பட மூலாதாரம், Getty Images
பல ஆண்டுகளாக எல்லையில் நிலவிய பதற்றங்களுக்குப் பிறகு, இந்தியாவும் சீனாவும் மெதுவாக உறவுகளை மீட்டெடுக்க முயல்வது போலத் தெரிகிறது. ஆனால், இதில் இன்னும் பெரிய சவால்களும் சந்தேகங்களும் உள்ளன.
கடந்த மாத இறுதியில், இரண்டு மூத்த இந்திய அதிகாரிகள் சீனா சென்றது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அறிகுறியாகக் கருதப்பட்டது.
ஜூன் மாதத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டங்களுக்காக தனித்தனியாக சீனா சென்றனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷ்யா, இரான், பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளைக் கொண்ட யூரேசிய பாதுகாப்பு அமைப்பு. ராஜ்நாத் சிங்கின் பயணம்தான், ஐந்து ஆண்டுகளில் ஒரு மூத்த இந்திய அதிகாரியின் முதல் சீனப் பயணம்.
இந்தியா-சீனா பதற்றத்தின் மையத்தில் 3,440 கிமீ (2,100 மைல்) நீளமுள்ள, தெளிவாக வரையறுக்கப்படாத எல்லை உள்ளது. எல்லையில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் பனி மூடிய பகுதிகள் காரணமாக எல்லைக் கோடு அடிக்கடி மாறுகிறது. இதனால், பல இடங்களில் இரு நாட்டு வீரர்களும் நேருக்கு நேர் மோதுகின்றனர், சில நேரங்களில் சிறிய மோதல்களும் ஏற்படுகின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூனில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படைகளும் மோதியபோது பதற்றம் அதிகரித்தது. 1975ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உயிரிழப்பு ஏற்பட்ட இந்த மோதலில், குறைந்தது 20 இந்திய வீரர்களும் 4 சீன வீரர்களும் உயிரிழந்தனர். அதன் பிறகு, பல இடங்களில் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மோதல்கள் நடந்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
ஆனால், உலக அரசியலில் நிலவும் நிச்சயமற்ற சூழலும், கள நிலைமைகளும் இரு தரப்பையும் சில பிரச்னைகளில் ஒரு பொதுவான தீர்வை எட்ட வைத்துள்ளன. கடந்த ஆண்டு இறுதியில், லடாக்கில் உள்ள முக்கிய மோதல் பகுதிகள் குறித்து இரு நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தை எட்டின.
ஜனவரியில், 2020 மோதலுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட நேரடி விமானங்களை மீண்டும் தொடங்கவும், விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் இந்தியாவும் சீனாவும் உடன்பட்டன. அதே மாதத்தில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய யாத்ரீகர்கள் திபெத்தில் உள்ள புனித கைலாஷ் மலை மற்றும் ஒரு புனித ஏரியைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், இன்னும் சில தடைகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சீனா, இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 127 பில்லியன் டாலர்களை தாண்டியது. இந்தியா, குறிப்பாக அரிய மண் தாதுக்களுக்கு சீன இறக்குமதியைப் பெரிதும் நம்பியுள்ளது. எனவே, பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டுமெனில் எல்லைப் பகுதிகளில் அமைதி மிக முக்கியம்.
சீனாவுடன் உறவை மேம்படுத்த இந்தியா முனைவது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
தைவான் மீது கவனம் செலுத்தி வரும் சீனா, இப்போதைக்கு இந்தியாவுடனான இமயமலை எல்லையில் அமைதியை விரும்புகிறது. ஆனால், உத்தி ரீதியாக, சீனாவின் வளர்ச்சியையும் செல்வாக்கையும் கட்டுப்படுத்த, மேற்கத்திய நாடுகள் இந்தியாவை பயன்படுத்துவதாக சீனா சந்தேகிக்கிறது.
எனவே, எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதோடு, பாதுகாப்புக்காக அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் சார்ந்திருப்பதைக் குறைக்க, சீனா மற்ற துறைகளிலும் முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறது.
