• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை குடிநீருக்காக கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 1,200 கன அடி கிருஷ்ணா நீர் திறப்பு | 1,200 cubic feet per second Krishna water release from Kandaleru dam for Chennai drinking water

Byadmin

Sep 19, 2024


திருவள்ளூர்: சென்னைக் குடிநீருக்காக, ஆந்திர மாநிலம்- கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 1,200 கன அடி கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என, 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்க வேண்டும். அந்த வகையில், ஆந்திர அரசு, சென்னைக் குடிநீருக்காக ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்கவேண்டிய கிருஷ்ணா நீரை வழங்கவேண்டும் எனக் கோரி, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை முதல் வாரத்தில் கடிதம் எழுதினர்.

இதையடுத்து, சென்னைக் குடிநீருக்காக ஆந்திர மாநிலம் -கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு- கங்கை திட்ட கால்வாய் மூலம் விநாடிக்கு 1, 200 கன அடி கிருஷ்ணா நீரை இன்று காலை 11 மணியளவில், ஆந்திர மாநிலம்- வெங்கடகிரி எம்எல்ஏ ராமகிருஷ்ணா திறந்து வைத்தார். இந்நிகழ்வில், தெலுங்கு கங்கை திட்ட முதன்மைப் பொறியாளர் ராமகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பிறகு, செய்தியாளரிடம் எம்எல்ஏ ராமகிருஷ்ணா கூறியதாவது:“சென்னைக்கு குடிநீருக்காக விநாடிக்கு 1,200 கன அடி கிருஷ்ணா நீர், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவு விரைவில் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும்.

வரும் 31-ம் தேதி வரை தொடர்ந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்கப்படும். அக்டோபர் 1-ம் தேதி முதல், ஆந்திர பகுதியில் உள்ள ஏரிகளை நிரப்பும் விதமாக கிருஷ்ணா நீர் திருப்பிவிடப்படும். தற்போது கண்டலேறு அணையில் 21 டிஎம்சி நீர் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஸ்ரீசைலம் அணையிலிருந்து, சோமசீலா அணை வழியாக கண்டலேறுக்கு நீர் திறந்து விடப்பட்டு 56 டி எம் சி கொள்ளளவை நிரப்பும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வரும் 22-ம் தேதி மாலை வந்தடையும் என எதிர்ப்பார்ப்பதாக தமிழக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



By admin