சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரத்தில் மிகக் குறுகிய நேரத்தில் மிக கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, பாரிமுனை, கத்திவாக்கம் பகுதிகளில் 30 செமீ வரை மழை பதிவாகியிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்,
இந்தியா முழுவதும் அக்டோபர் 15-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை விடைபெற்று, வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, மாஹி உள்ளிட்ட இடங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
சென்னை இந்தாண்டு பெரியளவில் மழைப்பொழிவை காணாத நிலையில் நேற்று காலையும் வழக்கமான ஒன்றாகவே விடிந்தது. ஆனால், பகலில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை கொட்டத் தொடங்கியது. குறி2ப்பாக, வட சென்னை பகுதிகளில் பலத்தமழை கொட்டியது. பாரி முனை, கத்திவாக்கம் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் அதீத மழைப்பொழிவு இருந்தது.
அதேநேரத்தில், இரவில் வட சென்னையில் மழையின் தீவிரம் குறைய, தென் சென்னையில் கனமழை கொட்டியது. சுமார் 10 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் தொடங்கிய அடைமழை 2 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் கொட்டியது. கிண்டி, நங்கநல்லூர், பல்லாவரம், குரோம்பேட்டை, மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி மற்றும் ஈசிஆர் பகுதிகளில் மழைப்பொழிவு தீவிரமாக இருந்தது.
இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர்ப் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பலரும் சாலையோரம் வாகனங்களை விட்டுவிட்டு ஒதுங்கியிருந்ததை காண முடிந்தது. எதிரே வரும் வாகனங்களே தெரியாத அளவுக்கு கனமழை கொட்டியதால் வேறு வழியின்றி ஒதுங்கி நிற்பதாக நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் தெரிவித்தனர்.
மிக கனமழை எதிரொலியாக, மழைநீர் தேக்கத்தைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மழை தொடர்பான உதவிகளுக்கு மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண்களையும் மாநகராட்சி அறிவித்துள்ளது. மண்டல வாரியாக அந்த தொலைபேசி எண்கள் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
வானிலை ஆய்வு மையம் கணிப்பு
முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆநதிர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், மத்திய கிழக்கு அரபிக் கடல் முதல் குமரிக்கடல் பகுதி வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாகவும் கூறியிருந்தது.
இதேபோல், லட்சத்தீவின் வடக்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், அதில் இருந்து தென்மேற்குசு வங்கக்கடல் பகுதி வரை கேரளா, தமிழக பகுதிகள் வழியா ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
“இதன் காரணமாக, நேற்று(17.10.2026) செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்ட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சை, திருவாரூஐர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். ஏனைய தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
பட மூலாதாரம், imd chennai
‘சென்னையில் 30 செமீ மழை’
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அந்த கணிப்பு உண்மையாகியிருக்கிறது. சென்னையில் மழைப்பொழிவு குறித்த புதிய அப்டேட்டை வானிலை ஆய்வு மையம் இன்னும் வெளியிடாத நிலையில், தனியார் வானியலாளர்கள் மழைப்பொழிவு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர் தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னையில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்து ஒரு எக்ஸ் பதிவில்”என்ன சொல்வதென்றே தெரியவில்லை! தென் சென்னையின் மேல் திரண்டிருந்த அடர்ந்த மழை மேகங்கள் மெல்லமெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து, மத்திய சென்னையை அடைந்து, மீண்டும் வட சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே பலத்த மழையைச் சந்தித்த பகுதிகளில், மீண்டும் மழை பெய்யக்கூடும். ஏற்கனவே கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்திய மற்றும் வட சென்னையின் சில பகுதிகளில், மழையின் தீவிரம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இது ஏற்கனவே தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் சூழலை மேலும் மோசமாக்கக்கூடும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளைத் தவிர்த்து, மழை தொடரும் சூழலில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஹேமச்சந்தர் என்ற தனியார் வானிலை ஆய்வாளரும் சென்னை பாரிமுனை மற்றும் கத்திவாக்கம் பகுதிகளில் மழைப்பொழிவு 31 சென்டிமீட்டரை நெருங்கியுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மழைப்பொழிவு அளவு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மழைப்பொழிவு எப்படி இருக்கும்?
பட மூலாதாரம், imd chennai
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருசசி, பெரம்பலூர், திருவண்ணாமலை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தின் அநேக இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘எல் நினோவால் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும்’
எல் நினோ காரணமாக, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக மழையும் வெள்ளமும் ஏற்படலாம் என்றும், அதன்பிறகு தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, கடுமையான வெப்பம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசின் நிபுணர் குழு ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2026-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் இயல்பைவிட அதிக மழை பெய்யக்கூடும் என்று பருவகாலக் கணிப்பு தெரிவிப்பதாக அறிக்கை கூறுகிறது.
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இயல்பைவிட 50 முதல் 200 மில்லி மீட்டர் வரை கூடுதல் மழை பெய்யக்கூடும் என்ற கணிப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.