சீனாவின் எதிர்பார்ப்புகளில், இந்தியாவுக்கு சீன ஏற்றுமதிகளை அதிகரிப்பது, இந்தியாவில் முதலீடுகளை விரிவாக்குவது, மற்றும் சீன பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்குவது ஆகியவை அடங்கும். (2020 மோதலுக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, இந்தியா ஏராளமான சீன செயலிகளைத் தடை செய்து, சீன முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.)
வேகமாக மாறி வரும் உலக அரசியல், குறிப்பாக டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த பிறகான சூழ்நிலை, சீனாவுடன் உறவை மேம்படுத்த வேண்டிய நிலைக்கு இந்தியாவை தள்ளியிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
“இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய மூலோபாய கூட்டாளியாக இருக்கும் என எதிர்பார்த்தது. ஆனால் வாஷிங்டனிடம் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை,” என நியூயார்க்கின் அல்பானி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டோபர் கிளாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தியா, சீனா உறவில் ரஷ்யாவின் தாக்கம்
பட மூலாதாரம், Anbarasan Ethirajan/BBC
மே 2025இல் பாகிஸ்தானுடனான எல்லை மோதலின்போது, சீனா, பாகிஸ்தான் இடையே வளர்ந்து வரும் ராணுவ ஒத்துழைப்பை இந்தியா கவனித்தது.
நான்கு நாள் மோதலில், சீனாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வான்வழி ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியது. மோதலுக்குப் பிறகு, டிரம்ப் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் போர் நிறுத்தம் ஏற்பட்டதாகப் பலமுறை கூறினார்.
ஆனால், இந்தியா இதை மறுத்து, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசி மோதலை நிறுத்தியதாகவும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் எதுவும் இல்லை என்றும் வலியுறுத்தியது. இது இந்தியாவுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியது.
பின்னர், டிரம்ப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை வெள்ளை மாளிகையில் மதிய விருந்துக்கு அழைத்தது இந்தியாவுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில், அமெரிக்காவும் இந்தியாவும் வர்த்தக உடன்பாட்டை எட்டுவதற்குத் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. ஆகஸ்ட் 1, 2025க்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால், இந்தியா உள்படப் பல நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
“அதிபர் டிரம்பின் இந்தியா-பாகிஸ்தான் மத்தியஸ்தம் மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பற்றிய கருத்துகளால், சீனா போன்ற நாடுகளை அணுகுவதற்கு இதுவே சரியான நேரம் என இந்தியாவில் உணரப்படுவதாக,” கிறிஸ்டோபர் கிளாரி கூறுகிறார்.
பட மூலாதாரம், Anbarasan Ethirajan/BBC
அமெரிக்கா இந்தியாவை, சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்திற்கு எதிரான அரணாகப் பார்ப்பதாக மூலோபாய நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், டிரம்பின் கணிக்க முடியாத தன்மையால், சீனாவுடனான எதிர்கால மோதலில் அமெரிக்கா இந்தியாவுக்கு எந்த அளவு ஆதரவளிக்கும் என்பதில் இந்தியாவுக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய குவாட் பாதுகாப்பு உரையாடல் (Quadrilateral Security Dialogue), டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
“சமீபத்திய ஆண்டுகளில், சீனா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பிரிக்ஸ் குழுமம் போன்ற பிற பலதரப்பட்ட அமைப்புகளிலும் தனது செல்வாக்கை கணிசமாக அதிகரித்துள்ளது” என்று முன்னாள் மூத்த இந்திய தூதர் ஃபன்சோக் ஸ்டோப்டன் கூறுகிறார்.
எனவே, இந்தியா ஒரு நடைமுறை அணுகுமுறையைப் பின்பற்றுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். “ஆனால், உள்நாட்டு காரணங்களுக்காக சீனாவின் கோரிக்கைகளுக்கு அதிகம் இணங்குவதாகத் தோன்றுவதற்கு இந்தியா விரும்பவில்லை,” என்கிறார் கிளாரி.
அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாகவும், அதற்கு ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாகவும் ரஷ்யா இருக்கிறது. இந்நிலையில், சமீப காலமாக ரஷ்யா சீனாவை எவ்வளவு தூரம் ஆதரிக்க தொடங்கியுள்ளது என்பதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
ரஷ்யாவின் யுக்ரேன் படையெடுப்புக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகள், ரஷ்யாவை எரிசக்தி ஏற்றுமதிக்காக சீனாவை சார்ந்திருக்க வைத்துள்ளன. முக்கிய இறக்குமதிகள் மற்றும் முதலீடுகளுக்கும் ரஷ்யா சீனாவை சார்ந்திருப்பது, சீனாவுடனான எதிர்கால மோதலில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து இந்தியாவை எச்சரிக்கையாக இருக்க வைக்கிறது.
அருணாச்சல பிரதேசம் மீதான சீனாவின் உரிமைகோரல்
பட மூலாதாரம், Getty Images
சீனா தனது தொழில்துறை வலிமையைப் பயன்படுத்தி, தனது இறக்குமதியை நம்பியுள்ள நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இந்தியா போன்ற நாடுகள் இந்தக் கட்டுப்பாடுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கலாம் என அஞ்சுகின்றன.
“சீனா இந்தியாவுக்கு எதிராக வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அரிய மண் காந்தங்கள் மற்றும் உரங்கள் போன்ற முக்கிய ஏற்றுமதிகளை நிறுத்துவது, இந்தியாவின் உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளைப் பாதிக்கலாம்,” என்கிறார் முன்னாள் தூதர் ஃபன்சோக் ஸ்டோப்டன்.
ஆட்டோமொபைல், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சுத்தமான எரிசக்தி துறைகளுக்கு அரிய மண் காந்தங்கள் மிகவும் முக்கியம்.
ஏப்ரல் 2025 முதல், சீனா இவற்றின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்து, நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் தொழில் சங்கம், சீனாவின் இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படாவிட்டால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதையடுத்து, இந்திய அரசு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.
சீனா வணிகத்தை மேம்படுத்த ஆர்வமாக இருந்தாலும், இந்தியாவுடனான பிற பிராந்திய சிக்கல்களில் சமரசம் செய்ய எந்த அறிகுறியும் காட்டவில்லை. சமீப ஆண்டுகளில், அருணாச்சல பிரதேசம் (சீனா இதை ‘தெற்கு திபெத்’ என அழைக்கிறது) மீது முழுமையாக உரிமை கோருவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்தியா உறுதியாகக் கூறுகிறது. அந்த மாநில மக்கள் தவறாமல் தேர்தலில் வாக்களித்து தங்கள் அரசைத் தேர்வு செய்வதாகவும், இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்றும் இந்தியா வலியுறுத்துகிறது.
“சீனாவும் இந்தியாவும் இறையாண்மை என்ற கருத்தை விடவில்லை என்றால், அவர்கள் எப்போதும் மோதிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், அருணாச்சல பிரதேசம் (சீனாவின் ‘தெற்கு திபெத்’) குறித்து உடன்பாடு எட்டினால், இரு நாடுகளுக்கும் நிரந்தர அமைதி கிடைக்கும்,” என ஷாங்காயின் ஃபுடான் பல்கலைக் கழக பேராசிரியர் ஷென் டிங்லி பிபிசியிடம் கூறினார்.
தற்போதைக்கு, இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லைப் பிரச்னையை விரைவில் தீர்க்க முடியாது என்று உணர்ந்துள்ளன. இருப்பினும், இரு நாடுகளும் பரஸ்பர நன்மை தரும் உறவை உருவாக்க விரும்புகின்றன. உலகளாவிய வல்லரசுக் கூட்டணிகளை நம்புவதற்குப் பதிலாக, பதற்றங்களை முற்றிலும் தவிர்க்கவே அவை முயல்வதாகத் தெரிகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு