யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு துரித நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதன்போது அந்தக் கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
”இன்று தமிழர் பிரதேசங்களில் மனிதப் புதைகுழிகள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டு என்புக்கூடுகள் நூற்றுக்கணக்கில் மீட்கப்பட்டு வருகின்றன.
இவை அனைத்தும் காணாமல் ஆக்கப்பட எமது உறவுகளின் உடலங்களின் எச்சங்களாகவே இருக்கும் என எண்ணத் தோன்றுகின்றது.
ஆனாலும், அவை எவற்றுக்கும் இதுவரை நியாயமோ – பரிகாரங்களோ கிடைக்கவில்லை. மாறாக இழுத்தடிப்புகளும் மறைப்புகளுமே இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்றது. இதைப் பிரித்தானிய அரசு வழங்கிய காலத்திலேயே தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையே அரசியல் இழுபறி இருந்து வந்தது.
ஆனாலும் , அதைப் பிரித்தானிய அரசோ அன்றி அன்றைய தமிழ்த் தலைவர்களோ கண்டுகொள்ளவில்லை.
அன்றைய தமிழ்த் தலைவர்களும் சிங்கள தேசம் வழங்கிய சலுகைகளுக்கு இசைவாகி கண்டுகொள்ளாதிருந்தனர்.
இந்நிலையில், இலங்கையில் நடைற்ற இனப் படுகொலைக்கு உள்ளக விசாரணை ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றக இருக்கின்றது. அதேபோன்று சர்வதேச விசாரணையும் வலுவிழந்து கிடக்கின்றது.
அதன்படி தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் பிரச்சினைக்குப் பிரித்தானிய அரசுதான் தீர்வை வழங்க வேண்டும்.” – என்றார்.
The post செம்மணிப் புதைகுழிக்கு விரைவில் நீதி வேண்டும்! – யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.