• Sat. Aug 15th, 2026

24×7 Live News

Apdin News

செஞ்சோலை நினைவுத்தூபி எழுப்பப்படும் | செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலில் ரவிகரன் உறுதி

Byadmin

Aug 15, 2026


முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14ஆம் திகதி இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட விமான குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவிகளின் நினைவாக, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் நினைவுத்தூபி எழுப்பப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் வெள்ளிக்கிழமை (14) வள்ளிபுனம் இடைக்கட்டு சந்திப் பகுதியில் நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

செஞ்சோலைப் படுகொலை என்பது மறக்கவே முடியாத ஒரு துயரச் சம்பவமாகும். ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் படுகொலைகள் இடம்பெற்ற நிலைமைகளும் இருந்தன.

அந்தப் படுகொலைகளின் வரிசையில் செஞ்சோலைப் படுகொலை சற்று வித்தியாசமானது. வெள்ளை தரித்த பாடசாலை மாணவிகள் முதலுதவி பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. வெள்ளை உடைகள் எல்லாம் சிவப்பாக மாறிய கொடூரம் அரங்கேறியது.

ஒரு நாட்டின் அரசாங்கத்தினால் இவ்வாறான கொடூரங்களும் நடத்தப்படும் என்பதை முழு உலகிற்கும் வெளிப்படுத்திக் காட்டுகின்ற சம்பவமாக, இந்த செஞ்சோலைப் படுகொலை அமைகின்றது.

இந்த படுகொலை இடம்பெற்று 20 வருடங்களாகியும், இப்படுகொலை ஏற்படுத்திய ரணமும் வலியும் இன்னமும் ஆறவில்லை.

இந்த பிள்ளைகளை இழந்த பெற்றோரும் உறவினரும் உரித்துடையோரும் இன்றும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர். படுகொலைக்கான நீதியைக் கோருகின்றனர்.

இருப்பினும் இந்த படுகொலைக்கான நினைவுத்தூபி ஒன்று இதுவரை அமைக்கப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது. நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

எனவே எமது பிள்ளைகளை நினைவுகூரும் வகையிலான நினைவுத்தூபி ஒன்று எழுப்பப்படும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நினைவேந்தல் நிகழ்வானது அரசியல் நிகழ்வல்ல. படுகொலை செய்யப்பட்ட எமது பிள்ளைகளை நினைவுகூருவதும், அந்த படுகொலைக்கான நீதியைக் கோருகின்ற ஒரு பொது நிகழ்வாகும்.

எனவே இந்த நினைவேந்தல் நிகழ்விற்கு சகல தரப்பினரும் வருகைதர வேண்டும். இந்த படுகொலை தொடர்பான வரலாறுகள் தற்போதைய மாணவர்களுக்கும் எடுத்துச் சொல்லப்படவேண்டும். அவர்களூடாக எதிர்கால சந்ததியினருக்கும் இந்த வரலாறுகள் கடத்தப்படவேண்டும்.

எத்தடை வருகின்றபோதும் இந்த நினைவேந்தல் நிகழ்வை தொடர்ச்சியாக நடத்தி வருகின்ற ஏற்பாட்டாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

By admin