• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை: மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 3 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீஸாருக்கு பாராட்டு | Kudos to the Railway Police for recovering the 3 Sawaran jewels that were lost by the passenger in the electric train

Byadmin

Sep 16, 2024


சென்னை: சூலூர்பேட்டையில் இருந்து சென்னை கடற்கரைக்கு சென்ற ரயிலில் பெண் பயணி தவறவிட்ட 3 சவரன் தங்க நகை, புதிய ஆடைகள் அடங்கிய பையை ரயில்வே போலீஸார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்.பி.எஃப் போலீஸாரை ரயில்வே காவல் உயரதிகாரிகள் பாராட்டினர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள எளாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி ஹேமலதா. இவர் தனது கணவருடன் தாய் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தார். அதன்படி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட்ட மின்சார ரயிலில் எளாவூர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6.10 மணிக்கு ஏறினார்.

இந்த ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தை இரவு 7.40 மணிக்கு அடைந்தது. உடனடியாக, ரயிலில் இருந்து இருவரும் இறங்கிச் சென்றபோது, 3 சவரன் நகை மற்றும் புதிய ஆடைகள் அடங்கிய பையை ரயிலில் தவறவிட்டதை அறிந்து ஹேமலதா அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸில் அவர் தகவல் கொடுத்தார். இதன்பேரில், சென்னை கடற்கரை ஆர்.பி.எஃப் போலீசுக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ஆர்.பி.எஃப் போலீஸார் அந்த ரயில், நிலையத்தை அடைந்தவுடன், ஹேமலதா பயணம் செய்த பெட்டியில் இருந்த நகை மற்றும் பையை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஹேமலதாவுக்கு ரயில்வே போலீஸார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அவரது கணவர் சந்தோஷ் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்து, மனைவியின் 3 சவரன் நகை மற்றும் புதிய ஆடைகள் அடங்கிய பையை பெற்றுக்கொண்டார். அப்போது, ரயில்வே போலீஸாருக்கும், ஆர்.பி.எஃப் போலீஸாருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

துரிதமாக செயல்பட்டு 3 சவரன் நகை மற்றும் பையை மீட்டு கொடுத்த ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்பிஎஃப் போலீஸாரை ரயில்வே காவல் உயரதிகாரிகள் பாராட்டினர்.



By admin