சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து 1,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு கொசு மருந்து தெளித்து, தேங்கிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை சுற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.
டெங்கு பாதிப்பு
டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாநகராட்சி சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தேங்கி நிற்கின்ற மழை நீரில் ஏடிஸ் வகை கொசு உற்பத்தி ஆகி கடிப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
சளி இருமலுடன் வருகின்ற சாதாரண காய்ச்சல் பாதிப்பும் தற்போது அதிகரித்துள்ளது. இது தவிர டைபாய்டு, எலிக்காய்ச்சல் போன்ற பாதிப்பும் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதித்தவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கூட்டம்
தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இரவு வரை காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு பாசிடிவ் வந்தவர்களுக்கு கொசுவலை முழுவதும் கட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொசு மருந்து மற்றும் வீடுகளை சுற்றியுள்ள கழிவுகள் அகற்றப்பட்டாலும் கூட டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த மாதத்தில் மட்டும் 1219 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் சமீரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
74 பேர் அனுமதி
கடந்த காலங்களை ஒப்பிடும்போது டெங்கு பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது. கட்டுப்பாட்டில் இருக்கிறது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று 74 பேருக்கு டெங்கு பாசிட்டிவ் ஏற்பட்டு உள்ளது. 2024 ல் அதிகமாகவும், 2017ல் மிக அதிகமாகவும் இருந்த டெங்கு பாதிப்பு தற்போது குறைவாக உள்ளது. அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்துகள் மற்றும் தண்ணீர் தேங்கிய இடங்களை கண்டுபிடித்து சுத்தம் செய்யப்படுகிறது. பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். வீட்டை சுற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பழைய பொருட்கள் போன்றவற்றை தெருக்கள் அல்லது வீட்டின் மாடி பகுதியில் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு ஒழிப்பு பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிளாஸ்டிக் கண்டெய்னர்கள் அகற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.