• Thu. Oct 22nd, 2026

24×7 Live News

Apdin News

சென்னையில் 2-ஆவது ஏ.சி. புறநகர் ரெயில்: சோதனை முறையில் நாளை முதல் இயக்கப்படும்

Byadmin

Oct 22, 2026


சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை குளிர்சாதன மின்சார ரெயில் சேவை கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன ரெயில் சேவைக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து, சென்னையில் இரண்டாவது குளிர்சாதன மின்சார ரெயில் சேவை பயன்பாட்டுக்கு வருகிறது.

அதன்படி சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் குளிா்சாதன மின்சார ரயில் சேவை நாளை (அக். 23) முதல் டிசம்பர் 24-ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது.

2-ஆவது ஏ.சி. ரெயில்:

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் குளிா்சாதன மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்ததையடுத்து, தற்போது சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் 2-ஆவது குளிா்சாதன மின்சார ரெயில் சேவை இயக்கப்படவுள்ளது.

அதன்படி, சென்ட்ரல் – ஆவடி, அரக்கோணம், ஆவடி – அரக்கோணம் ஆகிய 3 வழித்தடங்களில் வெள்ளிக்கிழமை (அக். 23) முதல் டிச. 24-ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் இயக்கப்படும்.

5,000 பயணிகள்:

சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டுள்ள 12 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் முழுமையான குளிா்சாதன வசதி, தானியங்கி கதவுகள், அகலமான கண்ணாடி ஜன்னல்கள், கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ரெயில் சுமாா் 5,000 பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்டவை.

இந்த ரயில் ஆவடியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு 7.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். பின்னா், அரக்கோணத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு 9.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். தொடா்ந்து, காலை 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 10.25 மணிக்கு ஆவடி வந்தடையும்.

அதேபோல், ஆவடியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு 6.10 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். பின்னா், அரக்கோணத்தில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, 9.10 மணிக்கு ஆவடி சென்றடையும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin