்றார்.
ஆனால் சிவகங்கை சம்பவத்தால் அரசியல் ரீதியாக திமுகவிற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது எனக் கூறும் பத்திரிகையாளர் அய்யநாதன் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களை மேற்கொள் காட்டுகிறார். “கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்கு மிக அருகில் உள்ள விருத்தாசலத்தில் இந்த சம்பவம் நடந்து சில வாரங்கள் கழித்து தான் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக வென்றதே தவிர, பெரிய பின்னடைவைச் சந்திக்கவில்லை. தேர்தல்களில் சட்டம் ஒழுங்கு ஒரு காரணியாக இருக்காது.” என்றார்.
தூத்துக்குடியும் கோவையும்
பட மூலாதாரம், X/Lakshmi Subramanian
தூத்துக்குடியில் அதிமுக பின்னடவைச் சந்தித்ததாகக் கூறுகிறார் பத்திரிகையாளர் லஷ்மி, “சாத்தான்குளம் சம்பவம் நிகழ்ந்தபோது அப்போதைய எதிர்க்கட்சியான திமுக ஆளுங்கட்சிக்கு போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுத்தது. இறுதியில் அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. திமுக சாத்தான்குளம் விவகாரத்தைத் தொடர்ந்து பேசியது, அதிமுக இதனால் சில பின்னடைவுகளைச் சந்தித்தது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் அதிகாரி எவ்வளவு முயன்றும் பிணை கிடைக்காமல் தற்போதும் சிறையில் தான் உள்ளார்.” என்றார்.
சட்டம் ஒழுங்கு மட்டுமே மக்களின் முடிவுகளை தீர்மானிக்கும் கருவியாக இருக்காது எனக் கூறுகிறார் அய்யநாதன்.
“பொள்ளாச்சி சம்பவத்தை எடுத்துக் கொண்டாலும் கோவையில் அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறவே செய்தது. கொலை, கொள்ளை சம்பவங்களால் ஏற்படுகிற தாக்கத்தைப் போல் காவல் மரணங்கள் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. திருநெல்வேலியில் காவல் நிலைய சித்ரவதை வழக்கில் பல்வீர் சிங் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலியில் திமுக பின்னடைவைச் சந்தித்ததா? இத்தகைய வழக்குகளுக்கும் மக்களின் அரசியல், தேர்தல் முடிவுகளுக்கும் பெரிய தொடர்பு இருப்பதில்லை” என்றார்.
இந்த வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனக் கூறும் அவர், “கண்துடைப்பாக இல்லாமல் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதோடு உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரித்தால் தான் இதற்கு சரியான தீர்வு கிடைக்கும். காவல்துறை அதிகாரிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான் இத்தகைய சம்பவங்கள் நடப்பது குறையும்” என்றார்.
அரசியல் அழுத்தம் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பட மூலாதாரம், Facebook/Ayyanathan
லாக் அப் மரணங்கள் போன்று காவல்துறை மீது குற்றச்சாட்டுகள் எழுகின்ற எந்த வழக்கிலும் அழுத்தம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை என்கிறார் பத்திரிகையாளர் அய்யநாதன். இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்று தான் என்று கூறுகிறார்.
“சிவகங்கை காவல் நிலைய மரண வழக்கிலும் கூட நீதிமன்றத்தின் தலையீடு, ஊடகம் மற்றும் சிவில் சமூக அழுத்தத்தினால் தான் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலில் வைப்பது, பணி நீக்கம் செய்வது, கைது செய்வது என எல்லாவற்றையும் கடந்து தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது நீதிமன்ற தலையீட்டால் மட்டும் தான் நடந்துள்ளது.” எனத் தெரிவித்தார்.
அரசியல் அழுத்தம் இல்லாமல் எந்த காவல் மரணங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்கிறார் பத்திரிகையாளர் லஷ்மி.
“ஸ்டெர்லைட் சம்பவத்தில் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியது திமுக. ஆனால் அருணா ஜெகதீசன் அறிக்கை மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையே சம்மந்தப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணை தான் இதற்கு சரியாக இருக்கும்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு