• Mon. Sep 23rd, 2024

24×7 Live News

Apdin News

சென்னை நாயகன் அஷ்வினின் சகலதுறை ஆட்டம் இந்தியாவை 1 – 0 என முன்னிலையில் இட்டது 

Byadmin

Sep 23, 2024


சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் இந்தியா முன்னிலை அடைந்துள்ளது.

சென்னையை சொந்த ஊராகக் கொண்ட ரவிச்சந்திரன் அஷ்வினின் சகலதுறை ஆட்டம், ரவிந்த்ர ஜடேஜா, ஷுப்மான் கில், ரிஷாப் பான்ட் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த ரவிச்சந்திரன் அஷ்வின் , பங்களாதேஷின் 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து எவ்வித சந்தேககத்திற்கும் இடமின்றி ஆட்டநாயகன் ஆனார்.

இப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு மேலும் 357 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் போட்டியின் நான்காம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தனது இரண்டாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் சகல விக்கெட்களையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.

அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் தனி ஒருவராகப் போராடி 82  ஓட்டங்களைப்   பெற்றார்.

ஷக்கிப் அல் ஹசன் (25) உட்பட கடைசி 6 விக்கெட்கள் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழந்தன.

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 88 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். 101ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அஷ்வின் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களைக் கைப்பற்றிய 37ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய ரவிந்த்ர ஜடேஜா 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி இன்று நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றது.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 376 (ரவிச்சந்திரன் அஷ்வின் 113, ரவிந்த்ர ஜடேஜா 86, யஷஸ்வி ஜய்ஸ்வால் 56, ரிஷாப் பான்ட் 36, ஹசன் மஹ்முத் 83 – 5 விக்., தஸ்கின் அஹ்மத் 55 – 3 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 149 (ஷக்கிப் அல் ஹசன் 32, மெஹ்தி ஹசன் மிராஸ் 27 ஆ.இ., ஜஸ்ப்ரிட் பும்ரா 50 – 4 விக்., ரவிந்த்ர ஜடேஜா 19 – 2 விக்., ஆகாஷ் தீப் 19 – 2 விக்., மொஹமத் சிராஜ் 30 – 2 விக்.)

இந்தியா 2ஆவது இன்: 287 – 4 விக். டிக்ளயாரட் (ஷுப்மான் கில் 119 ஆ.இ., ரிஷாப் பன்ட் 109, கே.எல். ராகுல் 22 ஆ.இ., மெஹிதி ஹசன் மிராஸ் 103 – 2 விக்.)

பங்களாதேஷ் (வெற்றி இலக்கு 515 ஓட்டங்கள்) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 234 (நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 82, ஷத்மான் இஸ்லாம் 35, ஸக்கிர் ஹசன் 33, ரவிச்சந்திரன் அஷ்வின் 88 – 6 விக்., ரவிந்த்ர ஜடேஜா 58 – 3 விக்.)

By admin