பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்றழைக்கப்படும் தாமோதரன் கோதண்டராமன், 72 வயதில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று (அக்டோபர் 25) காலை உயிரிழந்தார்.
தாமோதரன் கோதண்டராமன் என்ற இயற்பெயரைக் கொண்ட செஃப் தாமு, 1954-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி பிறந்தார். உணவக மேலாண்மை மற்றும் சமையல் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் என்ற பெருமைக்குரியவர்.
சென்னை தரமணியில் உள்ள உணவக மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பட்டயப்படிப்பை முடித்த அவர், 1977-ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேலாண்மைப் பயிற்சியாளராக தனது பணியைத் தொடங்கினார்.
பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பி.காம்., சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பட்டங்களைப் பெற்றார்.
அமெரிக்க ஹோட்டல் மற்றும் மோட்டல் சங்கத்தின் கல்வி நிறுவனத்தில் CHE, CHA தகுதிகளையும், அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக் கழகத்தில் மாநாட்டு மைய மேலாண்மை தொடர்பான பயிற்சியையும் முடித்தார்.
பட மூலாதாரம், Chef_Damu/IG
சமையலுக்காக செஃப் தாமு எழுதிய நூல்கள்
கடந்த 1986-ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்த அவர், பல உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். அவர், ஏராளமான சமையல் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகள், குறிப்பாக செட்டிநாட்டு உணவு வகைகள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
2,700 சமையல் குறிப்புகள் அடங்கிய 17 புத்தகங்களையும், சமையல் கலை மாணவர்களுக்காக நான்கு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவற்றில் ‘Damu’s Home Free Style Cook’ குறிப்பிடத்தக்கது.
ராஜ் டிவி, பொதிகை, ஜெயா டிவி, விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
குறிப்பாக, இவ்வாறாக தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் அறியப்பட்ட அவர், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்றதன் மூலம் பரவலான ரசிகர்களைப் பெற்றார்..
பட மூலாதாரம், Chef_Damu/IG
தமிழ்நாடு அரசின் மதிய உணவுத் திட்டத்தில் செஃப் தாமு பங்களிப்பு
சமையல் துறையைத் தாண்டி, தமிழ்நாடு அரசின் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்திலும் அவர் பங்களித்துள்ளார். 2008 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்ட அவர், எட்டு வகையான சாதங்கள், ஆறு வகை முட்டை உணவுகளை அறிமுகப்படுத்த உதவியதாக குடியரசுத் தலைவர் மாளிகையின் ஆவணம் தெரிவிக்கிறது.
தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 1.40 லட்சம் சத்துணவுப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். மேலும், 13 மாவட்டங்களில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாணவியர் விடுதிகளின் சமையல் பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்கியுள்ளார்.
பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தில் 14 வகையான உணவுகளைத் தயாரிப்பது குறித்து 56 முதன்மைப் பயிற்சியாளர்களுக்குச் செயல் விளக்கமும் அளித்துள்ளார்.
பட மூலாதாரம், Chef_Damu/IG
கின்னஸ் சாதனைகள், விருது
சமையல் துறையில் மூன்று கின்னஸ் உலக சாதனைகளில் செஃப் தாமு இடம்பெற்றுள்ளார். 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி சென்னையில் தொடர்ந்து 24 மணி நேரம், 30 நிமிடங்கள், 12 விநாடிகள் சமையல் செய்து, 190 கிலோ எடையுள்ள 617 உணவு வகைகளைத் தயாரித்து, தனிநபர் தொடர் சமையல் சாதனையைப் படைத்தார்.
அதேபோல, 2012-ஆம் ஆண்டு மதுரையில் உலகின் மிக நீளமான தோசை தயாரித்த சாதனையிலும், 2014-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கறி உணவைத் தயாரித்த சாதனையிலும் பங்காற்றினார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 13 நாட்களில் 12,000 உணவு வகைகளைச் சுவைத்ததாகவும் அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைக் குறிப்பு தெரிவிக்கிறது.
2019-ஆம் ஆண்டு சர்வதேச சமையல் போட்டியில் பங்கேற்பதற்காக அவர் பயிற்சியளித்து அனுப்பிய 10 இந்திய சமையல் கலைஞர்கள் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
சமையல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, 2025-ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.